சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மூன்று மொழிகள்... முப்பது யானைகள்...

ராணா
பிரீமியம் ஸ்டோரி
News
ராணா

“பெண்யானைகள் மட்டும்தான் கூட்டமா போகும். கூட்டத்துல ஒரு யானையை அதுங்களே தலைவரா நிர்ணயிக்கும்.

“ ‘கும்கி’க்காக யானைகள் பத்தித் தெரிஞ்சுக்க நிறைய அலைஞ்சேன், படிச்சேன். அப்போ அஸ்ஸாம்ல காஸிரங்கான்னு ஒரு காட்டுப் பகுதியில கார்ப்பரேட் டவுன்ஷிப் கட்ட வேலைகள் போய்க்கிட்டிருந்தது.

யானைகள் வந்துபோகும் தாழ்வாரப் பகுதியில சுவரெல்லாம் கட்டிட்டாங்க. அதை உடைக்கணும்னு கிட்டத்தட்ட எட்டு வருஷமா ஒருத்தர் போராடுறார்னு தெரியவந்தது. அந்த காம்பவுண்ட் கட்டியதால முப்பது யானைகள் அநாதைகள் ஆகிடுச்சு. நமக்கு ஒரு பிரச்னைனா பீச்ல உட்காந்திடுறோம், போராட்டம் பண்றோம். ஆனா, அதுங்க என்ன பண்ணும்? யாரும் கண்டுக்காத அந்தப் பிரச்னையைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். இன்னொரு பக்கம், ஜாதவ் பயாங்னு ஒருத்தர் பிரம்மபுத்ரா நதிக்கரை பக்கத்துல தரிசா கிடந்த பூமியில விதைப்பந்துகளைத் தூவி 1300 ஏக்கர் காட்டை தனி மனிதனா உருவாக்கியிருக்கார். அவரையும் காடுகளின் குறுக்கே சுவர் கட்டியதை இடிக்கச் சொல்லிப் போராடுன ஒருத்தரையும் சேர்த்துதான் ‘காடன்’ உருவானான்” எனப் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

“யானைகளோடு தொடர்ந்து பயணிப்பது எப்படி இருக்கு?”

“பெண்யானைகள் மட்டும்தான் கூட்டமா போகும். கூட்டத்துல ஒரு யானையை அதுங்களே தலைவரா நிர்ணயிக்கும். அத்தை, மாமியார், சித்தின்னு அதுங்களுக்குள்ள உறவுமுறைகள் இருக்கு. கன்றுகளை ஆறு மாசம் வரைக்கும்தான் யானை தன்னோடு வெச்சிருக்கும்.

ராணா
ராணா

அதுக்குப் பிறகு, துரத்தி விட்டுடும். லாரன்ஸ் ஆண்டனின்னு ஒருத்தர் ‘Elephant Whisperer’ங்கிற புத்தகத்தை எழுதியிருக்கார். ஆப்பிரிக்காவுல பிரைவேட்டா பார்க் அமைச்சு சில யானைகளைப் பார்த்துக்கிட்டார். அதுங்க கூடவே நடக்கிறது, சாப்பாடு கொடுக்கிறது, அதுங்க கூட அதிக நேரம் செலவழிக்கிறது, அதுங்களுக்கு மியூசிக் வாசிச்சுக் காட்டுறதுன்னு அந்த யானைகள் கூட்டத்துக்குள்ள தன்னைச் சேர்த்துக்க அவ்ளோ மெனக்கெட்டிருக்கார். ஒருவழியா அதுங்களுக்கும் இவரைப் பிடிச்சுப்போய் அன்பு காட்ட ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம் சேர்த்துதான் ராணா கதாபாத்திரத்தை எழுதினேன்.”

ராணா
திருப்திகரமா நடிச்சார்...

“ராணா தமிழ் பேசியிருக்காரா... ஸ்பாட்ல அவர் எப்படி?”

“ ‘காடன்’, ‘ஆரண்யா’, ‘ஹாத்தி மேரா சாத்தி’ன்னு மூணு மொழிகள்ல வர்றதுனால ஒவ்வொரு ஷாட்டும் மூணு மொழியில டயலாக் பேச வெச்சு எடுக்க வேண்டியதா இருந்தது. தெலுங்கு டயலாக்கை ரெண்டு டேக்ல முடிச்சுடுவார் ராணா. தமிழும் இந்தியும் நிறைய டேக் போகும். ஆனால், திருப்திகரமா நடிச்சுக் கொடுத்தார்”

“ராணா, விஷ்ணு, புல்கித் சாம்ராட்னு நடிகர்களை எப்படி முடிவு பண்ணுனீங்க?”

“காடுகள் சார்ந்தவன், வளர்ந்த மோக்லினு இந்த கேரக்டர் உருவாகும்போது தனித்துவமா தெரியணும். பார்த்தா ஆர்ட்டிஸ்ட் ஃபீல் வரக்கூடாது. அதே சமயம், பிசினஸும் பாதிக்கக்கூடாதுன்னு யோசிக்கிறப்போ ராணா மைண்டுக்கு வந்தார். ‘பாகுபலி’யில அவர் நடிச்ச கதாபாத்திரமும் அவர் இந்தப் படத்துக்குள்ள வர முக்கிய காரணமா இருந்தது. விஷ்ணு விஷாலுடைய கேரக்டர் பெயர் மாறன். சுவர் கட்டும்போது மற்ற யானைகள சமாளிக்க ஒரு கும்கி யானையை வரவைப்பாங்க.

ராணா
ராணா

அந்த யானைகூட வர்றவன்தான் மாறன். கார்ப்பரேட் அனுப்பிய ஆள். அவனுக்கான பயணமும் படத்துல இருக்கும். ஒரு கட்டத்துல இயற்கைக்கு எதிரா இருக்கோம்னு தெரியவந்து மறைமுகமா காடனுக்கு சப்போர்ட் பண்ணுவான். இந்திக்கு நிறைய ஆடிஷன் பண்ணிப் பார்த்த பிறகுதான், புல்கித் சாம்ராட் சரியா இருப்பார்னு தோணுச்சு. மூணு மொழியிலும் ஜோயா ஹுசைன், ஸ்ரேயா பில்குவான்கர்னு ரெண்டு ஹீரோயின் நடிச்சிருக்காங்க. இதுல ஸ்ரேயா பத்திரிகையாளரா வருவாங்க, ஜோயா பழங்குடியினப் போராளிப் பெண்ணா வருவாங்க.”

``பிரபு சாலமன் படம்னாலே இமான் இருப்பாரே! இந்த முறை ஏன் பாலிவுட் இசையமைப்பாளர் ஷாந்தனு மொய்த்ரா?’’

“இந்தப் படம் முதல்ல இந்திப் படம்னுதான் ஒப்பந்தமாச்சு. அப்புறம்தான், ஏன் தமிழ், தெலுங்குல பண்ணக்கூடாதுன்னு நினைச்சோம். இந்திப் படம்னு மட்டும் போகும்போது ஷாந்தனு மொய்த்ரா படத்துக்குள்ள வந்தார். இல்லைனா, நான் இமானைக் கூப்பிட்டிருப்பேன். தவிர, இதுல பாடல்கள் பெருசா கிடையாது.”

“பல மொழிப்படங்கள் எடுத்து முடிக்கிறதே சவால். இதுல 30 யானைகள் வேற. எப்படிச் சமாளிச்சீங்க? ஸ்பாட் எப்படி இருந்தது?”

“படத்துல வொர்க் பண்ணுனவங்க எல்லோரும் யானைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைச்சு வொர்க் பண்ணினோம். அதுங்களுக்குத் தகுந்த மாதிரி எங்க வேலைகளை மாத்திக்கிட்டோம். தாய்லாந்துல யானைகளை ஷூட்டிங்ல பயன்படுத்த டைமிங் இருக்கு. காலையில ஆறு மணி முதல் பதினொரு வரை, சாயந்தரம் மூணு மணிக்கு மேலதான் குடுப்பாங்க. காரணம், அதிக வெயில்ல அதைச் சிரமப்படுத்தக்கூடாது. வியர்வைச் சுரப்பி இல்லாத மிருகம்.

அதனால அடிக்கடி அதுங்க மேல தண்ணி அடிச்சு குளிர்ச்சியாவே வெச்சிருக்கணும். ராணாவுடன் இருக்கிற அந்த லீடர் யானையின் பெயர் மியா, தாய்லாந்து யானை. இதுதான் அந்தக் கூட்டத்துக்குத் தலைவன். மியாவை சமாளிக்கிறது பெரிய சவால். ஃப்ரேம் செட் பண்ணிட்டு அதனுடைய அசைவுக்காகக் காத்திருப்போம். ஆனா, ஃப்ரேமை விட்டே போயிடும். பக்கத்துல கேமரா போனா தட்டிவிட்டிடும். ஆனா, விஷ்ணு விஷால் யானை உன்னிக்கிருஷ்ணன், மியாவுக்கு நேரெதிர். சொல்ற பேச்செல்லாம் கேட்டுச்சு. செம ஃபிரெண்ட்லி.”

“இவ்ளோ பெரிய படத்துல அறிமுக ஒளிப்பதிவாளர் அசோக் குமார், அறிமுக எடிட்டர் புவன் என்று புதுமுகங்களைக் கொண்டுவருவதற்குக் காரணம் என்ன?”

“யானைகள் பின்னாடி கேமராவைத் தூக்கிட்டு ஓடணும். அதை அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர்கள்கிட்ட சொல்லமுடியாது. அதனால என்னுடைய பிம்பமா ஒருத்தர் இருந்தா சரியா இருக்கும்னு தோணுச்சு. என் முதல் படத்துல இருந்து அப்படித்தான். என்னுடைய நிழல் மாதிரி அவங்க இருந்தால்தான் என்னால நினைச்சதைப் பண்ண முடியும். எடிட்டிங்கும் அப்படித்தான். நினைச்சு நினைச்சு மாத்துவேன். அதனால எனக்கு ஃபிரெண்ட்லியா ஒருத்தர் இருக்கணும்.”