சினிமா
Published:Updated:

“கமர்ஷியல் படங்கள் எனக்கு சரிப்படாது!”

சீனு ராமசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
சீனு ராமசாமி

எதை நினைச்சு சினிமாக்குள்ள வந்தேனோ அது சாத்தியமாகிருச்சான்னு கேட்டா நிச்சயமா இல்லை.

இயக்குநர் சீனு ராமசாமி கைவசம் முழுமையாய் இரண்டு படங்கள். ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘மாமனிதன்.’ இவற்றை ஓடிடி ரிலீஸ் செய்யப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் சூழலில் அவரிடம் பேசினேன்.

‘‘நான் இயக்குநர் ஆகி 13 வருஷம் ஆகுது. எதை நினைச்சு சினிமாக்குள்ள வந்தேனோ அது சாத்தியமாகிருச்சான்னு கேட்டா நிச்சயமா இல்லை. இப்ப வரைக்கும் எனக்கு என்ன தோணுதோ அதை படங்களாப் பண்ணிட்டிருக்கேன். காலத்துக்கு ஏற்ற மாதிரி என்னையும் புதுப்பிச்சுட்டேதான் வரேன். பாட்டு, சண்டைன்னு சினிமாவுல எதையெல்லாம் தவிர்க்கணும்னு நினைச்சேனோ, அதையெல்லாம் வைக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனா, இப்போ ஓடிடி மாதிரியான தளங்கள் வந்திருக்கறதால, நான் எடுக்க நினைச்ச சினிமாக்களை முயற்சி பண்ணிப் பார்க்கலாங்கிற எண்ணம் வந்திருக்கு. அதனால வந்த வேலை இன்னும் முடியலை” - செம பாசிட்டிவாகப் பேச ஆரம்பித்தார் சீனு ராமசாமி.

“கமர்ஷியல் படங்கள் எனக்கு சரிப்படாது!”

‘`நீண்ட நாள்களா ரிலீஸ் ஆகாம இருந்த உங்களுடைய ‘இடம் பொருள் ஏவல்’ ஆன்லைனில் ரிலீஸ் ஆகுமா?’’

‘‘பேச்சுவார்த்தைகள் நடக்குது. தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்றதுதான் இறுதி. ஓடிடி வருகையால, உலகம் முழுக்க தமிழ் சினிமா போய்ச் சேருது. அப்போ வழக்கமான தமிழ் சினிமாவுக்கான ஃபார்முலாவையெல்லாம் தவிர்த்து உலகத்தரத்தோடு படங்களை எதிர்பார்க்கலாம். என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.”

காயத்ரி,  விஜய் சேதுபதி
காயத்ரி, விஜய் சேதுபதி

‘` ‘மாமனிதன்’ படம் பற்றிச் சொல்லுங்க?’’

‘`ஒரு எளிய மனிதனுடைய வைராக்கியம்தான் இந்த ‘மாமனிதன்’. இந்தப் படத்துக்காக இசைஞானி இளையராஜா அய்யாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் ஒண்ணா வேலை செஞ்சிருக்காங்க. பாடல்களை சமீபத்துல கேட்டேன். பா. விஜய் வரிகளை இளையராஜா பாடிக் கேட்டதும் கண்கலங்கிட்டேன். விஜய்சேதுபதி, காயத்ரி, குருசோமசுந்தரம் இவர்களுடைய நடிப்பு தரமானதா இருக்கும். நிச்சயம் மக்கள் கொண்டாடக்கூடிய படமா இது இருக்கும்.”

“கமர்ஷியல் படங்கள் எனக்கு சரிப்படாது!”

‘`உங்கள் ஹீரோ விஜய் சேதுபதியின் வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?’’

‘`விஜய் சேதுபதி ஒரு நல்ல கலைஞன், நண்பன், புதிய முயற்சிகளைப் பரிசோதித்துப் பார்க்கணும்னு ஆசைப்படுபவர். இன்னும் பல உயரங்களை விஜய்சேதுபதி தொடணும்னு ஒரு நண்பரா நான் விரும்புறேன்.”

சீனு ராமசாமி
சீனு ராமசாமி

‘`விவசாயம், நீர் அரசியல்னு உங்களுடைய படங்களுக்கான கதைக்களங்களை எங்கிருந்து பிடிக்கிறீங்க?’’

`` `கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ங்கற மாதிரியான சிக்கலான கேள்வி இது. ஏதோவொரு புள்ளியிலிருந்து அது தானா ஆரம்பிக்கும். என்னுடைய சொந்த வாழ்க்கையிலிருந்தும் கதைகள் எடுப்பேன். சுத்தி நடக்குற சம்பவங்களில் இருந்தும் எடுப்பேன். அது தானா நடக்குறதுதான்.”

“கமர்ஷியல் படங்கள் எனக்கு சரிப்படாது!”

‘`இவ்வளவு வருஷங்கள் சினிமாவில் இருந்தும் மாஸ் கமர்ஷியல் படங்கள், பெரிய ஹீரோ படங்கள் எதுவும் பண்ணலையே… ஏன்?’’

``இதுவரை நான் எடுத்த படங்களுக்கு மக்கள்கிட்ட இருந்து கிடைக்கிற அன்பும், பாராட்டுமே போதுமானதா இருக்கு. நான் மாஸ் கமர்ஷியல் படங்கள் எடுக்க முற்படுறதுங்கறது எதிர்காத்துல சைக்கிளை அழுத்திட்டுப் போற கதையாதான் இருக்கும். அதனால என் பாதையிலேயே நான் போயிடுறேன். விஜய், அஜித், சூர்யா இவங்களைச் சந்திச்சுக் கதை சொல்லணும்னு தோணும். ஆனா, அதுக்கான முயற்சிகள் எதுவும் எடுத்ததில்லை.’’

“கமர்ஷியல் படங்கள் எனக்கு சரிப்படாது!”

‘`உங்களின் ஒவ்வொரு படத்துக்கும் பெரிய இடைவெளி விழுந்துடுதே?’’

‘`ஒரு படம் தாமதமா ஆரம்பிக்கிறதுக்குப் பல காரணங்கள் இருக்கு. தயாரிப்பாளர்களுடைய தாமதங்கள், காத்திருப்பு இதையெல்லாம் தாண்டி ஒரு நடிகர் படத்தைத் தேர்வு செஞ்சாதான் அதைப் படமாக்க முடியும்.”

சீனு ராமசாமி,  விஜய் சேதுபதி
சீனு ராமசாமி, விஜய் சேதுபதி

‘`பாலுமகேந்திராவின் தாக்கம் உங்கள் படங்களில் இன்னும் தொடர்கிறதா?’’

‘`ஒவ்வொருத்தருக்குள்ளயும் கிரியேட்டிவிட்டியைத் தூண்டுறது, அறம் சார்ந்த விஷயங்களில் நமக்கே தெரியாம நம்மை மாத்துறதுன்னு அவருடைய தாக்கம் ரொம்பவே அதிகம். என்னுடைய மொபைல் நம்பர், வண்டி நம்பர், அக்கவுன்ட் நம்பர்னு எது கேட்டீங்கன்னாலும் எனக்குத் தெரியாது. ஆனா, நம்பர் 14, இந்திராகாந்தி தெரு, சாலிகிராமம்கிறது மட்டும் எனக்கு மறக்கவே மறக்காது. எனக்கான முதல் அடையாளம் கொடுத்தது அதுதான். இயக்குநரா அவருடைய ஆளுமையைப் பக்கத்துல இருந்து பார்க்கிற பாக்கியம் எனக்குக் கிடைச்சது. அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்ட முக்கியமான பாடம்னா, ‘நீ நம்புற ஒரு விஷயத்தை எக்காரணம் கொண்டும் சமரசம் பண்ணிக்காத. அப்படி சமரசம் பண்ணினா அது உன்னுடைய சினிமாவே கிடையாது’ என்பதைத்தான். இந்த ஒரு விஷயத்தைத்தான் நான் இன்னிக்கு வரைக்குமே என்னுடைய படங்களில் பண்ணிட்டிருக்கேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சது கவிதையும் கலையும்தான். அவர் எவ்வளவு கோபமா இருந்தாலும் அவரை சாந்தப்படுத்தறதுக்கு ஒரு நல்ல கவிதை போதும். ‘ஏண்டா லேட்டு?’னு அவரு கோபமா ஆரம்பிக்கும்போது, ‘ஒரு நல்ல கவிதை படிச்சேன் சார்’னு சொன்னா அமைதியாகிடுவார். இந்த வாழ்வுங்கறதே அவர் தந்த தானம்தான்.”