Published:Updated:

``விஜய் படம் வர்றப்பலாம், அவர் படம் போட்ட டி-ஷர்ட் வந்திடும்... ஏன் தெரியுமா?!’’ - குஷ்பு

சினிமா, சீரியல், அரசியல்... என ஆல்ரவுண்டராக வலம்வரும் நடிகை குஷ்புவை சந்தித்துப் பேசினோம்.

kushpoo
kushpoo

உங்கள் சினிமா கரியரில் 'வருஷம் 16', 'சின்னத்தம்பி' படங்கள் தந்த அனுபவம்?

"உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டுமா, முதல்ல 'வருஷம் 16' படத்துல கார்த்திக் சாருக்கு ஜோடியா நடிக்க ஒப்பந்தம் செய்தது, நடிகை நிரோஷாவைத்தான். என்னை இரண்டாவது சாய்ஸாதான் வைத்திருந்தனர். அப்போ, கமல் சார் படத்துல நடிக்கிறதுக்கு நிரோஷா ஒப்பந்தமாகியிருந்ததால, 'வருஷம் 16' படத்துல நடிக்க முடியாம போச்சு. அதனால, நான் நடிச்சேன். அந்தப் படத்துல துளிகூட காமம் தெரியாது. படம் முழுக்க கண்ணன், ராதிகா கேரக்டர்களோட தூய்மையான காதல் மட்டும்தான் பளிச்சுனு தெரியும்.

அடுத்ததா, 'சின்னத்தம்பி' படத்துல பிரபு சார் ஜோடியா நடிக்கிறதுக்கு முதலில் கனகாவிடம் பேசினார்கள். அவர் வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததால் நடிக்கவில்லை. என்னை வாசு சார் ஒப்பந்தம் செய்தபோது, 'ஐயோ என்படம் என்னவாகப்போகுதோ; இந்தி பெண்ணை தமிழ் பொண்ணா தாவணி போட்டு நடிக்க வைக்கப்போறாங்களே' என்று கலங்கிப்போய் நின்னார், தயாரிப்பாளர் கே.பாலு. அப்போ எனக்குத் தமிழ் சரியா பேசத் தெரியாது. ஒரு காட்சியில் ராதாரவி அண்ணன்கிட்ட 'நான் முதல்ல பார்த்த ஆம்பிளை சின்னத்தம்பி; நான் முதல்ல சுத்துனது சின்னத்தம்பிகூடத்தான்' வசனத்தைத் தப்பு தப்பாப் பேசிட்டேன். அப்போ, என்னை ரொம்பவே திட்டினார் ராதாரவி. பிறகு, 'சின்னத்தம்பி' வெளியானதும் ஸ்கிரீன்ல என் நடிப்பைப் பார்த்த ரவி அண்ணா போன் செய்து பாராட்டினார். என் சினிமா கரியர்ல 'வருஷம் 16' ராதிகா, 'சின்னத்தம்பி' நந்தினி இல்லைன்னா, குஷ்பு என்ற ஒருத்தி இல்லை."

உங்ககூட நடித்த சக நடிகைகளில் உங்களைக் கவர்ந்தவர் யார்?

குஷ்பு
குஷ்பு

"என் அண்ணன் தீவிரமான கெளதமி ரசிகன், வெறியன். என்னை அவங்ககூட கம்பேர் பண்ணிக் கலாய்ப்பான். அப்போ வெளிவந்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்துல இடம்பெற்ற 'வாலிபத்தின் காதலுக்கு ஜே' பாடல் ரொம்பப் பாப்புலர். எனக்கு முன்னாடி 'குரு சிஷ்யன்' படத்துல கெளதமி அறிமுகமானாங்க. அதுக்கப்புறம், 'தர்மத்தின் தலைவன்' படத்துல நான் அறிமுகமானேன். எங்க ரெண்டுபேருக்கும் இடையில் ஆரோக்கியமான போட்டி இருந்தது."

நடிகை, மனைவி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய், சினிமா தயாரிப்பாளர், அரசியல்வாதி... இத்தனை பொறுப்புகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?

"எனக்குக் கல்யாணம் ஆனவுடனேயே சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டேன். இதுவரை 20 வருடத்தில் 20 படங்களில்கூட நடிக்கவில்லை. சின்னத்திரையில் மட்டும் நடித்து வருகிறேன். காரணம், சீரியல் ஷூட்டிங் எப்போதும் சென்னையில்தான் நடக்கும். காலை ஒன்பது மணிக்கு ஷூட்டிங் வர்றேன்; ஆறு மணிக்கு வீட்டுக்குப் போயிடுறேன். ஞாயிற்றுக்கிழமை அன்னைக்குக் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஷூட்டிங், நிகழ்ச்சிகள், ஏன் அரசியல் கட்சிக் கூட்டம் இருந்தாகூட போகமாட்டேன். குடும்பம், சீரியல், அரசியல்னு தனித் தனியா நேரத்தைப் பிரிச்சுக்கிட்டு செயல்படுறேன். சினிமா தயாரிப்பாளர் நிலைமை படுமோசம். சினிமாவை ரிலீஸ் செய்து அதில் லாபம் பார்ப்பதுதான் பெரிய சங்கதி."

`அ.தி.மு.க ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை!' - கொதிக்கும் குஷ்பு

நீங்கள் யாருக்கு ரசிகை, உங்கள் மகள்கள் யாருக்கு ரசிகைகள்?

குஷ்பு
குஷ்பு

"நான் தீவிரமான அரவிந்த்சாமி ரசிகை. சொன்னா நம்பமாட்டீங்க. அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்குறதுக்கு நான்கு வருடம் காத்திருந்தேன். என் அண்ணன் அரவிந்த்சாமியோட நெருங்கிய நண்பன். பலமுறை 'என் தங்கச்சி உன்னோட தீவிர ரசிகை'ன்னு சொல்லியிருக்கார். ஏதோ கிண்டல் பண்றதா நினைச்சுக்கிட்டு, அரவிந்த்சாமி நம்பவே இல்லை. ஒருமுறை நான் நேரில் பார்த்தப்போதான், நான் நிஜமாவே அவரோட தீவிர ரசிகைன்னு புரிஞ்சுக்கிட்டு, ஆட்டோகிராப் போட்டார். இப்போவும் அதைப் பத்திரமா வெச்சிருக்கேன்.

என் மகள்கள் இருவரும் தீவிர விஜய் ரசிகைகள். விஜய் படங்கள் ரிலீஸாகும்போது, அவர் படம் பிரின்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்டை வெளியிடுவார்கள். ஒவ்வொரு முறை விஜய் படம் ரிலீஸாகும்போதும் மறக்காமல் என் வீட்டுக்கு அவர் படம் பொறித்த இரண்டு டி-ஷர்ட்டுகளை அனுப்பிவிடுவார் விஜய். ஒருமுறை விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று இருவரும் அடம்பிடிக்க, அவருக்குப் போன் செய்து விவரத்தைச் சொன்னேன். 'அக்கா நான் ஃபிலிம்சிட்டியில இருக்கேன், அழைச்சுட்டு வாங்க' என்று சொன்னார். அவரைப் பார்க்கப் போகும்போது, அவர் படம் பொறித்த டி-ஷர்ட்டை போட்டுக்கொண்டு வந்தார்கள் என் மகள்கள். விஜய்யைப் பார்த்தவுடன் இருவரும் வெட்கப்பட்டு என் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொண்டனர். என் மகள்கள் போட்டிருந்த டி-ஷர்ட்டைப் பார்த்து, விஜய் நெகிழ்ந்துவிட்டார்.