வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (28/10/2017)

கடைசி தொடர்பு:08:04 (28/10/2017)

“இதுதான் உங்கள் கடைசிக் கச்சேரியா?” - பாடகி எஸ்.ஜானகி பதில் #VikatanExclusive

எஸ்.ஜானகி

பிரபலப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் இசைக் கச்சேரி நிகழ்ச்சி ஒன்று, இன்று (சனிக்கிழமை) மாலை மைசூரில் நடைபெறுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கச்சேரியில் ஜானகி பாடப்போகிறார் என்பதால் இந்நிகழ்ச்சிக்குப் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே 'எஸ்.ஜானகி பாடும் கடைசிச் கச்சேரி' என இந்த நிகழ்ச்சி குறித்து செய்திகள் உலாவருகின்றன. இதுகுறித்து உண்மை அறிய எஸ்.ஜானகியிடம் பேசினோம். 

எஸ்.ஜானகி

"சினிமாப் பின்னணிப் பாடல், மேடை நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது உள்ளிட்ட இசை சார்ந்த எல்லா விஷயங்களிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டேன் எனப் பல மாசங்களுக்கு முன்னாடியே அறிவிச்சுட்டேன். அதன்படி, எந்தப் படங்களுக்கும் நான் ஒப்புக்கறதில்லே; எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கறதில்லே. என் ஹைதராபாத் வீட்டுல அமைதியா, மகிழ்ச்சியா வாழ்ந்துட்டிருக்கேன். 'நீங்க மீண்டும் பாடணும்; கச்சேரி செய்யணும்'னு தொடர்ந்து நிறைய வேண்டுகோள் வந்துட்டுதான் இருக்கு. இந்நிலையில், இந்த மைசூரு கச்சேரி இப்போ புதுசா ஒப்புக்கிட்டதில்லே. பத்து வருஷத்துக்கு முன்னாடி பேசப்பட்ட புரோகிராம். அந்தக் குழுவினர் தொடர்ந்து என்கிட்ட கேட்டுட்டே இருந்தாங்க. கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாதுனு இப்போ சம்மதிச்சேன். கர்நாடக மாநிலம் முழுக்க கச்சேரி பற்றி நிறைய விளம்பரங்கள் செய்திருக்காங்க. 'ஜானகியின் கடைசிக் கச்சேரி'னு ஒரு பேச்சும் பரவியிருக்கு. அது, கிட்டத்தட்ட உண்மையாகவும் அமையலாம்" என டுவிஸ்ட் வைக்கும் எஸ்.ஜானகி, தொடர்ந்து பேசினார். 

“இப்போ செய்யப்போகும் கச்சேரியை மையப்படுத்தி நிறைய வதந்திகள் வருது. நான் 1957-ம் வருஷம் ஃபீல்டுக்கு வந்தேன். பல மொழி சினிமாக்களில் பிஸியா இருந்தபோதும் 1960-களிலிருந்து மேடைக் கச்சேரியும் பண்ணிட்டிருக்கேன். ஆனால், மிக்குறைந்த வயசிலேயே நான் கச்சேரி பண்ணினதாகவும், 'அந்தப் பாடகருடன் பாடினேன். இந்தப் பாடகருடன் பாடினேன்'னு நான் சொன்னதாகவும் பொய்யான தகவல்களைப் பரப்பிட்டே இருக்காங்க. துரை ராஜ் என்ற இசையமைப்பாளருக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, சென்னையில் ஒரு பாடல் பாடினேன். அந்தப் பாடல் இப்போதுதான் ரிலீஸாகுது. அதை இப்போ பாடினதா சொல்லுறாங்க. நான் மறுபடியும் சொல்றேன். இப்போ புதுசா நான் எந்தக் கச்சேரிக்கும் ரெக்கார்டிங்குக்கும் ஒப்புக்கிறதில்லே. 2000-ம் வருஷத்துக்குப் பிறகு நான் கச்சேரி செய்றதைக் குறைச்சுகிட்டேன். அந்தக் காலகட்டங்கள்ல, 'நீங்க தொடர்ந்து கச்சேரி செய்யணும்'னு நிறையப் பேர் கேட்டாலும், 'கொஞ்ச காலம் கழிச்சு தக்க சூழல் அமைஞ்சா பார்க்கலாம்'னு சொல்லிவந்தேன். பழைய வாக்குறுதிப்படி தவிர்க்கமுடியாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே கச்சேரி பண்ணுவேன்னு நினைக்கிறேன். ஆனால், அப்படி ஒரு சூழல் நடக்குமான்னும் என்னால் உறுதிகொடுக்க முடியாது.

எஸ்.ஜானகி

இதுக்கு நடுவில், 'நீங்க நல்லபடியா கச்சேரி செய்யணும்'னு எக்கச்சக்க வாழ்த்துகள் வந்துட்டிருக்கு. கடந்த சில நாள்களாக ரிகர்சலில் இருக்கிறதால், அதையெல்லாம் என்னால் சரியாகப் பார்க்கக்கூட முடியலை. எனக்கு வாழ்த்துச் சொல்லிய ரசிகர்கள், சினிமா மற்றும் இசைத் துறையைச் சார்ந்த எல்லோருக்கும் நன்றி. என் ரசிகர்களுக்கு முக்கியமா நான் சொல்லிக்கிற ஒண்ணு... எனக்கு உடம்பு சரியில்லை; நான் இறந்துட்டேன்னு சமீப காலங்களில் பலமுறை வதந்தி வந்திடுச்சு. என் மேல அளவுகடந்த அன்பு கொண்ட ரசிகர்களின் அன்பினால் நான் ஆரோக்கியமா வாழ்ந்துட்டிருக்கேன். என் ரசிகர்களுக்கு நன்றி" என்கிறார் எஸ்.ஜானகி


டிரெண்டிங் @ விகடன்