`` `மாஸ்டர்'ல விஜய் சாருக்கு பல மாஸ் மொமன்ட்ஸும், வசனங்களும் இருக்கு!'' - வசனகர்த்தா பொன்பார்த்திபன்

தமிழ் சினிமா உலகில் மீண்டும் துளிர் விட்டிருக்கும் எழுத்தாளர் வர்க்கத்தின் புதிய நம்பிக்கை, பொன் பார்த்திபன். `உப்பு கருவாடு' படத்தில் தொடங்கிய எழுத்தாளர் பயணம், `காற்றின் மொழி', `கைதி', `மாஸ்டர்' என மாஸ் காட்டுகிறார். அவரிடம் பேசினேன்.
எந்தப் புள்ளியில் தொடங்கியது இந்த எழுத்தாளர் பயணம்?

``பாக்யராஜ் சார் ஒரு எழுத்தாளரா இருந்து இயக்குநரா மாறினதுக்கு முன்ன வரையிலும் எழுத்தாளர் வேற, இயக்குநர் வேறங்கிற பேதம் இருந்தது. தன்னை எழுத்தாளர்னு சொல்லிக்குற தனி வர்க்கம் இருந்தது. ஆனால், நான் சினிமாவுக்குள் வரும்போது அப்படியான பேதங்கள் இல்லை. இயக்குநர் ஆகணும்ங்கிற ஆசையோடுதான் சினிமாவுக்குள் வந்தேன். எனக்குள்ளே இருந்த எழுத்துதான், அந்த நம்பிக்கையையும் கொடுத்ததுனு சொல்லலாம். இயக்குநர்கள் ஹரி, ராதாமோகன் கிட்ட வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. நிறைய கத்துக்கிட்டேன். பிறகு, நான் இயக்குவதற்கான வாய்ப்பு என்னவோ தள்ளிப்போயிட்டே இருந்தது. அந்த நேரங்கள்ல `படம் கிடைக்கலை'னு புலம்பிக்கிட்டு இருக்க நான் தயாரா இல்ல. ஸ்பாட்ல அசோஸியேட் லெவலைத் தாண்டி வேற என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது, எழுத்தாளரா முயற்சி பண்ணலாம்ங்கிற சிந்தனை பிறந்தது. சில வருஷங்களுக்கு முன்னாடி, பாஸ்கர் சக்தி சார் ஆனந்த விகடனுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவருக்குப் பிடித்த சினிமா எழுத்தாளர்கள் யார் என ஒரு கேள்வி. சில பெயர்களோடு ராதாமோகன் படத்தில் எழுதும் அனைவரும்னு சொல்லியிருந்தார். அது எனக்கொரு புது நம்பிக்கையைக் கொடுத்தது. ராதாமோகன் சார்கிட்ட, `நான் சினிமாவுக்கு எழுதணும்னு ஆசையா இருக்கு'னு கேட்டேன். `நீ நல்லாதானே எழுதுவ, தாரளமா எழுது'னு அவர் உடனே சொன்னதில் கிடைத்ததுதான் `உப்பு கருவாடு' வாய்ப்பு."
சினிமாவில் எழுத்தாளர்களின் இடம், இப்போது எந்த நிலையில் இருக்கு?

``இயக்கம், எழுத்து இரண்டும் வெவ்வேறு கலைங்கிறதை நம் இளம் இயக்குநர்கள் புரிஞ்சு வெச்சிருக்காங்க. அதனால், எழுத்து திறமை உள்ளவங்க உதவி இயக்குநரா வாய்ப்பு தேடாமல், எழுத்தாளராவே தேடுங்க. ஹாலிவுட்ல, மல்லுவுட்ல, டோலிவுட்ல அப்படித்தான் இருக்காங்க. இது முழுமையா நடந்துச்சுன்னா, நம் ஊர்ல பலதரப்பட்ட சினிமாக்கள் வருவதற்கு வழி வகுக்கும். முதல் படத்தை பிரமாதமா இயக்கிட்டு, இரண்டாவது படத்தில் கோட்டைவிடும் கொடுமைகள்லாம் நடக்காது. இரண்டு வேலையையும் இழுத்துப்போட்டு பார்க்குற கஷ்டமும் இருக்காது. எழுத்தாளருக்கு, நல்ல எழுத்தைக் கொடுக்கிற வேலையும், இயக்குநருக்கு அதைச் சிறப்பா இயக்குற வேலையும் மட்டும்தான் இருக்கும். எழுத்தாளர்களின் நிலை உயர்ந்துட்டே வருது, கூடவே தமிழ் சினிமாவின் நிலையும் உயரும்."
இன்றைய காலகட்டத்தில் கலை ரீதியா ஒரு சினிமா எழுத்தாளருக்கு என்னென்ன சவால்கள் உள்ளன?

``இன்னமும் ஹீரோ என்ட்ரி, ஒரு ஃபைட், ஒரு சாங் ஆடிட்டு இருக்கும்போது ஹீரோயின் என்ட்ரி, கண்டதும் காதல், பிறகு வில்லன் என்ட்ரினு படம் எடுக்கவே முடியாது. இந்த வரிசைக்கிரமம் மக்களுக்கு அலுத்துப்போச்சு. தமிழ் சினிமாங்கிறதே தனி ஜானர்தான். இலையில் உப்பு, கூட்டு, பொறியல், பாயசம், அப்பளம், ஸ்வீட்னு இருக்குறமாதிரி படமும் கலவையா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. ஆனால், இந்தத் தலைமுறை ரசிகர்கள், படம் ஒரே ஜானரில் இருந்தாலும் ரசிக்க தயாரா இருப்பது நிரூபணமாகிட்டு வருது. ரசிகர்கள்தான், படைப்பாளியை விட அதிக வீடியோ ஃபுட்டேஜ்கள் பார்க்குறாங்க. 3 நிமிட வீடியோவைக் கூட முதல் 30 செகண்டில் கவனம் ஈர்க்கலைனா ஸ்கிப் செஞ்சிடுறாங்க. அப்படி இருக்கையில், 45 நிமிடத்தில் கதைக்குள் நுழையும் வழக்கம் எல்லாம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயிடுச்சு. படம் தொடங்கி 5-வது நிமிஷத்துல, ஏன் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கிடணும்னு எதிர்பார்க்குறாங்க. கதையை விட்டு கொஞ்சம் விலகினாலும், கடுப்பாகிடுவாங்க. அந்த பல்ஸை புரிஞ்சுகிட்டு, எழுத்துல அந்த மேஜிக்கைக் கொண்டு வர்றதுங்கிறது மிகப்பெரிய சவால்!"
இயக்குநர் சரண், உங்களின் உறவினர் என கேள்விப்பட்டோமே?

``ஆமாம், என் அத்தை மகன் அவர். நான் ஏழாவது படிக்கும்போது அவர் கே.பி சார் படத்தில் வேலை பார்த்துட்டு இருந்தார். அவர் மூலமாத்தான் எங்க குடும்பத்துக்குள்ள சினிமா நுழைஞ்சது. எனக்கு சினிமா ஆசை வந்து, அவர்கிட்ட அதை சொல்லும்போது எனக்கு சில பரீட்சைகள்லாம் வெச்சார். டிப்ளமோ முடிச்ச சமயம், `அமர்க்களம்' வெளியாகி பயங்கர ஹிட் அடிச்சிருந்தது. அந்தப் படத்துல ஹரி சார் வேலை பார்த்திருந்தார். அப்போதிருந்தே அவரை எனக்குத் தெரியும். பிறகு, அவரும் `தமிழ்', `சாமி' படங்கள் மூலமா பெரிய இயக்குநராக பரிணமிச்சுட்டு இருந்த நேரத்துல, அவரைப் போய் பார்த்தேன். `ஒரு 10 நாள் வந்து டிஸ்கஷன்ல உட்காரு. அதை வெச்சு முடிவு பண்ணிக்கலாம்'னு சொன்னார். எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. கடைசியில், நாம் நம்பின மாதிரியே நடந்து, அவர்கிட்டே அசிஸ்டென்டா சேர்ந்துட்டேன். அதற்கு, ஹரி சாருக்கு என்னைப் பற்றி சரண் சார் கொடுத்த கிரீன் சிக்னலும் ஒரு காரணம்! "
ஹரி, ராதாமோகன் போன்றோருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி...

`` `ஐயா' படத்தின் டிஸ்கஷன்ல தொடங்குச்சு, ஹரி சார் உடனான பயணம். `ஐயா', `ஆறு', `தாமிரபரணி'ன்னு மூன்று படங்கள்ல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். `வேல்' படத்தின் முழு ஸ்க்ரிப்டும், `சிங்கம்' படத்தின் முதற்பாதி ஸ்க்ரிப்டும் முடிச்சுட்டுத்தான் வெளியே வந்தேன். அவர் கூட வேலை பார்க்க தனி எனர்ஜி வேணும். காலையில பரபரப்பா வேலையைத் தொடங்கினா, மதியத்துக்குள்ளே ஒரு சீன், சில மான்டேஜ்களை எடுத்து முடிச்சுருப்பார். நமக்கு மயக்கம் வந்துடும். நாம கத்துக்கவும், வளரவும் நிறைய இடம் கொடுப்பார். திறமையை எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு, முன்னோக்கி நகர்த்துவார். ராதாமோகன் சார், அழகா ஒரு விஷயம் மாட்டுற வரைக்கும் அமைதியா காத்திருப்பார். மாட்டிட்டா, பரபரனு வேலை பார்த்து பக்காவா முடிச்சுடுவார். ஒரு கதாபாத்திரத்தை காமெடியா ஆரம்பிச்சு, கனமா முடிக்கிறதுல மாஸ்டர் அவர். ரொம்ப சாஃப்ட்டா வேலை வாங்குவார்."
`மாஸ்டர்' படத்தில் வசனங்கள் எப்படி வந்திருக்கு?

```மாஸ்டர்'ல மாஸ் மொமன்ட்ஸும், மாஸான வசனங்களும் நிறைய இருக்கும். `கேட்கலை... சத்தமா,' `ஐ எம் வெயிட்டிங்'னு விஜய் சார் பேசுற ஒவ்வொரு வசனமும், பன்ச் வசனமா மாறிட்டு இருக்கு. `மாஸ்டர்' வசனங்களை ரசிகர்கள் நிச்சயம் என்ஜாய் பண்ணுங்க. வேறு எதுவும் இப்போதைக்கு நான் சொல்லக் கூடாது."
உங்களின் இயக்குநர் கனவு...

``கனவு நிஜமாகப்போகுது. சீக்கிரமே, என்னை இயக்குநரா பார்க்கலாம். `நீங்கள் தயாராகும்போது ஒரு செயல் நடக்கிறது'னு ஒரு வாசகம் இருக்கு. அந்த வாசகம் மிகச்சரியானதுனு நம்புறேன். ஒரு செயல் நமக்கு நடக்கலைன்னா, நாம இன்னும் தயார் ஆகலைன்னு அர்த்தம். நான் தயார் ஆகிட்டதா நம்பினேன், நடந்துடுச்சு."