'மணிரத்னம் சார்.. ரொம்பநாளா உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிற ஒரு விஷயம்! அழகம் பெருமாள் பர்சனல் | Director, Actor Azhagm Perumal's Exclusive Interview about his career and director manirathnam's friendship

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (04/10/2017)

கடைசி தொடர்பு:10:27 (06/10/2017)

'மணிரத்னம் சார்.. ரொம்பநாளா உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிற ஒரு விஷயம்! அழகம் பெருமாள் பர்சனல்

சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருந்த இயக்குநர் அழகம் பெருமாளுக்கு 'தரமணி' பர்னபாஸ் கேரக்டர் கொடுத்திருக்கும் அடையாளத்தின் அழுத்தம் அதிகம். கொஞ்சம் கரடுமுரடாக இருந்தாலும் உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர்... என அவர் கடந்துவந்த பாதை ஏற்ற இறக்கங்களோடு இருந்தாலும், அழகாக இருக்கிறது. 

''பாலசந்தர், பாரதிராஜா காலத்திலேயும் மணிரத்னம் படங்கள் கவனிக்கப்படுது. பாலா - அமீர் - சசிகுமார் காலத்திலேயும் கவனிக்கப்பட்டுச்சு. கார்த்திக் சுப்பராஜ் காலத்துலேயும் கவனிக்கப்படுது. மணிரத்னத்தின் தொடர் வெற்றிக்கு என்ன காரணம்?"

"அடுத்த தலைமுறை இயக்குநர்கள் வரும்போதும், மணி சார் ஜெயிப்பார். ஏன்னா, சினிமாமேல அவர் வெச்சிருக்கிற காதலும், உழைப்பும் அளவிடமுடியாதது. இருபது வருடங்களுக்குப் பிறகு நாம என்ன பண்ணனும்னு இப்பவே யோசிச்சு வெச்சிருப்பார் அவர். எல்லா விஷயத்துலேயும் அப்டேட்டா இருப்பார். அவரைப் பார்க்கும்போது, 'என்னால எல்லாம் இப்படி இருக்கவேமுடியாது சாமீ'னு தோணும். யோசிச்சுப் பாருங்க... நான் ரெண்டு ஹீரோக்களை ஒரு படத்துல இணைக்கவே சிரமப்பட்டேன். அவர் படத்துல இன்னைக்கு நான்கு ஹீரோக்கள் நடிக்கப்போறாங்க. அவர் படத்துல நடிக்க எல்லோரும் ஆசைப்படுறாங்க. நடிகர், நடிகைகள் மட்டுமல்லாம டெக்னீஷியன்களும் மணி சார் படத்துல வொர்க் பண்ண விரும்புறாங்க. எல்லாத்துக்கும் ஒரே காரணம், அவர் உருவாக்குற சினிமாவும், அந்த சினிமாவுக்காக அவர் உழைக்கிற பெரும் உழைப்பும்தான்."

அழகம்பெருமாள்

''உங்களுக்கும், அவருக்குமான நட்பு?"

"யாருக்கும் கிடைக்காத ஸ்பெஷல் எனக்குக் கிடைச்சிருக்கு. நான் உதவி இயக்குநரா இருந்த காலத்துல பலபேர் படம் கிடைச்சுட்டா, அப்படியே போயிடுவாங்க. ஆனா, நான் ஒவ்வொரு விஷயத்தையும் மணிசார்கிட்ட சொல்வேன். சொல்லப்போனா, 'இயக்குநர் - உதவி இயக்குநர்'ங்கிற எல்லைக்குள்ள மட்டும்தான் நாங்க இருந்தோம்னா, கண்டிப்பா இல்லை. பிறகு எப்படினு கேட்டா, எனக்குப் பதில் தெரியலை. அவர் சொல்ற வேலையைச் செய்ற ஒரு தளபதியா நான் இருந்தேன். பலருக்கும் உதவி இயக்குநரா இருக்கும்போதுதான் பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும். ஆனா, நான் அவர்கிட்ட ராஜா மாதிரி இருந்தேன். எனக்கு வாய்ப்புகள் கிடைக்காதப்போவும் வசனம் எழுதுற வாய்ப்பைக் கொடுத்தார். பலமுறை சுத்தி இருக்கிறவங்க என்னைப்பத்தி ஏதாச்சும் மணிசார்கிட்ட தப்பாப் போட்டுக் கொடுத்துடுவாங்களோனு பயந்திருக்கேன். ஏன்னா, அப்பா, அம்மா இந்த வரிசைக்குப் பிறகு எனக்கு மணி சார்தான்." 

''சினிமா ரொம்ப மாறிடுச்சு. கவனிக்கிறீங்களா?"

''நிச்சயமா. 90-கள்ல பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் படங்கள்னு எல்லாத்தையும் பார்த்தோம். எல்லாமே ஒவ்வொரு அனுபவம் கொடுத்தது. இப்போ அப்படி இல்லை. எல்லோரும் கடிவாளம் கட்டுனமாதிரி ஓடிக்கிட்டு இருக்காங்க. பாலசந்தர், பாலுமகேந்திரா மாதிரியான இயக்குநர்கள் விட்டுட்டுப்போன மனித உணர்வுகளைப் பதிவு பண்ற இயக்குநர்கள் அத்தி பூத்த மாதிரிதான் முளைக்கிறாங்க. எப்போப் பார்த்தாலும் கத்தி, அருவாளைத் தூக்குறதும், வன்முறை, சாதியைக் காட்டுறதுமான படங்கள்தானே அதிகமா வருது. இதெல்லாம் எதையாவது பண்ணிட்டுப் பேசலாம்னு பார்க்குறேன்... சிலநேரங்கள்ல முடியலை. சொல்லிடுறேன்."

அழகம்பெருமாள்

"மணிரத்னம்கிட்ட சொல்லமறந்த, சொல்லணும்னு நினைக்கிற விஷயம் ஏதாவது?"

"சொல்றேன், கொஞ்சம் ஆச்சரியமாதான் இருக்கும். கிட்டத்தட்ட 27 வருடமா அவரோட டிராவல் பண்றேன். ஆனா, ஒருதடவைகூட அவர்கிட்ட மனசுவிட்டுப் பேசுனதில்லை. இந்தக் கேள்வி ஒரு வாய்ப்பா அமைஞ்சிருக்கு. ஏன்னா, நானும் அவரும் வேலை, வேலைனே சுத்திக்கிட்டு இருந்துட்டோம். எனக்கும், அவருக்குமான ஒரு ஆத்மார்த்தமான உரையாடல் இதுவரை நடந்ததில்லை. பலமுறை நான் அவர்கிட்ட கொஞ்சம் மனசுவிட்டுப் பேசுவோம்னு நினைப்பேன், அதுக்கான காலமும் சூழலும் இதுவரை அமைஞ்சதில்லை. ஆனா, அந்த ஆசை மட்டும் அப்படியே இருக்கு!"

''நடிகரா களமிறங்குன பிறகு, பல படங்கள் விறுவிறுனு நடிச்சிருக்கலாமே... ஏன் அப்படி எதுவும் நடக்கலை?"

"யாரும் தொடர்ச்சியா கூப்பிடலை, நானும் கேட்கலை... அவ்ளோதான். 'அலையாயுதே'ல ஆரம்பிச்சு, 'புதுப்பேட்டை', 'கற்றது தமிழ்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'தரமணி' இப்படிச் சில படங்கள் தரமா அமைஞ்சது. ஒரே ஒரு மெகா பட்ஜெட் படத்துல நடிச்சிடணும், முழுநீள கேரக்டர் பண்ணனும்னு அந்த ஏரியாவுக்கும் சில ஆசைகள் இருக்கு. முக்கியமா பாலா படத்துல நடிக்கணும். நான் 'தளபதி'யில உதவி இயக்குநரா இருந்தப்போ, அவர் பாலுமகேந்திரா சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தார். அவர் படத்துல நடிக்க ஒருமுறை சான்ஸ் வந்தது. சில கமிட்மென்ட்ஸ் இருந்ததுனால பண்ணமுடியாம போயிடுச்சு. அதுக்காக, எனக்கு நானே ஒரு ஸ்கிரிப்ட் எழுதிக்கிட்டு நடிச்சுடமாட்டேன், பயந்துடாதீங்க." 

''குடும்பத்தைப் பற்றி?"

"சினிமாவைத் தாண்டி என் ஊர், உறவுகளை நான் ரொம்ப ரசிப்பேன். மனைவி பிருந்தா என்னோட பிளஸ் மைனஸைக் கச்சிதமா சுட்டிக் காட்டிச் சொல்வாங்க. சமீபத்துல நான் நடிச்ச 'தரமணி' பர்னபாஸ் கேரக்டர் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அண்ணன் அக்ரி ஆபீஸர். அக்கா, தங்கச்சி, நான். இதுதான் என் குடும்பம்."

'' 'உதயா' படத்தை இயக்கும்போது நீங்க பார்த்த விஜய்க்கும், 'மெர்சல்'ல பார்க்குற விஜய்க்கும் என்ன வித்தியாசம் உணர்றீங்க?"

"சினிமாவுல நான் சிலரைப் பார்த்து ரொம்ப வியந்திருக்கேன், அதுல விஜய்யும் ஒருத்தர். அப்போ எப்படி இருந்தாரோ, அப்படியே இருக்கார். அவருக்கு இருந்த திட்டமிடல், வெறி, உழைப்பு... இதுதான் இன்னைக்கு அவரை இந்த இடத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்திருக்கு. எல்லோரும் சொல்வாங்க, அவருக்குப் பேக்ரவுண்ட் இருக்கு வந்துட்டார்னு. அப்படி இல்லை, குடும்பத்துல சர்ப்போர்ட் இருக்கிற எத்தனை பேர் இந்த உயரத்துக்கு வந்திருக்காங்க, யோசிச்சுப் பாருங்க! சமீபத்துல  'நீட்'டை எதிர்த்து இறந்துபோன அனிதா வீட்டுக்குப் போனார். அந்த மனசு எல்லோருக்கும் வராது. சமீபத்துல ஒரு நிகழ்ச்சியில கொஞ்சம் தயங்கித்தான் அவர்கிட்ட பேசுனேன். ஆனா, அவர் ரொம்ப சாதாரணமாதான் இருந்தார்."

அழகம்பெருமாள்

" 'மணிரத்னம்-ரஹ்மான்-வைரமுத்து கூட்டணிக்கு 25 வருடம்' இந்த டிராவல்ல உங்களுக்கான இடம் என்ன?"

''சிம்பிளா சொன்னா, ஒரு ரயில் பயணம். அவங்கெல்லாம் ஏ.சி., ஃபர்ஸ்ட் கிளாஸ்ல வந்துக்கிட்டு இருந்தாங்க, நான் சாதாரண பெட்டியில் டிராவல் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனா, அவங்க போன ரயில்லதான் நானும் போனேன்னு நினைக்கிறப்போ சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு!"

'' 'தரமணி' பர்னபாஸ் கேரக்டருக்கு எப்படித் தயாரானீங்க?"

''ஒரு அறையக் கொடுத்து, 'இந்த ரூமுக்குள்ள நீங்க எதையாவது உடைச்சுப் போடுங்க, கிழிச்சு எறிங்க... ஆனா, கதைக்குத் தேவையான உணர்வு எனக்கு வேணும்'னு சொல்வார். அவர் கொடுத்த ஃபிரீடம்தான் அந்தக் கேரக்டருக்கான ஒரு வலிமையக் கொடுத்தது. அவர்கிட்ட ஒரு கட்டுப்பாடு இருக்காது. அது எனக்குப் பிடிச்சது. 'பர்னபாஸ் வாக்கு, பைபிள் வாக்குல்லே...'னு நான் பேசுன வசனம் பேப்பர்ல இல்லை... அவர் கொடுத்த சுதந்திரத்துனால ஆட்டோமேட்டிக்கா வந்த வசனம் அது."

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்