Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ ‘சர்வம் தாள மயம்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்பெஷல் எக்ஸ்பெரிமென்ட்!” - ரகசியம் சொல்லும் ராஜீவ் மேனன்

Chennai: 

'மின்சாரக் கனவு', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், 18 ஆண்டுகளுக்குப் பிறகு 'சர்வம் தாள மயம்' என்ற படத்தை இயக்கவுள்ளார்.

“இந்த 18 வருடங்களில் இன்னமும் சில படங்கள் பண்ணியிருக்கலாமேனு தோணும். நானும் தொடர்ந்து படங்கள் பண்ண முயற்சி பண்ணிட்டேதான் இருந்தேன். ஆனா, ஸ்லிப் ஆகிட்டே இருந்துச்சு. இனிமே மிஸ் ஆகாது. சீக்கிரம் படம் பண்ணுறேன்" என தம்ஸ்அப் காட்டிப் பேசுகிறார் இயக்குநர் ராஜீவ்மேனன். அடர்ந்த தாடி, முறுக்கு மீசை என செம ஸ்மார்ட் ஆக இருக்கிறார். 

ராஜீவ் மேனன்

“உங்களை இந்த இடைப்பட்ட காலத்தில் யாருமே படம் இயக்க அழைக்கவில்லையா?”

“ம்ம்.. நிறைய பேர் கூப்பிட்டாங்க. ஆனா, சரியான சூழல் அமையலை. என்னைப் பொறுத்தவரை, கடந்து போன காலத்தைப் பற்றி பேசிப் பயனில்லை. இனி நாம பண்ணப்போற படங்களும், செய்யப் போற வேலையும்தான் முக்கியம்னு நினைக்கிறேன்."

“ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக இருந்துட்டு இப்ப விளம்பர படங்களில் மட்டும் அதிகக் கவனம் செலுத்துவது உங்களுக்குத் திருப்தியானதாக இருக்கிறதா?”

"நான் ஒரு பெர்ஃபெக்ட் போட்டோ எடுத்துட்டு அதை ஃப்ரேம் பண்ணி மாட்டினாலே எனக்குள்ள திருப்தி ஏற்படும். நான் ஒரு புது விஷயம் செய்யும்போது அதில் நான் ஒரு புதுமையான விஷயத்தை கற்றுக்கொள்ளணும்னு நினைப்பேன். அதுதான் என் நோக்கம். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான விஷயத்தை பண்ணினால் எனக்கே போர் அடிச்சுடும். நான் எந்த வேலை செஞ்சாலும் அதை என்ஜாய் பண்ணி செய்யணும்னு நினைக்கறேன்."

“ ‘சர்வம் தாள மயம்' படத்தின் ஷூட்டிங் எப்போ ஆரம்பிக்கிறீங்க?”

“சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணணும். வேலைகள் எல்லாம் பரபரனு நடந்திட்டிருக்கு. அந்தப் படத்துல ஜி.வி.பிரகாஷ் ஒரு யங் மியூசிசியனாக வருவார். ஒரு இளம் கலைஞன் எப்படி படிப்படியா முன்னேறுகிறான் என்பதுதான் படத்தின் கதை."

ராஜீவ் மேனன்

"இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் கதை கேட்டுட்டு என்ன சொன்னார்?"

"அவருக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. படத்தோட எல்லாப் பாடல்களையும் ரஹ்மான் இப்பவே கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டார். ஏன் படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் காட்சி வரை அத்தனை சீனுக்கும் பேக் ரவுண்ட் மியூசிக் கூட பண்ணிக்கொடுத்துட்டார். நாங்க இனி ஷூட்டிங் போக வேண்டியதுதான் பாக்கி."

“மியூசிசியன் கதை என்பதால் ஜி.வி.பிரகாஷை செலக்ட் பண்ணீங்களா?"

"ஆமாம். அவர்தான் இந்தக் கதைக்குச் சரியா இருப்பார்னு நினைச்சேன். இந்தக் கதைக்கு ஜி.வி டோட்டலா வேற மாதிரி சேஞ்ச் ஆக வேண்டியிருக்கு. நிச்சயம் அவர் கேரியர்ல முக்கியமான படமா இது இருக்கும்."

"உங்க இன்ஸ்டிட்யூட்ல புதுசாக ஆக்டிங் கோர்ஸ் ஆரம்பிச்சு இருக்கீங்களே..."

"ஆமாம். மைண்ட் ஸ்கிரீன் இன்ஸ்டிட்யூட் ஆரம்பித்து 10 வருடம் ஆச்சு. ஒவ்வொரு ஐந்து வருடத்திலும் ஒரு புது புராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணுவோம். ஒளிப்பதிவு, டைரக்‌ஷன் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டிங் கோர்ஸ் தொடர்ந்து இப்ப ஆக்டிங் கோர்ஸ் தொடங்கியிருக்கோம்.  எங்க இன்ஸ்டிட்யூட்ல கற்றுக்கொண்ட பலர் பல இடங்களிலும் இன்டிபென்டன்ட் ஃப்லிம் எடுத்துட்டு இருக்காங்க. டைரக்‌ஷன் கோர்ஸ் முடிச்ச பலரும் இயக்குநர் ஆகும் முயற்சியில் இருக்காங்க. ஷார்ட் டேர்ம் கோர்ஸ் ஆக்டிங்ல படிச்சவங்க நிறைய பேர் நடிச்சிட்டு இருக்காங்க. 'தரமணி' படத்துல ஹீரோவாக நடிச்சவர் இங்க படிச்ச மாணவர்தான். எப்படி ஆக்டிங் டீச் பண்ணினால் வொர்க் அவுட் ஆகும் என்பதைப் பார்த்துப் பார்த்து சிலபஸ் ரெடி பண்ணியிருக்கோம், நானும் நாசர் சாரும். 

ஒரு புதுமையான சினிமாவுக்கு ஒரு புதுமையான டீச்சிங் தேவைப்படுது. இப்ப சினிமாவே ஒட்டுமொத்தமா டிஜிட்டலுக்கு மாறிட்டு இருக்குது. ஒரு நடிகருக்கும் அது சம்பந்தபட்ட நாலேஜ் இருக்கணும். அதுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த இன்ஸ்டிட்யூட்."

ராஜீவ் மேனன்

"சினிமாத் துறை சார்ந்த படிப்பு படிச்ச எல்லாருமே சக்சஸ் ஆக முடியலையே... மிக சொற்பமானவர்களே இங்க ஜெயிக்க முடியுதே?"

"நான் இன்ஸ்டிட்யூட்ல படிச்சு முடிக்கும்போது.. ஒண்ணு தமிழ் சினிமாவுக்குப் போகலாம் அல்லது தூர்தர்ஷனில் வேலைக்கு ஜாயின் பண்ணலாம். ஆனா, இன்னைக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிச்சு இருக்கு. சீரியல், வெப் சீரியல், வைரல் வீடியோஸ், வெட்டிங் வீடியோகிராபினு எவ்வளவோ வாய்ப்புகள் புதுசா உருவாகியிருக்கு. அதுமட்டுமல்லாமல் வெற்றி பெற வேண்டும் என்பதில் அந்தந்த நபர்களின் முயற்சியும் உழைப்பும் அடங்கியிருக்கு." 

"சூழலுக்கு ஏற்றவாறு அதைப் புரிஞ்சுட்டு நடிக்கறவன்தான் நடிகன்னு சொல்லுவாங்க. ஆனா, இப்ப நடிப்புக்கு என பிரத்யேகமாக பயிற்சிகள் எல்லாம் அவசியமா?"

"முன்னாடி அழகாக இருப்பவங்கதான் நடிப்பாங்க. உயரமாகவோ அல்லது குட்டையாகவோ இருக்கிறவங்கதான் காமெடி ரோல் பண்ணுவாங்க. கொஞ்சம் முரட்டுத்தனமான ஆளு வில்லனாக நடிப்பாங்க. இப்படிதான் நடிகர்களின் தேர்வு முன்னாடி இருந்தது. ஆனா, இப்போ எல்லாமே மாறிட்டு இருக்கு. ஸ்மார்ட்டா இருக்கிற ஒரு பையன் வில்லனாக நடிக்க முடியும். இப்ப எல்லாம் ஒரு கேரக்டரை திரும்பத் திரும்பப் பார்க்கும்போது பிடிக்க ஆரம்பிச்சுடும். இப்ப இந்தியன் கிரிக்கெட் டீம் எடுத்துகிட்டீங்கன்னா... முன்னாடி இருந்த கிரிக்கெட் டீமையும், இப்ப இருக்கும் கிரிக்கெட் டீமையும் பார்த்தாலே இந்த வித்தியாசத்தை உணர முடியும். இப்ப எல்லாரும் அழகா ஸ்டைலா மாறியிருக்காங்க. 

ஒரு விளையாட்டுலயே இவ்வளவு மாற்றம்னா... சினிமால எவ்வளவோ மாறியிருக்கு. இங்க  சினிமா மாறிட்டே இருக்கு. கதைக்களம் மாறுது. ரியலிஸ்டிக்கா படம் எடுக்கிறாங்க. அந்த ரியல் லைஃப் மனுஷங்களோட மேனரிஷத்தை கேப்சர் பண்ணணும்னா இதுபோன்ற நடிப்புப் பயிற்சி நிச்சயம் அவசியம். நல்லா டான்ஸ் ஆடுறாரு, ஜிம்பாடியா இருக்கார் என்பதால் யாருக்கும் உடனே வாய்ப்புத் தர மாட்டாங்க. அதுக்கும் மேல திறமை தேவைப்படுகிறது."

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்