Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயின் இயக்குநர் ஆசை... சேரனுடன் சண்டை... பாலாஜி சக்திவேலின் நட்பு..! - நாஸ்டாலஜி நினைவுகள்

“என்னுடைய அப்பாவுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்ற ஒரு கனவு இருந்தது. அவர் இரண்டு படங்களை இயக்கினார். ஆனால், இரண்டு படங்களும் வெளியாகவே இல்லை. அந்த வருத்தம் அப்பாவைவிட என்னிடம் அதிகமாகவே இருக்கிறது. அதனால் சின்ன வயதிலிருந்தே இயக்குநராக வேண்டும் என்கிற கனவு எனக்குள் அதிகம். அதனாலே சினிமாவைத் தேர்ந்தெடுத்து வந்தேன்'' என்று பேச ஆரம்பிக்கிறார் 'காதல்', 'வழக்கு எண் 18/9' படத்தின் ஒளிப்பதிவாளரும் 'கோலி சோடா', 'பத்து எண்றதுக்குள்ள' படத்தின் இயக்குநருமான விஜய் மில்டன். தற்போது 'கோலி சோடா 2' படம் எடுத்துக்கொண்டிருக்கும் விஜய் மில்டனிம் பேசினோம்.

விஜய் மில்டன்

“நான் பிறந்தது திருநெல்வேலி. வளர்ந்தது எல்லாம் சென்னை. அப்பா பிரபல பத்திரிகையில் எடிட்டராக இருந்தார். அவருக்குச் சின்ன வயதிலிருந்தே இயக்குநராக வேண்டும் என்ற ஆசையிருந்தது. 'சித்திரம் பேசுதடி', 'இதயம் தேடும் உதயம்' என்று இரண்டு படங்களை இயக்கினார். அப்போது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போதே அப்பாவுடன் ஷூட்டிங் போவேன். எப்போதும் சினிமாவைப் பற்றியே வீட்டில் பேசிக்கொண்டிருப்பார் அப்பா. அதனால் சினிமா மீதான காதல் எனக்கு சற்று அதிகமாகவே இருந்தது. 

எல்லாப் பசங்களுக்கும் அப்பாதான் ஹீரோ. எனக்கும் அப்பாதான் ஹீரோ. அப்பாவுடைய இரண்டு படங்கள் ரிலீஸாகவில்லை என்ற வருத்தம் எனக்குள்ளே அதிகமாகவே இருந்தது. ப்ளஸ் டூ வில் நல்ல மார்க் எடுத்திருந்ததால் வீட்டில் மெடிக்கல் படிக்கச் சொன்னார்கள். இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையை வீட்டில் சொல்லிவிட்டேன். அந்த நேரத்தில் 'ஊமைவிழிகள்' படம் ரிலீஸானது. அந்தப் படம் எனக்குள்ளே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

அதனாலே ப்ளஸ் டூ முடித்தவுடன் சென்னை ஃப்லிம் இன்ஸ்டிட்யூட்டில் படிப்பதற்காக விண்ணப்பித்தேன். டைரக்டருக்கு படிக்கணும்னா முதலில் டிகிரி ஏதாவது முடித்திருக்கணும்னு சொன்னார்கள். மூன்று வருடம் டிகிரி படித்துவிட்டு திரும்பவும் டைரக்‌ஷன் படிக்க நிறைய வருடங்கள் செலவாகும்னு யோசித்தேன். எனக்கும் அத்தனை வருடங்கள் படிக்க பொறுமையில்லை. 

அதனால் ப்ளஸ் டூ முடித்தவர்கள் என்ன படிக்கலாம்னு பார்த்தபோது ஒளிப்பதிவு, எடிட்டிங் இதெல்லாம் இருந்தது. அப்போது அப்பா, ''இயக்குநருக்கு கேமராதான்டா முக்கியம், நீ கேமரா கத்துக்கோ. டைரக்டஷன் நான் சொல்லித்தாரேனு''னு சொன்னார். உடனே கேமராவைப் பத்தி படிக்க ஆரம்பித்தேன். ஆனால், அப்போதும் கேமராவைவிட இயக்குநர் எப்படி ஆக வேண்டும் என்றுதான் தேடிப் படிப்பேன். டைரக்‌ஷன் படிக்கிற பசங்ககூடதான் சுத்திக்கிட்டு இருப்பேன். இயக்குநர் மேல் எனக்கு இருந்த காதல் அப்படியேதான் இருந்தது. 

படித்து முடித்தவுடன் என்னுடைய முதல் படம் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அருண் விஜய் ஹீரோவா நடித்த 'காத்திருந்த காதல்'  படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். ஒளிப்பதிவாளராக எனக்கு வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. 

விஜய் மில்டன்

அந்தப் படம் பண்ணி முடித்தவுடனே என்னுடைய இரண்டாவது படம் பெரிய ஹீரோ படமாகவே அமைந்தது. அதுதான் 'ப்ரியமுடன்' படம். விஜய் ஹீரோ. அந்த நேரத்தில் விஜயும் நானும் நல்ல க்ளோஸ். ரொம்ப ஜாலியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் இருப்போம். ப்ரியமுடன் படம் பண்ணும்போது விஜய் சின்ன பையன். அதனால் நிறைய லூட்டி பண்ணுவார். இரண்டு பேரும் சேர்ந்தாலே கொஞ்சம் அதிரடியாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் விஜய் என்னிடம் அடிக்கடி, ''ண்ணா எனக்கு ஆக்டிங்ல ஆர்வம் கிடையாது. 2000 வது வருஷம் வரைக்கும்தான் நடிப்பேன். அதற்குப் பிறகு நான் டைரக்டர் ஆகிடுவேன்''னு சொல்வார். ஒரு வேலை அவர் அப்போது இயக்குநராக ஆகியிருந்தால் நான் விஜய்யிடம் ஒளிப்பதிவாளராக வேலை செய்திருப்பேனு நினைக்கிறேன். 

விஜய்க்கு ஒளிப்பதிவாளர் ஜீவாவை ரொம்பப் பிடிக்கும். அந்த நேரத்தில் ஜீவா பீக்கில் இருந்தார். அதனால் எப்போதும் என்னிடம் ஜீவாவைப் பற்றிச் பேசிக் கொண்டேயிருப்பார். விஜய்யுடன் 'ப்ரியமுடன்', 'நெஞ்சினேலே', 'நிலாவே வா' என் மூன்று படத்தில் வேலைப் பார்த்தேன். மறக்க முடியாத நினைவுகள் விஜய்யுடன் நிறைய இருக்கு. 

என் வாழ்க்கையில் “ஆட்டோகிராப்” படத்தை மறக்க முடியாது. அந்தப் படத்தின் கதையைத் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து ஹீரோக்களிடம் நானும் சேரனும் போய்தான் சொன்னோம். ஆனால், யாரும் அந்தப் படத்தில் நடிக்க அப்போது தயாராக இல்லை. அப்போதுதான் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் ''டேய் இந்தக் கதையை நான் பண்ணுறேன்'' அப்படினு ஹீரோவாக நடித்தார் சேரன். 

இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த அந்தக் கேரளா போஷனைதான் முதலில் ஷூட் பண்ணினோம். கேரளாவில் 65 நாள்கள் தொடர்ந்து படத்துக்கான ஷூட் நடந்தது. கேரளா போஷனை மட்டும்தான் படத்துக்காக நான் ஷூட் பண்ணினேன். மத்தப் போஷனுக்கு வேறு சிலர் ஒளிப்பதிவாளராக வேலை செய்தார்கள். அதற்குக் காரணம் எனக்கும் சேரனுக்கும் கேரளா போஷன் எடுக்கும்போது பெரிய சண்டை. அதனால், அந்தப் படத்தைத் தொடர்ந்து என்னால் ஷூட் பண்ண முடியாமல் போய்விட்டது. ஆனால், என்னுடைய முதல் படம் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தைச் சேரன்தான் தயாரித்தார்.

நான் ஒளிப்பதிவாளராக வேலை பார்க்கும் படங்களில் நடிக்கும் எல்லா ஹீரோக்களிடமும் கதை சொல்லிக்கொண்டேதான் இருப்பேன். என்னை ஒரு படத்துக்கு ஒளிப்பதிவாளராக புக் செய்தால்கூட அந்த இயக்குநரிடம் கதை டிஸ்கஷன் பண்ணுவேன். எனக்குக் கதை டிஸ்கஷனில் சுதந்திரம் கொடுக்கிற இயக்குநர்கள் படத்தில் மட்டும்தான் நானும் வேலை பார்ப்பேன். ஏன்னா, எனக்கு டைரக்‌ஷன் தான் மூச்சாகயிருந்தது.

''சாமுராய் படத்தின்போதுதான் எனக்கு பாலாஜி சக்திவேலின் அறிமுகம் கிடைத்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ''மூங்கில் காடுகளே'' பாடலை மட்டும்தான் நான் ஷூட் பண்ணினேன். அந்தப் பாடலின்போது படத்தின் ஒளிப்பதிவாளர் வேறு இடத்தில் பிஸியாக மாட்டிக் கொண்டார். அதனால் அந்தப் பாடலின் ஷூட்டுக்கு பாலாஜி சக்திவேல் கே.வி.ஆனந்த் சாரை கேட்டிருக்கிறார். அப்போது கே.வி.ஆனந்த் ''மில்டன்னு ஒரு பையன் நல்லா பண்ணுவான்'' என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். அந்தப் பாடலின் ஷூட் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதன் பிறகு பாலாஜி சக்திவேல் எனக்கு நல்ல நண்பராகிவிட்டார்.

'சாமுராய்' படத்துக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்', 'வழக்கு எண் 18/9' படத்துக்கும் நான்தான் ஒளிப்பதிவாளர். இந்தப் இரண்டு படத்திலும் வித்தியாசமாக சில விஷயங்களைச் செய்தோம். அதாவது 'காதல்' படத்தின் பல காட்சிகளை லைட்டே இல்லாமல்தான் ஷூட் செய்தோம். அப்போது டிஜிட்டல் கிடையாது. ஃபிலிம் ரோல் கேமராதான். ஃபிலிமுக்கு லைட்டே இல்லாமல் ஷூட் செய்வது கொஞ்சம் இல்லை நிறையவே கஷ்டம். அதிலும் நாங்கள் லைட் சரியாக விழும்போது ஷூட் செய்ய மாட்டோம். லைட் தப்பா விழுகிற ஆங்கிலை செலக்ட் பண்ணி ஷூட் செய்வோம். அது ரொம்ப வித்தியாசமாக இருந்தது. 

ஷங்கர் சார் 'காதல்' படத்தின் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு, ’ரொம்ப நல்லாயிருக்கு இப்படியே பண்ணுங்கள்’னு சொன்னார். அதற்கு பிறகுதான் பாலாஜிக்கு நம்பிக்கையே வந்தது. 'காதல்' திரைப்படத்தில் வழக்கமான பல விஷயங்களை உடைத்திருப்போம். எது தப்போ அதைதான் அந்தப் படத்தில் முதலில் செய்வோம். ஒரு இடத்துக்குப் போனால் ஃபர்ஸ்ட் என்ன ஷாட் வைக்கலாம்னு பாலாஜி சொல்வார். அடுத்து நான் சொல்வேன். கடைசியில் இது இரண்டுமே வேணாம்னு நானும் பாலாஜியும் பேசி முடிவெடுத்து மூன்றாவதாக ஒரு ஷாட் வைப்போம். அதுதான் படத்தில் ஒர்க் அவுட் ஆனது. 

விஜய் மில்டன்

அதேபோல்தான் 'வழக்கு எண் 18/9' படம் பண்ணும்போது பாலாஜியிடம், ''இந்தப் படத்தை கேமராவே இல்லாமல் எடுப்போமா''னு கேட்டேன். ''என்னடா சொல்றா எப்படிடா கேமராவை இல்லாமல் எடுக்க முடியும்'னு பாலாஜி கேட்டார். 

''இல்லை பாலாஜி, இப்போது எல்லாம் செல்போனிலேயே 5 மெகா பிக்சல் கேமரா வந்துருச்சு. போனில் ட்ரை பண்ணலாம் பாலாஜி’’னு சொன்னேன். பாலாஜிக்கு நம்பிக்கையே இல்லை ''போனில் எப்படிடா''னு சொன்னார். ட்ரை பண்ணலாம்னு போனில் ஒரு ட்ரை ஷூட் எடுத்தோம். அப்போது அது சம்பந்தமாக நானும் பாலாஜியும் நிறைய ஆராய்ச்சி செய்தபோது, கேனானில் 5Dனு ஒரு கேமரா வந்திருக்கிறதை தெரிஞ்சிக்கிட்டோம். அதில் ஸ்டில் மட்டும் இல்லாமல் வீடியோ ஆப்சனும் இருந்தது. அதுவும் இருபது மெகா பிக்சல். அதனால் அதை எடுத்து ட்ரை பண்ணினோம். கொஞ்சம் பெரிய காட்சிகள் எல்லாம் எடுக்க கஷ்டமாகயிருந்தது. அதனால் ஸ்க்ரிப்ட்டில் சில விஷயங்களை அதற்கு ஏற்ற மாதிரி பாலாஜி மாற்றினார். 

சின்ன கேமராவில் படம் எடுக்குறது தெரிந்து நிறையப் பேர் எங்களைத் திட்டினார்கள். அதிலும் என் ஃப்ரெண்ட் ஒளிப்பதிவாளர் மதி, ''டேய் மச்சான் ரிஸ்க் வேண்டாம். இதோட உன் ஃபிலிம் கேரியரே போயிரும். அதனால் ஷூட் செய்யும்போது உன் சின்ன கேமராவிலும் ஷூட் பண்ணு. அதே நேரத்தில் பெரிய கேமராவிலும் ஷூட் பண்ணு. அப்போதுதான் ஒன்னு ஒர்க் அவுட் ஆகலைனாலும் இன்னோனு கை கொடுக்கும்'' அப்படினு சொன்னான். நான் கேட்கவே இல்லை. பெரிய கேமராவை கையில்கூட தொடவே இல்லை. என்னோட இந்த முயற்சியும் நல்லா ஒர்க் அவுட்டாச்சு. எனக்கும் பாலாஜி சக்திவேலுக்கும் நட்பு இன்னும் நிறைய வளர்ந்திருச்சு. பாலாஜி அடுத்து டைரக்டர் பண்ணப்போற படத்தை நான்தான் தயாரிக்கிறேன்.

இயக்குநராய் எனது இரண்டாவது இன்னிங்ஸை கோலி சோடா படத்தின் மூலமாகத் தொடங்கினேன். 13 வயதேயான நான்கு பேர் தனக்கான அங்கீகாரம் கிடைக்க போராடுவதுதான் படத்தின் ஸ்கிரிப்ட். இந்தப் படத்தின் ப்ளஸாக நான் நினைக்கும் விஷயமே பதிமூணு வயசு பசங்களை ஃபிக்ஸ் பண்ணியதுதான். பலபேர் என்னிடம், ''டேய் பதிமூணு வயசு பசங்களை வைத்து படம் எடுத்தால் யாருமே பார்க்கமாட்டார்கள். வேண்டாம்''னு சொன்னாங்க. பட், பதிமூணு வயசு பசங்கதான் படம் ஹிட் அடிக்கக் காரணம். 

விஜய் மில்டன்

முக்கிய கேரக்டரில் நடிக்கும் பசங்க எல்லாரும் ஈசியா கிடைச்சுட்டாங்க. பட், ஹீரோயினுக்கு ஃப்ரெண்டா வர கேரக்டருக்காக நிறையப் பேரை பார்த்தேன். யாரையும் பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் பைக்கில் போயிட்டு இருந்தப்போ, சீதா பொண்ணு நடந்து போயிட்டு இருந்தது. எனக்கு டக்குனு தோணுச்சு, இந்தப் பொண்ணு படத்துக்கு கரெக்டா இருக்குனு. உடனே பைக்கில் அந்தப் பொண்ணை ஃபாலோ பண்ணிட்டு போனேன். வண்டியை அந்தப் பொண்ணு முன்னாடி நிறுத்தி, ''வணக்கம் மா... என் பேர் விஜய் மில்டன், உன் பேர் என்ன மா'' அப்படினு கேட்டேன். உடனே அந்தப் பொண்ணு ''தூ''னு துப்பிட்டு போயிருச்சு. 

நான் அப்பவும் விடல. அந்தப் பொண்ணு பின்னாடியே ஒரு கிலோ மீட்டர் பைக்கை தள்ளிக்கிட்டே போனேன். அந்தப் பொண்ணு ஒரு வீட்டுக்குள்ள போயிருச்சு. அந்த வீட்டின் வாசலில் அன்பரசன் பி.ஏ.பி.எல்-னு போட்டிருந்தது. அட்ரெஸை மட்டும் நோட் பண்ணிக்கிட்டு அடுத்த நாள் என் வக்கீல் ஃப்ரெண்டை கூப்பிட்டுக்கிட்டு அந்த வீட்டுக் கதவை தட்டினேன். ஒருத்தர் வந்தார், அவர்கிட்ட நடந்தது எல்லாம் சொன்னேன். அவர் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு, ''என் வீட்டில் எந்தப் பொண்ணும் இல்லை. என் வீட்டுக்குப் பின்னாடி ஒரு ஒண்டிக் குடித்தனம் இருக்கு. அங்க கேட்போம்''னு கூப்பிட்டுப் போனார். அங்க பார்த்தால் நான் பார்த்த பொண்ணு இல்லை. வேறு ஒரு பொண்ணுதான் வந்தது. ''என்னடா இப்படி ஒரு சோதனை’’னு நினைச்சா, உடனே அந்த வீட்டு அம்மா காலையில் சீதா வந்துட்டு போனா ஒரு வேலை அவளா இருக்கும்னு சீதா வீட்டு அட்ரெஸ் கொடுத்தார்கள். 

உடனே என் அசிஸ்டென்ட் டைரக்டரை சீதா வீட்டுக்கு அனுப்பினேன். ''எப்படியாவது பேசி அந்தப் பொண்ணை நடிக்கக் கூப்பிட்டு வா’’னு சொன்னேன். அவனும் பல முன்னேற்பாடுடன் அங்கே போய் விஷயத்தை சொல்லியிருக்கிறான். உடனே அவங்க அம்மா, “விஜய் மில்டன் சாரை எனக்கு ரொம்ப நல்ல தெரியுமே''னு சொல்லியிருக்காங்க. எப்படினு நம்ம ஆளு டவுட்டோட கேட்க “நான் லிங்குசாமி வீட்டில்தான் பாத்திரம் கழுவுறேன். அதனால் விஜய் மில்டன் சார் அங்க வரப்போ பாத்திருக்கேன்னு சொல்ல, எங்களுக்கு ஒரே சிரிப்பு. ஒரு வழியா சீதாவைக் கண்டுபிடிச்சி படத்தில் நடிக்க வைத்துவிட்டேன்.

கோலிசோடா படம் எடுக்கும்போதே அந்தப் பசங்ககிட்ட, ''பார்ட் 2 ஸ்க்ரிப்ட் ரெடியா இருக்குடா... நீங்க பெரிசா வளர்ந்ததுக்கு அப்புறம் எடுப்பேன்''னு சொல்லியிருந்தேன். பட், இப்போது அந்தப் பசங்க யாரும் இந்த ஸ்க்ரிப்டில் இல்லை. ஏன்னா, பசங்க இன்னும் வளரவே இல்லை. 'கோலி சோடா 2' படத்தின் ஸ்க்ரிப்ட், அடையாளம் கிடைத்த பசங்க எப்படி அதைத் தக்க வைத்துக்கொள்ள போராடுறாங்க அப்படிங்குறதுதான். சமுத்திரக்கனி 'கோலி சோடா' சீதாவின் தொடர்ச்சியாகப் பண்ணியிருக்கார். அதில் சீதா பண்ணுன கேரக்டர் இதில் சமுத்திரக்கனி. 'ஆண் தேவதை' படம் பண்ணும் போது சமுத்திரக்கனி எனக்கு அறிமுகமானார். அவரிடம் இந்தக் கதை சொன்னவுடன் அவர் ஓகே சொல்லிவிட்டார். 

கோலி சோடா

இந்தப் படத்தில் எனக்கு ஹாப்பியான விஷயம், கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பது. அவரை டைரக்ஷன் பண்ணவேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாளாகவே இருந்தது. அவரிடம் முதலில் இந்தப் படத்துக்கு வாய்ஸ் கொடுக்கக் கூப்பிட்டேன். அவர் அதையே ரொம்ப இன்வால் ஆகி செய்திருந்தார். அப்புறம் இந்தப் படத்தின் போலீஸ் கேரக்டர் பற்றிச் சொன்னவுடன் ஆர்வமாகி அவரே செய்கிறேன் என்று  சொல்லிவிட்டார். அவ்வளவு அழகாக நடிக்கும் கெளதம் வாசுதேவ் மேனை பார்க்கும் போது அவரை வைத்து முழுநீள படத்தை இயக்க வேண்டுமென்ற ஆசை வருகிறது.

கோலி சோடா படத்தில் முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு விக்ரமே எனக்குப் போன் பண்ணினார். ''மில்டன் எப்படி இருக்க. படம் பார்த்தேன்டா, சூப்பரா ரெஸ்பான்ஸ் இருந்தது. நான் எதிர்பார்க்கவேயில்லை. வேற ஏதாவது கதை வச்சுயிருக்கியாடா''னு கேட்டார். ''ஆமா சார் ஒரு கார் டிரைவர் கதை வெச்சுயிருக்கேன்''னு சொன்னேன். ''இப்போ கதை சொல்ல வர்றியாடா’’னு நைட் பத்து மணிக்குக் கேட்டார். ‘’இல்லை சார் காலையில் வர்றேன்’’னு சொல்லிட்டு விடிந்தவுடனே போனேன்.

விஜய் மில்டன்

கதையைச் சொன்னவுடன் அவர், ''என்னடா ஏதோ அழுக்கு கைலி கட்டிட்டு இருக்கிற டிரைவர் பத்திச் சொல்லுவனு நினைச்சா இப்படி ஒரு கதைய சொல்ற’’னு சொன்னார். ''ஆமா சார், இதைத்தான் ஃபர்ஸ்ட் பண்ணலாம்னு இருந்தேன். பட், பட்ஜெட் இல்லை’’னு சொன்னேன். 

இந்தப் படத்தில் சமந்தா கேரக்டருக்கு முதலில் நயன்தாராவிடம் பேசினோம். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவங்க பண்ணமுடியவில்லை. அப்புறம்தான் சமந்தா பண்ணாங்க. சமந்தா ரோல் பத்தி சொல்லும் போது மட்டும் விக்ரமிடம் கதை சொல்றதை ஸ்டாப் பண்ணிட்டு, '' இப்போ ஏன் அந்தப் பொண்ணை வில்லன் கும்பல் கடத்தியிருக்கும்னு நீங்க சொல்லுங்கள் சார்’’னு கேட்பேன். அவர்  ஒரு பத்துக் காரணம் சொன்னார். ’’இது எதுவுமே இல்லை சார்’’னு படத்தோட கதையைத் தொடர்ந்தேன். ''சூப்பர்டா... இந்த கேரக்டர் நல்லாயிருக்கு. இதுதான் படத்தோட ட்விஸ்ட்''னு சொல்லி, படம் பண்றதுக்கு ஓகே சொன்னார்’’ எனப் பல நினைவுகளைப் பகிர்ந்தவர், “மிஷ்கின் படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை பார்க்க ஆசை'' என அவர் விருப்பத்தைச் சொல்லி விடைப் பெற்றார் விஜய் மில்டன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்