Published:Updated:

``இப்பவும் அவர்தான் என் கைபிடிச்சு அழைச்சிட்டுப் போறார்" - நெகிழும் கே.பாலசந்தர் மேனேஜர் மோகன்!

 கே.பாலசந்தர்
News
கே.பாலசந்தர்

''கடைசி நாள்கள்லேயும் அவர் ஒரு முழுக்கதைக்கான ஸ்கிரிப்ட்டும் ரெடி பண்ணி வச்சிருந்தார். அவர் அதைப் படமாக்கறது பத்தித்தான் பேசுவார். அதுல எனக்கும் ஒரு கேரக்டர் வச்சிருந்தார். 'எனக்கு அப்புறம் உன்னை ஒருத்தன்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போறேன்'னு சொன்னார்...''

தமிழ் சினிமாவின் ஐகான்களில் ஒருவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களின் வாசல் கதவைத் திறந்து வைத்தவர். வழக்கமான பாதையில் போய்க்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் திரைக்கதை, படமாக்கும் முறைகளில் அதிரடியாக மாற்றம் செய்தவர். பா.வரிசை இயக்குநர்களில் தனிச்சிறப்பு பெற்றவர். அவரது ஏழாவது ஆண்டு நினைவு தினம் இன்று. கே.பி-யின் மேனேஜராக 27 ஆண்டுகளாகக் கூடவே பயணித்த மோகனிடம் பேசினேன்.

''கே.பி.சார் இல்லாததால தனிமரமாகிட்டேன். என் அம்மா, அப்பா கூட இருந்த வருஷங்களைவிட அவரோடுதான் அதிக ஆண்டுகள் இருந்திருக்கேன். அவரை நான் ரொம்பவும் நேசிச்சேன். அவரும் என்னை அதிகமா நேசிச்சார். சாதாரண மதுரைவாசியா இருந்த நான் ஒரு முழு மனுஷனாக இன்னிக்கு இருக்க அவர்தான் காரணம். இன்ச் பை இன்ச் ஆக என்னைச் செதுக்கினது அவர்தான். சினிமாக்காரனுக்குப் பொண்ணு கொடுக்காத காலத்துல, எனக்குத் திருமணம் செய்து வச்சு, இன்னிக்கு நான் குடும்பமா சந்தோஷமா வாழுறதுக்கு அவர்தான் காரணம்.

மோகனுடன் கே.பாலசந்தர்
மோகனுடன் கே.பாலசந்தர்

என்னோட சொந்த ஊர் மதுரை. அங்கே பட விநியோகஸ்தர்கள் ஜெகதீஷன், முருகேஷன் இவங்களோட வெற்றிவேல் மூவீஸ்ல வேலை பார்த்துட்டிருந்தேன். மதுரை ஏரியாவுல கே.பி.சாரோட படங்கள் மட்டும்தான் அவங்க டிஸ்ட்ரிபியூட் பண்ணுவாங்க. அப்ப 'வேலைக்காரன்', 'புன்னகை மன்னன்', 'மனதில் உறுதி வேண்டும்'னு பல படங்களோட நூறாவது நாள் விழாக்களுக்கோ, இல்ல லொகேஷன் பார்க்கவோ கே.பி.சார், பிரமிட் நடராஜன் சார், அனந்து சார்னு இவங்க மூணு பேரும் மதுரை ஏரியாக்களுக்கு வரும்போது அவங்கள விமான நிலையத்திலோ அல்லது ரெயில் நிலையத்திலிருந்தோ பிக்அப் பண்றது, அவங்களுக்குத் தேவையான உதவிகள் செய்யறது என் வேலை. என்னொட சுறுசுறுப்பும், பழகுற பாங்கையும் பார்த்து கே.பி.சார் என்னை அவர் கூட கூப்பிட, நானும் மறுக்காமல் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். நான் அக்கவுண்டன்ஸி படிச்சிருந்தேன். என் கையெழுத்தும் நல்லா இருந்ததால, ஆபீஸ்ல அக்கவுண்ட்ஸும் பார்த்துட்டிருந்தேன். மது, புகைன்னு எந்தப் பழக்கமும் இல்லாததால ஒரு கட்டத்துல என்னைத் தனிப்பட்ட உதவியாளராகவே ஆக்கினார். சினிமா தவிர நூல்வெளியீடு, பட விழாக்கள்னு அவரோட நிழலாகவே கூடப் போவேன் வருவேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவரோட 'கல்கி' படத்துல ஒரு பெண் உளியை வச்சு தன்னைத் தானே செதுக்கும் சிலை வரும். அப்படித்தான் என்னையும் சொல்லணும். மதுரையில கரடுமுரடான குணத்தோட இருந்தவன், 'எப்படிப் பேசணும்? யார்கிட்ட எப்படிப் பழகணும்? நடிப்புனா என்ன?’ன்னு ஒவ்வொண்ணையும் கத்துக்கொடுத்தார். 'சுவர்ல கை வைக்காதே... புத்தகம் தலைகீழா இருக்கு. நேரே வை...’ இப்படி ஒவ்வொரு நொடியும் என்னை ஒழுங்குபடுத்தியிருக்கார். 'ஒரு வீடு இரு வாசல்'ல இருந்து என்னை நடிக்கராகவும் ஆக்கினார். அவரோட எல்லாப் படங்கள்லேயும் என்னை நடிக்க வச்சு அழகு பார்ப்பார். நள்ளிரவுல ஷூட் முடிச்சிட்டு அவர் வீடு திரும்பும் போது, அவரோட நானும் சாப்பிடாம இருப்பேனேன்னு ராஜம் அம்மாவும் (பாலசந்தரின் மனைவி) எனக்கு பை நிறைய பழங்கள் கொடுத்தனுப்புவாங்க.

மோகனுடன் கே.பாலசந்தர்
மோகனுடன் கே.பாலசந்தர்

தயாரிப்பாளர் தாணு சாரின் தூண்டுதலால் கே.பி.சாரே அவரோட மருமகள், சம்பந்தியோட சேர்ந்து எனக்குப் பொண்ணு பார்த்து, கல்யாணம் பண்ணி வச்சார். அவரோட தலைமையில அவரோட மொத்தக் குடும்பமும் சேர்ந்து எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க. என் கல்யாணப் பத்திரிகையே அவரோட லட்டர் ஹெட்ல அவர் கைப்பட எழுதினதுதான். அதை இன்னமும் பொக்கிஷமா பாதுகாத்து வச்சிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் கிடைக்க, 'எல்லாம் உன் வீட்டம்மா வந்த நேரம்டா'னு சந்தோஷம் பொங்கச் சொல்லியிருக்கார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் இறக்கறதுக்கு ஒரு சில வருஷத்துக்கு முன்னாடி உடல்நலக்குறைவால அவதிப்பட்டார். அந்த டைம்ல அவரோட மகன் கைலாசம் சாரும் இறந்துட்டதால, கே.பி.சார் மனசு உடைஞ்சிட்டார். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும்போதெல்லாம் கூடவே இருப்பேன். அவருக்கு வில் பவர் அதிகம்னால சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புவார். அப்படித்தான் கடைசியா அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், விரைவில் வீடு திரும்பிடுவார்னு நினைச்சேன். கடைசி நாள்கள்லேயும் அவர் ஒரு முழுக்கதைக்கான ஸ்கிரிப்ட்டும் ரெடி பண்ணி வச்சிருந்தார். அவர் அதைப் படமாக்கறது பத்தித்தான் பேசுவார். அதுல எனக்கும் ஒரு கேரக்டர் வச்சிருந்தார். 'எனக்கு அப்புறம் உன்னை ஒருத்தன்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போறேன்'னு சொன்னார்.

மோகனுடன் கே.பாலசந்தர்
மோகனுடன் கே.பாலசந்தர்

ஆனா, யார்கிட்ட அந்தப் பொறுப்பைக் கொடுத்துட்டுப் போயிருக்கார்னு அவர் என்கிட்ட சொல்லல. நானும் கேட்கல. அவர் இறந்துபோன அந்த நொடியில் மருத்துவர்களோட சேர்ந்து அறையில நானும் இருந்தேன். கே.பி.சார் உயிர் பிரிந்த சில மணி நேரத்திற்குள், விஷயம் கேள்விப்பட்டு கருணாநிதி அவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினார். கே.பி.சார் இறந்த ஒன்றரை வருஷமா நான் வெளியே எங்கும் போகாம வீட்லேயே அடைஞ்சு உடைஞ்சு கிடந்தேன். அப்பத்தான் சமுத்திரக்கனி சார் கூப்பிட்டு, 'மோகன், டைரக்டர் என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார். அவருக்குப் பிறகு உன்னைப் பார்த்துக்கற பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்கார்'னு சொல்லவும் நெகிழ்ந்துட்டேன். நான் எங்கே போனாலும் அவர் கையைப் பிடிச்சிட்டுப் போவேன். இப்ப அவர் இல்லைன்னு நினைக்கல. அவர்தான் இப்பவும் என் கையைப் புடிச்சு அழைச்சிட்டுப் போறார்னு நினைக்கறேன்'' என நெகிழ்ந்து உருகுகிறார் மோகன்.