Published:Updated:

``மினிமம் கியாரன்ட்டியே கிடையாது... எங்களுக்கும் பிரச்னைகள் அதிகம்!" - எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

எஸ்.ஆர்.பிரபு - ஜோதிகா
எஸ்.ஆர்.பிரபு - ஜோதிகா

`பொன்மகள் வந்தாள்' OTT ரிலீஸ் விவகாரம் தயாரிப்பாளர்கள் Vs தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்னையாக உருமாறிக்கொண்டிருக்கிறது.

``பல கோடி ரூபாய் முதலீடு செய்து படத்தைத் தயாரிக்கும் எங்களுக்கு அந்தப் படங்களை எந்தத்தளத்திலும் விற்கும் உரிமையிருக்கிறது'' எனத் தயாரிப்பாளர்கள் சொல்ல, ``திரைப்படங்கள் தியேட்டருக்கு வரவில்லையென்றால் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் அத்தனைபேரின் வாழ்வாதாரமும் அழிந்துபோகும். பல கோடி ரூபாய் முதலீட்டில் தியேட்டர்களைக் கட்டிவைத்து, பராமரித்து வருகிறோம். இதனால் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்'' எனத் தியேட்டர் உரிமையாளர்களும் போர்க்கொடித் தூக்கியிருக்கிறார்கள்.

 ஜோதிகா
ஜோதிகா
பொன்மகள் வந்தாள்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது அதற்கு பல முட்டுக்கட்டைகள் போடப்படும். 2012-ம் ஆண்டு இறுதியில் `விஸ்வரூபம்' படத்தை டிடிஹெச்சில் ரிலீஸ் செய்யப்போகிறேன் எனக் கமல்ஹாசன் அறிவித்தபோது அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. தயாரிப்பாளர் சங்கம் உட்பட சினிமாவில் உள்ள அத்தனை சங்கங்களும் எதிர்த்தன. ஆனால், இப்போது சூர்யாவின் 2டி நிறுவன முயற்சிக்கு தியேட்டர் உரிமையாளர்களைத் தவிர்த்து பெருமளவில் ஆதரவே கிடைத்துவருகிறது. இவ்விவகாரம் குறித்து சூர்யாவின் உறவினரும், ஓடிடி தளங்களுக்கு அதிக அளவில் படங்களை விற்ற தயாரிப்பாளருமான டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபுவிடம் பேசினேன்.

``இந்த லாக் டௌனால் பல தீமைகள் இருந்தாலும் சில நன்மைகளும் இருக்கிறது. இந்த லாக் டௌனால்தான் தமிழ்ப்படங்களை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யும் சூழல் சீக்கிரமே அமைந்திருக்கிறது. இல்லையென்றால், நேரடி ஓடிடி ரிலீஸ் இன்னும் மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் நடந்திருக்கும். இந்த லாக் டௌனால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் தனது சந்தாதாரர்களுக்கு புதுப்புது கன்ட்டென்ட்களை கொடுக்க வேண்டும் என ஓடிடி தளங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அவர்கள் எடுக்கும் இந்த முயற்சி மினிமம் மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய உதவியாக இருக்கிறது. அதனால், அதைத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறோம். இதற்கு தியேட்டர் உரிமையாளர்களும் ஒத்துழைப்புத் தர வேண்டும்.

ஜோதிகா
ஜோதிகா
பொன்மகள் வந்தாள்

இந்த நூறு வருட தமிழ் சினிமா பயணத்தில் தியேட்டர்களுக்காக, தயாரிப்பாளர்கள் ஒத்துழைத்து ஏற்றுக்கொண்ட பல விஷயங்களையும் அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரு படம் பூஜை போட்டதுமே, தியேட்டர் உரிமையாளர்கள் அந்தப் படம் எங்களுக்கு வேண்டும் என்று விநியோகஸ்தர்களிடம் அட்வான்ஸ் கொடுப்பார்கள். விநியோகஸ்தர்கள் அந்த அட்வான்ஸை தயாரிப்பாளர்களிடம் கொடுத்து படத்தை முன்பதிவு செய்துகொள்வார்கள். தயாரிப்பாளர்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்தோடு, அந்த அட்வான்ஸ் தொகையையும் வைத்துத்தான் அந்தப் படத்தையே எடுத்து முடிப்பார்கள். பட ரிலீஸின்போதுதான், தயாரிப்பாளர்கள் ஃபைனான்ஸியர்களிடம் கடன் கேட்பார்கள். நாளடைவில், இந்த அட்வான்ஸ் கொடுக்கும் பழக்கத்தை மாற்றி, மினிமம் கியாரன்ட்டியில் படத்தை வாங்கிக்கொள்கிறோம் என்றார்கள். இதை ஏற்றுக்கொண்டதால் படம் பூஜை போடும்போதே ஃபைனான்ஸியர்களிடம் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் படம் பூஜைபோட்ட நாளில் இருந்தே வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட ஆரம்பித்தோம்.

இப்படி போய்க்கொண்டிருக்கும்போதே எல்லா படங்களுக்கும் மினிமம் கியாரன்ட்டி கிடையாது. பெரிய படங்களுக்கு மட்டும்தான் எம்ஜி என்றார்கள். அதையும் ஏற்றுக்கொண்டு தற்போது வரை, படங்களை ரிலீஸ் செய்து வருகிறோம். இந்த விஷயங்களை எல்லாம் அவர்கள் மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த லாக் டௌனால் புதுப்படங்களைப் பார்க்க முடியாமல் இருக்கும் தமிழ் ரசிகர்களை நாங்கள் என்கேஜ் செய்தாக வேண்டும். இல்லையென்றால் தமிழ் சினிமா அதன் ரசிகர்களை இழக்கநேரிடும். அதற்கு இந்த ஓடிடி தளங்கள்தான் ஒரே வழி’’ என்றார்.

"சூர்யா குடும்பம் மட்டும் வாழணும்; 25000 குடும்பங்கள் அழியணுமா?"- கொதிக்கும் `ரோகினி' பன்னீர்செல்வம்

தயாரிப்பாளர்களுக்கு மக்களின் ஆதரவும் பெருமளவில் கிடைத்திருப்பதால் `பொன்மகள் வந்தாள்' எந்த சிக்கலும் இல்லாமல் மே மாதம் ஓடிடியில் ரிலீஸாகிவிடும் என்றே தெரிகிறது!

அடுத்த கட்டுரைக்கு