வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (24/08/2017)

கடைசி தொடர்பு:10:38 (24/08/2017)

“மம்முட்டி சார் அப்படி ஆச்சர்யப்பட்டார்!” - தரமணி, பேரன்பு கதை சொல்கிறார் 'தேனி' ஈஸ்வர்

இயக்குநர்களின் மோஸ்ட் வான்டட் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். இயக்குநர் ராமுடன் `பேரன்பு', இயக்குநர் பாலாவுடன் `நாச்சியார்', இயக்குநர் லெனின் பாரதியுடன் `மேற்குத் தொடர்ச்சிமலை' என பெயர் சொல்லும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கவனிக்கவைக்கிறார். அண்மையில் வெளிவந்த `தரமணி' படத்தில் ஒளிப்பதிவு மூலம் லைக்ஸ் குவித்தவரிடம் ஒரு விரிவான பேட்டி.

ஈஸ்வர்

``புகைப்படக்காரர் டு ஒளிப்பதிவாளர், பயண அனுபவம் சொல்லுங்க?'' 

``எனக்கு சொந்த ஊர் தேனி. போட்டோகிராஃபியில எங்க மாமாவுக்கு ரொம்ப ஆர்வம். அவர்தான் எனக்கு கேமரா வாங்கிக் கொடுத்தார். அந்த ஃபிலிம் கேமராவில்தான் நான் புகைப்படம் எடுத்துப் பழக ஆரம்பிச்சேன்.  நிறைய இடங்களுக்குத் தேடித் தேடிப் போய் படங்கள்  எடுப்பேன்.  படங்கள் எடுக்க எடுக்க, கேமரா மேல எனக்கு ஆர்வம் அதிகமாகிடுச்சு. அப்புறம் விகடன்தான் எனக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

விகடனில் `விஷுவல் டேஸ்ட்'னு ஒரு பக்கம் வரும். அதுல  நான் எடுத்த போட்டோக்களும் வரும். நான் போட்டோ எடுத்துப் பழகிட்டிருந்த காலகட்டத்துலதான் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எனக்குப் பழக்கமானார். அவர் ஆனந்த விகடனில் `ரூட் பஸ்'னு ஒரு தொடர் எழுதினார். அவர் என்கிட்ட  கேமராதான் கேட்க வந்தார். ஆனா, `நானே எடுத்துத் தரனே'ன்னு சொன்னேன். அவர்கூட டிராவல் பண்ணி எடுத்த அந்த `ரூட் பஸ்' செமயா ரீச் ஆச்சு. ஒவ்வொரு போட்டோவையும் பார்த்துட்டு எல்லோரும் என்னைப் பாராட்டினாங்க. எனக்கு விகடன்ல பெரிய அங்கிகாரம் கிடைச்சுது.

விகடன்ல நிறைய வொர்க் பண்ண தொடங்கினேன். `ஆனந்த விகடன்'  ஆசிரியர் கண்ணன், என் வளர்ச்சியில் ரொம்பவே முக்கியமானவர். அவர்தான் நான் இந்த அளவுக்கு வளருவதற்கு முக்கியமான காரணம். ஏன்னா, கிராமத்துல இருந்து வந்த பையனுக்கு ஒரு பெரிய எக்ஸ்போஸர் இருக்காது. போட்டோகிராஃபி ரீதியிலயும் தனிப்பட்ட முறையிலயும் என்னை ஃபைன் ட்யூன் பண்ணி, பொது இடங்கள்ல எப்படி நடந்துக்கணும், என்ன பேசணும், எப்படிப் பழகணும்னு என்  வாழ்க்கைக்கான ஒவ்வொரு படிநிலையையும் உருவாக்கினது கண்ணன்தான். என் உயிர் நண்பர் அவர்.

விகடனில் சினிமாவுக்காக அசைன்மென்ட் போகும்போது , ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் போட்டோஸ் மட்டும் எடுத்துட்டு வந்துட மாட்டேன். முழு நாளும்  அங்கேயே இருந்து கவனிப்பேன். என் புகைப்படங்களுக்கு பெரிய பிளாட்பாரம் அமைத்துக்கொடுத்தது விகடன்தான். வைரமுத்து சார் என்னோட போட்டோஸ் எல்லாம் பார்த்துட்டு, என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்.`கள்ளிக்காட்டு இதிகாசம்' எழுதும்போதும் எல்லாருக்கும் போட்டோஸ் கொடுத்தோம். அதுல என்  போட்டோஸ் பார்த்து, `புத்தகமாக வரப்போகிறது. நீங்கதான் போட்டோஸ் எடுத்துத் தரணும்'னு சொன்னார். அது ரொம்பப் பெருமையாகவும் மிகப்பெரிய வாய்ப்பாகவும் இருந்தது. நிறைய படங்கள் எடுத்துக் கொடுத்தேன். சாருக்குப் பிடிச்சிருந்தது. `கள்ளிக்காட்டு இதிகாசம்', `கருவாச்சிக் காவியம், `மூன்றாம் உலகப்போர்', `சிறுகதை தொகுப்பு' போன்றவற்றுக்காக நான் அவருக்கு புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்திருக்கேன். அப்படியே சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சேன்.

பி.சி சார்கிட்ட உதவியாளரா சேரணும்னு ரொம்ப முயற்சி பண்ணேன். அப்புறம் கே.வி.ஆனந்த் சார்கிட்ட ட்ரை பண்ணேன். அவர் அப்ப இந்தியில `நாயக்'னு ஒரு படம் பண்ணிட்டிருந்தார். அந்தப் படத்துல வேலை செய்ய மும்பைக்கு  வரச் சொன்னாங்க. ஆனா, எங்க விட்டுல விடலை. அப்புறம் பல போராட்டங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் ஆகிட்டேன்.''

``முதல் பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?''

``சுசீந்திரன் இயக்கிய `வெண்ணிலா கபடி குழு' படத்துக்கு நான்தான் புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்தேன். அதில் என்னுடைய வொர்க் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. என்னுடைய ஃப்ரேமிங் மற்றும்  போட்டோகிராஃபி பார்த்துட்டு இம்ப்ரஸ் ஆனார்.  என்னை அவர் படத்துக்கு போட்டோகிராஃபி பண்ணச் சொன்னார். ஆனால், `என் ஆர்வம் எல்லாம் ஒளிப்பதிவாளர் ஆவதில்தான் இருக்கு'னு சொன்னேன். அப்போது எனக்கு நேரடி அனுபவம் கிடையாது. கரு.பழனிப்பனின் `சதுரங்கம்' படத்தில் ஒளிப்பதிவாளர் பக்கத்தில் இருந்து கவனிச்சிருக்கேன். அவ்வளவுதான். Proper Assistant  ஆகப் பணிப்புரிந்ததில்லை.  ஆனாலும், என்னை அழைத்து வாய்ப்புக் கொடுத்தார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்போது  SICA-வில் மெம்பர்ஷிப் வாங்குவதில் சிரமம் இருந்தது. பாலுமகேந்திரா சாரைப் பார்த்தேன். அவர் கடிதம் எழுதிக் கொடுத்து எனக்கு மெம்பர்ஷிப்  வாங்கிக் கொடுத்தார். பாலுமகேந்திரா சாருக்கு நன்றி.''

முழுமையான பேட்டியை காண...

`` `தரமணி' படத்துக்கு எப்படி ஒளிப்பதிவாளர் ஆனீங்க?''

``ராம் சார் என்னுடைய நண்பர். `கற்றது தமிழ்', `தங்க மீன்கள்' படங்களுக்கான  ஆரம்பகட்ட புகைப்படங்களை நான்தான்  எடுத்தேன். என் வொர்க்  அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. `தங்க மீன்கள்' படத்தில் நான்தான் ஒளிப்பதிவாளரா வொர்க் பண்ணவேண்டியது. ஆனா, அப்போ நான் `அழகர்சாமியின் குதிரை' படத்தில் வேலை செஞ்சுட்டிருந்தேன். அதனால பண்ண முடியலை. `தரமணி'  படத்தின் கதையைக் கேட்டதுமே எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ராம் சார் படத்தில் லொக்கேஷனும் ஒரு கதாபாத்திரமா வரும். அதனால இந்தப் படத்தின் இடங்களை , நிறைய முக்கியத்துவம் கொடுத்து  தேர்வுசெஞ்சோம். ராம் சாரிடம் இருந்துநான்  நிறைய கற்றுக்கொண்டேன். அவருக்கு நன்றி.''

``ராமின் அடுத்த படமான `பேரன்பு' படத்திலும் பணியாற்றியிருக்கீங்களே?" 

``ராம் சார்தான் என்னைக் கூப்பிட்டு இந்த வாய்பை மீண்டும் கொடுத்தார். இந்தப் படம் ரொம்ப அற்புதமான கதை. இந்தப் படத்துக்காக கொடைக்கானலில் மிகப்பெரிய உட்டன் ஹவுஸ் ரொம்ப அழகா... பிரமாண்டமா செட் போட்டிருந்தாங்க.  தினமும் காலையில 5 மணிக்கு நாங்க அந்தக் குளிர்ல ஷூட்டிங் போயிடுவோம். எங்களுக்கு முன்னாடி ராம் சார், அந்த இடத்துலேயே அந்தக் குளிர்லேயே தங்கியிருப்பார். மம்மூட்டி சாரும் காலை  6  மணிக்கு  ஷூட்டிங் வந்திடுவார். அந்தப் படத்தின் காட்சிகள் ரொம்ப அழகா வந்திருக்கு. படம் பார்க்கும்போது உங்களுக்கே அது தெரியும்.''

ஈஸ்வர்

``உங்க ஒளிப்பதிவைப் பார்த்துட்டு மம்மூட்டி  என்ன சொன்னார்?" 

`` `தரமணி' படத்தில் என் ஒளிப்பதிவைப் பார்த்துப் பாராட்டினார். `பேரன்பு' படத்திலேயும் பெரிய லைட்டிங் செட்டப்பே இல்லாமல்தான் பெரும்பாலும் படமாக்கினோம். நைட்லகூட மெழுகுவத்தி, தீப்பந்தம் போன்ற சின்ன லைட்டிங் வைத்தே சில சீன்களை எடுத்தோம். அதைப் பார்த்து மம்மூட்டி சாருக்கு ரொம்ப ஆச்சர்யம். சில சமயம் அவருக்கு சீன்ஸ் இல்லாவிட்டாலும் பக்கத்தில் உட்கார்ந்து மானிடரைப் பார்த்துட்டிருப்பார். மம்மூட்டி சார் மாதிரி ஒரு லெஜெண்ட்கூட வேலைபார்க்கிறது என் பாக்கியம்.''

``இயக்குநர் பாலாவுடன் `நாச்சியார்' படத்தில் வேலைசெய்யும் அனுபவம் எப்படி?'' 

``பாலா சார் ஒரு ஜீனியஸ். நான் கேமராமேன் ஆவதற்கு முன்னாடியே சாரைப் பார்த்துப் பேசியிருக்கேன். அவர்கூட நான் நண்பனாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். அவர் ரொம்ப  ஃப்ரெண்டிலியா  வேலை செய்வார்.  சாருக்கு என்ன தேவைனு தெளிவா சொல்லிடுவார். நானும் அதற்கு ஏற்ப யோசனைகளைச் சொல்வேன். எது சரி வருமோ, அதைத் தேர்ந்தெடுத்து செய்யச் சொல்வார். காட்சிகள் சிறப்பா வர, ஒளிப்பதிவாளருக்கு நிறைய அவகாசம் கொடுப்பார். பாலா சார்கூட வேலை செய்றது மகிழ்ச்சியா இருக்கு. பாலா சாருக்கு நன்றி.''

``மேற்குத் தொடர்ச்சிமலை?"

``இந்தப் படத்துல வேற மாதிரி ஒளிப்பதிவு பண்ணியிருக்கோம். இயக்குநர் லெனின் பாரதி படத்தை பிரமாதமா இயக்கியிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்துல சர்வதேச அளவில் நடந்த சினிமா விழாவில், இந்தப் படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு விருது கிடைச்சிருக்கு. இந்தப் படத்துக்காக எனக்கு வாய்ப்பு கொடுத்த லெனின் பாரதிக்கும் நன்றி.''