Published:Updated:

"சினிமா, எழுத்தைப்போல அல்ல... அது பலரின் கூட்டுத்திறமை!" - கவிஞர் குட்டி ரேவதி

அக்‌ஷிதா
அக்‌ஷிதா

`சிறகு'  படத்தின் பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் கவிஞர். குட்டிரேவதி. பல வருட முயற்சிக்குப் பிறகு திரைப்பட இயக்குநராக `சிறகு' படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து... 

இயக்குநராகும் எண்ணம் எப்போது வந்தது?

பலரையும் போல சிறு வயதிலிருந்தே திரைப்படங்கள் பார்த்து வளர்ந்திருக்கிறேன். ஆரம்ப கட்டத்தில் திரைப்பட இயக்கங்களிலும் இணைந்து பணியாற்றிய அனுபவம் உண்டு. சென்னைக்கு வந்ததிலிருந்தே திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பலரின் திரைக்கதைகளில் பணிபுரிந்திருக்கிறேன். பரத் பாலாவின் `மரியான்' படத்தில் பணிபுரிந்ததும், அத்திரைப்படத்துக்கு பாடல் எழுதியதும் மகத்தான அனுபவம். அதில் நிறைய கற்றுக் கொண்டேன்.

குட்டி ரேவதி
குட்டி ரேவதி
பாலாஜி
``தனிமைச் சிறையினில் ஏனோ ஒற்றைச் சிறகாய் நானோ கனவில் இனியொரு சிறகாய் மிதப்பேனோ நனையும் விழியின் கனவோ மொழியும் மறந்த உணர்வோ இதயம் சொல்லும் கனவாய் உன் பிரிவோ நீயானாய் நீல வானம்!"
குட்டி ரேவதி

`சிறகு' திரைப்படம் உருவானது பற்றி...

திரைப்படம் இயக்கலாம் எனத் திட்டமிட்டு கதை எழுதிய பிறகு நண்பர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலருக்கு கதை சொல்லியிருக்கிறேன். ஒரு விழாவில்தான் மாலா மணியம் அறிமுகமானார். மீடியா துறையில் மிகப் பிரபலமானவர். இயக்குநர் மணிரத்னத்தின் ஓ.கே. கண்மணி படத்தின் எக்ஸிகியூட்டிவ் புரோடியூசராகப் பணிபுரிந்தவர். மீடியாவில் நிறைய சாதித்தவர். ``நாம சேர்ந்து ஒரு படம் பண்றோம்னு' சொன்னாங்க.

அதற்கப்புறம் ஒருநாள் `சிறகு' படத்தோட ஒன்லைனைச் சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. எழுதிக்கொண்டு வாங்கணு சொன்னாங்க. அவருக்கும், எனக்கும் நம்பிக்கை ஏற்படுத்திய அந்தக் கதையைப் படமாக்கினோம். படத்தை பார்த்த அவர் சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு மகிப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது.

சிறகு படம் எதைப் பற்றிப் பேசுகிறது?

சிறகு ஒரு இசைக் கலைஞனைப் பற்றிய படம். வாழ்வின் மீதான நம்பிக்கையை உருவாக்கிற, மனிதனைத் தேற்றுகிற ஒரு படம் என்றும் சொல்லலாம்.

உங்களின் படக்குழு பற்றிச் சொல்லுங்கள். யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?

படத்தில் ஹரிகிருஷ்ணனும், அக்‌ஷிதாவும் படத்தில் நடித்துள்ளனர். மரியான் படத்திலிருந்தே ஹரிகிருஷ்ணனைத் தெரியும். இயல்பான வசீகரம் கொண்டவர். பலஆடிசன்கள் பல கல்லூரிகளுக்குச் சென்றும் நானும் தயாரிப்பாளரும் கதாநாயகியைத் தேடினோம். `அருவி' பட இயக்குநர் அருண்பிரபு மூலம் அக்‌ஷிதா அறிமுகமானார். தமிழ் பேசத் தெரிந்தவர். இருவரும் அபார திறமைசாலிகள். கடின உழைப்பை படத்துக்கு அளித்திருக்கிறார்கள். இசை அரோல் கொரோலியும், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாஜார்ஜி, எடிட்டர் அருண்குமார் எனச் `சிறகு' உருவாக்கத்தில் இவர்களின் பங்கு அளப்பறியது. அரோலின் இசை படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். நம்முடைய இசை பல வருட பாரம்பர்யம் கொண்டது. சங்க காலம்தொட்டு நம்முடைய இசைக்கான மரபு பெரிது ரஹ்மான் சாருடன் இசை மரபு குறித்து நிறைய உரையாடி இருக்கிறேன். இசை பற்றிய ஆழமான பார்வை அவருக்கு உண்டு. இப்போது நம்மிடம் எஞ்சியிருப்பது திரையிசை மட்டும்தான். திரையிசைக்குட்பட்ட வட்டம், கட்டங்களுக்குள் என்னுடைய கதாபாத்திரங்கள் வழியே நமக்கான இசையை கொண்டுவர முயற்சி செய்துள்ளோம். கிட்டத்தட்ட ஒரே குடும்பம்போல எனச் சொல்வார்களே அந்த மாதிரிதான் எங்கள் குழுவும். மனதுக்கு நெருக்கமாகவும், அதே சமயம் சினிமாத் துறை மீதான பெரும் நம்பிக்கையையும் இந்தப் படம் ஏற்படுத்தயிருக்கிறது.

தீவிர இலக்கியத்திலிருந்து சினிமாவுக்கு வந்துள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

முன்பைவிட இப்போது இன்னும் பக்குவமாகி இருப்பதாக உணர்கிறேன். வணிக சினிமாக்கள்தான் நாம் சொல்லும் கருத்துகளை வெகு மக்களிடம் கொண்டு சேர்க்கும். ஆனால், அதைப் படைப்பாளிகள் நம்முடைய களம் அல்ல என ஒதுக்கிவைத்திருந்தனர். அப்படி ஒதுக்கி வைக்கத்தேவையில்லை. இன்று பொறுப்புணர்வுமிக்க பலரும் வணிகத் திரைப்படங்களுக்குள் தாம் பேச விரும்பும் அரசியலைப் பேசுகிறார்கள். எழுத்தைப்போல சினிமா தனிமனித சம்பவம் கிடையாது. பலபேருடைய கூட்டுத்திறமை. வேலைபார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் வேலையை ஆத்மார்த்தமாகச் செய்து உருவாக்கும் கலை. அனைவருடனும் இணக்கமாகவும், நம்முடைய சமூக நோக்கம் குறித்தும் உரையாடல் நிகழ்கிறது. பிரமாண்டமாக நினைக்கத் தேவையில்லை. பல கரங்கள் சேர்ந்து கொய்த, கோத்த எளிய, அற்புதமான பூங்கொத்துதான் சினிமா. 

அடுத்த கட்டுரைக்கு