சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“ராஜமெளலிக்கு சித்த மருந்துகள் அனுப்பினேன்!”

 சமுத்திரக்கனி
பிரீமியம் ஸ்டோரி
News
சமுத்திரக்கனி

கேப்டன் மாதிரியான ஈரம் நிறைஞ்ச மனுசன்... வாய்ப்பே இல்லை.

“இந்த லாக்டெளன் நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்கு. திடீர் மரணம்னா என்ன, வேலையே இல்லைன்னா நாம என்ன ஆவோம்னு கத்துக் கொடுத்திருக்கு. காசு வெச்சிருக்குறவன், இல்லாதவன்னு எல்லாருமே ஒண்ணுதான்னு கத்துக்கொடுத்திருக்கு. இயற்கை ரீ செட் பட்டனை எப்போதாவது அமுக்கிருச்சுனா, எல்லாரும் பின்னாடி போயிட்டு திரும்ப வரணும்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். இப்படியொரு ரீ செட் பட்டனாத்தான் லாக்டெளனைப் பார்க்குறேன்” என ரிலாக்ஸாக. பாசிட்டிவாகப் பேச்சைத் தொடங்குகிறார் சமுத்திரக்கனி.

“உங்கள் குரு பாலச்சந்தரின் இழப்பை எப்போதெல்லாம் உணர்வீங்க?”

“ ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் முதன்முதலா விவேக் சார்கூட ஒரு சீன்ல நடிக்க வெச்சார் கே.பி. சார். இன்று முழுநேர நடிகனா மாறியிருக்கேன்னா அதுக்கான விதை அவர் போட்டது. நல்ல நண்பனா, குருவா, தகப்பனா எல்லாமுமா நிறைவா இருந்தவர் அவர். இப்பக்கூட அவர் உயிருடன் இல்லைன்னு எனக்குத் தோணலை. வீட்டுக்குப் போனா பார்த்துப் பேசிட்டு வரலாம்னுதான் தோணுது. அந்த அளவுக்கு இன்னமும் என்னுடன் இணைஞ்சிருக்கார்.”

``வாலியை டைரக்‌ஷன் பண்ணுன அனுபவம்?’’

‘` ‘அண்ணி’ மெகா சீரியலுக்காக நடிக்கக் கேட்டப்ப, ‘சின்னப் பசங்ககிட்டலாம் நடிக்க முடியாது. நீ டைரக்‌ஷன் பண்ணுனா நடிக்குறேன்’னு பாலசந்தர் சார்கிட்ட சொல்லிட்டார். ஸ்பாட்டுக்கு வாலி மற்றும் டைரக்டர் சார் ரெண்டு பேரும் சேர்ந்து வந்தாங்க. ரெண்டு நாள் ஷூட்டிங் முடிஞ்சப்போ டைரக்டர் சார்க்கு காய்ச்சல் வந்திருச்சு. அதனால் அவர் ஷூட்டிங் வரலை. வீட்டில் போய்ப் பார்த்தப்போ ‘டேய், வாலியை ஜாக்கிரதையா கையாளணும். டக்குனு கோபம் வந்திரும்’னார். வாலி சார் ஸ்பாட்டுக்கு வந்தவுடனே, ‘ஷாட் எடுக்க நேரமிருக்கு. வெத்திலை போட்டுட்டு வந்திருங்க’ன்னேன். ‘அப்படியா’ன்னு கேட்டுட்டுப் போயிட்டு வந்தார். அப்புறம், இவரோட ஷாட் மட்டும் எடுத்துட்டு ‘இன்னோரு டைமும் வெத்திலை போடுறதா இருந்தா போட்டுட்டு வாங்க’ன்னேன். அந்தப் பக்கமா போயிட்டு டைரக்டருக்கு போன் பண்ணி, ‘நீ ஹாஸ்பிட்டல் போயிட்டு நேரா வீட்டுக்குப் போயிரு. என்னை கனி நல்லாவே பார்த்துக்குறான். இவன்கிட்டயே நடிச்சிக்குறேன்’னு சொன்னார். அப்புறம் நல்லா பழகிட்டார். திடீர்னு கவிதை சொல்லுங்கன்னு கேட்பேன். ‘கவிதையெல்லாம் காசு கொடுத்தாதான்டா வரும். சும்மாலாம் சொல்ல முடியாதுடா’ன்னு சொல்லிட்டு ஷாட் எடுத்துட்டு இருக்குறப்போ திடீர்ன்னு கவிதை சொல்லிருவார். அவர் ஒரு ஆச்சர்யம்.’’

``விஜயகாந்தை சமீபத்துல பார்த்தீங்களா?’’

‘`கேப்டன் மாதிரியான ஈரம் நிறைஞ்ச மனுசன்... வாய்ப்பே இல்லை. சின்சியரான நடிகர். கேப்டன் மகன் சண்முகபாண்டியனோட ‘மதுரவீரன்’ படத்துல அப்பா கேரக்டர்ல நடிச்சேன். பட பூஜைக்கு கேப்டன் வந்திருந்தார். ரொம்பநாள் கழிச்சு சந்திச்சதால, கஷ்டப்பட்டு நினைவுபடுத்தி அடையாளம் கண்டு ‘நல்லாருக்கியா’ன்னு பேசினார். சின்னச்சின்ன விஷயங்களைக்கூட அவரால் நினைவுபடுத்திக்க முடியலைங்கிறதை என்னால தாங்க முடியல. எப்பேர்ப்பட்ட மனுசன், அவ்ளோ விஷயம் ஞாபகத்தில் வெச்சிருப்பாருங்க. இப்போ உடல்நிலை தேறிவர்றார்னு ஆனந்த விகடன்லதான் படிச்சேன். கேப்டன் மாதிரியான நல்ல மனுஷங்க நிறைய இருக்கணும். அப்பதான் இந்த உலகம் நல்லாருக்கும்‘’

``ராஜமெளலிக்கும் உங்களுக்கும் பிரியமான பிணைப்பு இருக்கே... எப்படி உருவாச்சு?’’

‘` ‘நாடோடிகள்’ தெலுங்குப் படத்தோட ஷூட்டிங்ல இருந்தப்போ தமிழில் படம் பார்த்துட்டு ரவிதேஜாகிட்ட போன் நம்பர் வாங்கிட்டு மெசேஜ் பண்ணுனார். ‘இந்த மாதிரியான டென்ஷனான திரைக்கதை எனக்கு ரொம்பப் புதுசா இருந்தது’ன்னார். ‘மகதீரா படத்தை இப்போதான் பார்த்துட்டு மிரண்டு போயிருக்கேன் சார்’னேன். டின்னர் சாப்பிடக் கூப்பிட்டார். ரெண்டு நாள் கழிச்சு சந்திச்சோம். நடுவுல ஷூட்டிங் ஸ்பாட்ல சில சின்னச் சின்ன சந்திப்புகள். திடீர்னு ஒருநாள் நாக் ஸ்டூடியோ உதயகுமாரன் சார் ஆபீஸ்ல இருந்து, ‘ராஜமெளலி சார் உங்க நம்பர் கேட்டாங்க, கொடுத்திருக்கேன்’னு சொன்னாங்க. அடுத்த சில நொடில ராஜமெளலி சாரின் மகன்கிட்ட இருந்து மெசேஜ் வந்துச்சு. போன்ல ராஜமெளலி சார்கிட்ட பேசினேன். கிளம்பி வரச் சொன்னாங்க. ‘RRR’ பற்றிச் சொன்னாங்க. அதுல ஒரு நல்ல கேரக்டர் பண்ணிட்டிருக்கேன். சாருக்கு, இடையில கொரோனா அறிகுறிகள் இருந்தது. இதனால, இங்கே இருந்து கொஞ்சம் சித்த மருந்துகள் அனுப்பி வெச்சிருந்தேன். ‘எல்லாம் சரியாகிருச்சு. குணமாகிட்டேன். எங்கே இருந்தாலும் நம்ம ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பைப் பகிர்ந்துக்குறோம். இதுவே சந்தோஷமா இருக்கு’ன்னு மெசேஜ் போட்டார். ரொம்ப சந்தோஷமாயிடுச்சு.”

``ஆனந்த விகடன்ல வந்த தொடர் ‘வேள்பாரி’யை ராஜமெளலிகிட்ட கொடுத்ததாச் சொல்லியிருந்தீங்க. படிச்சிட்டாரா?’’

‘`வேள்பாரியைப் படமா பண்ணுனாலே ஆறு பார்ட் வரைக்கும் பண்ணலாம். அற்புதமான விஷயம்’னு சொல்லி, கொடுத்துட்டேன். ஆனா, தமிழில் ஒரு பக்கம் படிக்குறதே ராஜமெளலி சார்க்கு நிறைய டைம் எடுக்கும். கண்டிப்பா படிச்சு முடிச்சுட்டுக் கூப்பிடுவார்.”

``கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’-ல் நடிக்கிறீங்க... என்ன ஸ்பெஷல்?’’

‘`ஷங்கர் சார் ஸ்டைல் என்னன்னா, எடுக்கப்போற சீனை விளக்கி பர்பெக்ட்டா நமக்குள்ள ஏத்திருவார். கேரக்டர் பற்றிச் சொல்லிச் சொல்லி மனசுல பதிய வெச்சிட்டு, ‘உனக்குள்ள இருந்து தி பெஸ்ட் கொடு’ன்னு சொல்லிடுவார். அது ஒரு தனி அனுபவம்!”

“ராஜமெளலிக்கு சித்த மருந்துகள் அனுப்பினேன்!”

``ரொம்ப நல்ல கேரக்டர், பெரிய இயக்குநர்கள் படமெல்லாம் பண்ணிட்டிருக்கீங்க. ஆனா, சில நேரங்களில் உங்களைப் பற்றிய சில மீம்ஸ் வரும்போது அதை எப்படி எடுத்துக்கிறீங்க?’’

‘`ரொம்ப சந்தோஷமா பார்த்தேன். நாம நடிக்குறதுக்கும் இத்தனை கேரக்டர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன். என் பையன்தான் இதெல்லாம் எடுத்து எடுத்துக் காட்டினான். அவனுக்கு வருத்தம்தான். ‘இதெல்லாம் பாசிட்டிவா எடுத்துக்கணும்டா. எவ்வளவு கெட்டப் போட்டு எனக்காக மீம்ஸ் உருவாக்கியிருக்காங்க. அந்த உழைப்பை மதிக்கணும். இதில் நல்ல கெட்டப் இருந்தா அதைப் படத்தில் பயன்படுத்திக்க வேண்டியதுதான்’னு சொன்னேன். சரிதானே?”

``பையனைப் பத்திச் சொல்லிட்டீங்க. உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்க?’’

‘`பையன் ப்ளஸ் டூ முடிச்சிட்டு காலேஜ் போயிட்டார். இவர் ப்ளஸ் டூ முடிக்குறதுக்குள்ள வீடே பெரிய டென்ஷனா இருந்தது. ‘நான் டென்ஷன் ஆக மாட்டேன்டா. அப்பா எப்போவும் கூலா இருப்பேன். நீ எவ்ளோ மார்க் எடுத்தாலும் எனக்கு ஓகே’ன்னுதான் சொன்னேன். ‘79.6 சதவிதம் மார்க் எடுத்திருக்கேன்பா’ன்னு முதல்ல என்கிட்டதான் வந்து சொன்னான். ‘அறுபதுக்கும் நூற்றுக்கும் இடையில எடுத்திருக்க. சரியான மார்க்டா. இந்த மார்க் வாங்குனவனுக்குத்தான் முன்னாடி பின்னாடி இருக்குறவன் வேலை செய்வான்’னேன். பாப்பா 7-வது படிச்சிட்டிருக்கா. என் மனைவி ஜெயலட்சுமி. அக்கா பொண்ணு. என் அம்மாவுக்குப் பிறகு இவங்கதான் எல்லாம். என்னை நல்லாக் கவனிச்சுக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை.’’

``இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகாகூட நடிச்சிட்டு வர்றீங்க, படப்பிடிப்பின் போது தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நீங்களும் போயிருந்தீங்களா?’’

``ஹாஸ்பிட்டல் காட்சி ஷூட்டிங் பண்ணும்போது நான் இல்லை. ஆனா, பார்த்துட்டு வந்து ஜோதிகா பேசின விஷயங்களெல்லாம் உண்மையாதான் இருந்தது. வெறுமன பேச்சோட நிறுத்தாம மருத்துவமனைக்கு நிதியுதவி செய்தது சந்தோஷமான விஷயம். நம்மைச் சுத்தியிருக்கிற விஷயங்களை மாத்துறதிலிருந்துதான் பெரிய மாற்றங்கள் தொடங்குது. அப்படியொரு தொடக்கப்புள்ளியா ஜோதிகாவின் செயலைப் பார்க்கிறேன்.”

“ராஜமெளலிக்கு சித்த மருந்துகள் அனுப்பினேன்!”

``விஜய்க்குச் சொன்ன கதை என்னாச்சு?’’

“ஆக்சுவலி, கதை சொல்லி ரெண்டு வருஷம் ஆச்சு. பண்ணுவோம்னு சொன்னார். சினிமாவும், காலமும் இப்போ நிறைய மாறிக்கிட்டு இருக்கிறதால நாங்க ரெண்டு பேரும் தொடர்பு கொள்ளல. முடிஞ்சா நடக்கலாம். இல்லனா இந்தக் கதையை வேற யாருக்காவது பண்ண வேண்டியதுதான்.’’

``சசிகுமார் டைரக்‌ஷனை மிஸ் பண்ணுறீங்களா?’’

‘`நிச்சயமா மிஸ் பண்ணுறேன். ஆனா இப்போ ஒரு கதை எழுதிட்டிருக்கேன்னு சொன்னார். அநேகமா, டைரக்‌ஷனுக்குத் தயார் ஆகிட்டிருக்கார். டைரக்டர் சசியைப் பார்க்க உங்களைப்போல் நானும் ஆவலா இருக்கேன்.”

அதே டிரேடு மார்க் சிரிப்பு சமுத்திரக்கனியிடமிருந்து.

“ராஜமெளலிக்கு சித்த மருந்துகள் அனுப்பினேன்!”

ல்லு அர்ஜுன், ‘தலைவி’ ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர் அரவிந்த் சுவாமி, வெற்றிமாறன், இரஞ்சித், ஹலிதா... இவர்கள் பற்றியெல்லாம் விரிவாக சமுத்திரக்கனி அளித்த முழுமையான பேட்டியை வீடியோவாகப் பார்க்க - https://bit.ly/CinemaVikatanAV