Published:Updated:

``கொடுத்த `கலைஞர்' பட்டம் இனிக்குது; எம்.ஆர்.ராதா பெயர் கசக்குதா?!" - ராதாரவி காட்டம்

ராதாரவி
ராதாரவி

`என் அப்பா கொடுத்த கலைஞர் பட்டம் இனிக்கிறது, எம்.ஆர்.ராதா பெயர் மட்டும் கசக்கிறதா.’

சமீபத்தில் திரைப்பட டப்பிங் கலைஞர்கள் யூனியனுக்கான தேர்தல் நடந்தது. அதில் தலைவராக ராதாரவி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் திராவிடப் பற்று, பி.ஜே.பியில் சேர்வதற்குப் பணம் வாங்கியதாக எழுந்த சர்ச்சை, நடிகர் சங்கம், சின்மயி விவகாரம், உதயநிதி சர்ச்சை குறித்து ராதாரவியிடம் கேள்விகள் கேட்டோம்.

ராதாரவி
ராதாரவி

எம்.ஆர்.ராதா திராவிடத்தை ஆதரித்தார், நீங்கள் எதிர்த்து பேசுகிறீர்களே?

``என் அப்பா எம்.ஆர்.ராதா திராவிடர் கழகத்துக்கும் பெரியாருக்கும் உழைக்காதவரா? பெரியார் ஊர்வலத்தில் கலந்துகொண்டால் அவருக்கு முன்பாக, பாதுகாப்பாக குதிரையில் சவாரி செய்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தியர் என் அப்பா. பொது இடத்தில் என் அப்பாவுக்குச் சிலை வைக்க முடியாத காரணத்தால் பிரைவேட் இடமான பெரியார் திடலில் என் அப்பாவுக்குச் சிலை வைக்க இடம் கேட்டார் கலைஞர். கி.வீரமணி தராமல் மறுத்தாரே அந்த வேதனையை எங்களால் மறக்கமுடியுமா. தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா திராவிடக் கட்சிக்காரங்களையும் கேட்கிறேன். பெரியார் பிறந்த அதே தேதியில்தான் என் அப்பாவுக்கு நினைவுநாள். யாராவது ஒருத்தர் என் அப்பாவை நினைத்து நினைவுநாளைக் கொண்டாடி இருக்கிறார்களா.

தி.மு.க-வில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் டிவி என்று வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே கருணாநிதிக்கு கலைஞர் என்கிற பட்டத்தைக் கொடுத்தவரே என் அப்பாதான் என்பது உலகுக்கே தெரியுமா. தி.மு.க-வில் யாராவது என் அப்பாவை மதித்து இருக்கிறார்களா. என் அப்பா கொடுத்த கலைஞர் பட்டம் இனிக்கிறது, எம்.ஆர்.ராதா பெயர் மட்டும் கசக்கிறதா. சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு பஸ்டாண்டுக்கு என் அப்பா பெயரை வைத்தனர். பின்னர் தி.மு.க ஆட்சியில் அதை மூடிவிட்டனர். தேனாம்பேட்டையில் என் தலைமையில் மு.க.ஸ்டாலின் பஸ்டாண்டைத் திறந்து வைத்தார். பின்னர் அவர்களே மூடியும் விட்டனர். எந்தத் திராவிடக் கட்சிக்கு என் அப்பா ஓடி ஓடி உழைத்தாரோ, அந்த திராவிடக் கட்சிகள் ஒன்றுகூட என் அப்பாவை மதிக்கவில்லை,. நான் மட்டும் எதற்கு திராவிடத்தை மதிக்க வேண்டும்?"

நீங்கள் பி.ஜே.பியில் சேர்வதற்குப் பணம் வாங்கி விட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சொல்கிறார்களே?

``நான் தி.க கட்சியில ரொம்ப மதிக்கிறவர் கொளத்தூர் மணி அண்ணன். கம்யூனிஸ்டுல மரியாதை கொடுப்பவர் ராமகிருஷ்ணன் அண்ணன். சமீபத்துல ஒரு டிவி நேர்காணலில் என்னைப் பத்தி, கம்யூனிஸ்ட் கட்சியில உள்ள ஒரு அடையாளம் தெரியாத ஆள் பேசியிருக்கிறார்.

ஏம்பா... பார்லிமென்ட் தேர்தல்ல நீங்க தி.மு.க கட்சிகிட்டே 27 கோடி ரூபாய் வாங்கிட்டுதானே போட்டி போட்டிங்க. நீங்க உங்க லெவலுக்கு 27 கோடி வாங்கிட்டு தி.மு.க-வுக்கும், திராவிடத்துக்கும் ஜால்ரா போடுறீங்க. நான் உங்கள் அளவுக்குப் பெரிய பணமெல்லாம் வாங்கவில்லை. நான் வாங்கின கொஞ்ச பணத்துக்கு பா.ஜ.கவை ஆதரிச்சு பேசுறது தப்பா.

ஒரு காலத்துல கம்யூனிஸ்ட் கட்சியில ஜாம்பவான்களாக இருந்த ஜீவா, நா.வானமாமலை, மோகன் குமாரமங்கலம் எல்லாம் எங்க அப்பா எம்.ஆர்.ராதாவோட செளந்தர்யா மாஹாலில் நாடக கம்பெனியில இருந்தவர்கள் என்கிற விவரம் யாருக்காவது தெரியுமா. இதுதான் உண்மையான வரலாறு.

``கொடுத்த `கலைஞர்' பட்டம் இனிக்குது; எம்.ஆர்.ராதா பெயர் கசக்குதா?!" - ராதாரவி காட்டம்

நடிகர் சங்கத்துக்குச் சொந்தமாக சென்னை தாம்பரம் பக்கத்தில் இருந்த நிலத்தை நீங்களும், சரத்குமாரும் விற்றுவிட்டதாக விஷால் சொல்கிறாரே?

``நான், சரத்குமார் சங்கத்தில் இருந்தவரை ஒரு தவறும் நடக்கவே இல்லை. பொதுவாகச் சட்டப்படி முன்று வருஷத்துக்கு உள்ள கணக்கை மட்டுமே காட்ட முடியும். நாங்கள் ஏதோ தாம்பரத்தில் உள்ள நிலத்தைத் திருடிவிட்டதாகச் சொன்னாங்க. நாங்கள் திருடவில்லை. அவர்கள் ஒளித்து வெச்சிருக்காங்க என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கிட்டு வர்றேன். இப்போ ஹைதராபாத்துல உள்ள கனரா பேங்குல நாங்க நடிகர் சங்கத்து பேர்ல கட்டியிருக்குற 9 லட்ச ரூபாய் ரசீதை எடுத்துவிட்டோம். எங்கள் மேல் எந்தத் தப்பும் இல்லைனு காவல்துறை கைது நடிவடிக்கையையே கைவிட்டுவிட்டது."

தமிழகத்தில் உள்ள பி.ஜே.பியில் நிறைய கோஷ்டிகள் இருக்கிறதே?

``தமிழ்நாட்டில் பி.ஜே.பியில் பிரிவுகள் இருக்கலாம் அதைப்பத்தி எனக்குத் தெரியாது. நான் புதுசாகக் கட்சியில சேர்ந்து இருக்கிறேன். அவ்வளவுதான். இனிமேல்தான் எங்கே மேடு, எங்கே பள்ளம்னு பார்த்துப் பழகணும். தி.மு.க, அ.தி.மு.க-வில் இருக்கும் போதும்சரி, தலைமையிடம் மட்டுமே நான் தொடர்பு வைத்துக்கொள்வேன். இப்போது பி.ஜே.பியிலும் அதோட தலைவர் நட்டாவை நேரில் சந்தித்துப் பார்த்துவிட்டு வந்தேன்."

ராதாரவி
ராதாரவி

`ராதாரவி காலில் விழுந்தோ அல்லது அவரது வீட்டுக்குச் சென்றோ மன்னிப்பு கேட்க மாட்டேன். சட்டப்படி எதிர்கொள்வேன். வெளிச்சத்துக்கு வருமா டப்பிங் யூனியன் ஊழல்' என்று சின்மயி ட்வீட் செய்து இருக்கிறாரே?

``என் காலில் விழணும்னு நான் சொல்லலையே. அந்தம்மா சட்டப்படியே எதிர் கொள்ளட்டும். பாவம் அந்தப் பொண்ணு பெயர்ல யாராவது தெரியாம ட்வீட் பண்ணி இருப்பாங்க. சின்மயி பேசாம சிபிசிஐடியில போய் புகார் செய்யட்டும். சமீபத்துல நடந்த டப்பிங் யூனியன் தேர்தல்ல நிறைய உறுப்பினர்கள் ஓட்டுப் போடலைன்னு சொன்னால் அதுக்கு நான் என்ன செய்வேன். சினிமா டப்பிங் கலைஞர்கள் யூனியனில் ட்ரஸ்ட் என்ற ஒன்று கிடையாது. அது இருந்தால்தானே ஊழலே செய்ய முடியும். அதனால வைப்பு நிதி என்பதே இல்லை. சினிமாவுக்குப் பின்னணி குரல் கொடுக்குறவங்களுக்குத் தரவேண்டிய பணம் வரும். அதுக்கப்புறம் யாருக்குக் கொடுக்கணுமோ அவங்களுக்குக் கொடுத்துவிடுவாங்க. அவ்வளவுதான்."

நீங்கள் உதயநிதி ஸ்டாலினை `ஆட்டுப்புழுக்கை' என்று விமர்சித்தது சர்ச்சையாகி இருக்கிறதே?

``கிராமத்தில் ஏதாவது இளம் வயசுப்பசங்களிடம் சண்டை வந்தால் பெரியவர்கள் சமாதானம் செய்வார்கள். அப்போது சில சின்னவயசு பசங்க குறுக்கே புகுந்து சத்தம் போடுவாங்க. அவங்களைப் பார்த்து, 'டேய் ஆட்டுப்புழுக்கை மாதிரி சத்தம் போடாத' என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆக பொதுவாக கிராமத்தில் பேசப்படும் வழக்குச்சொல் ஆட்டுப்புழுக்கை. என்னைப்பார்த்து ஒருவன் `ராதாரவி தரம் தாழ்ந்து பேசுகிறார்' என்று சொன்னால் உண்மையிலேயே அவன்தான் என் உயரத்துக்கு வரமுடியாமல் தரம் தாழ்ந்து நிற்கிறான்."

அடுத்த கட்டுரைக்கு