"என்னோட படத்தை பார்த்தால் உங்களுக்கு காசு வரும்..!’’ - எஸ்.பி.எஸ் குகனின் புதிய முயற்சி

’’தியேட்டர் கட்டணம் உயர்வால திருட்டு விசிடி மற்றும் ஆன்லைன்ல படம் பார்குறவங்களோட எண்ணிக்கை சமீப காலமா அதிகரிச்சுட்டு இருக்கு. 'மெர்சல்' படம் வெளியானப்போ 'ஆன்லைனில் மெர்சல் படத்தை வெளியிடத் தடை'னு சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு நம்ம எல்லாருக்குள்ளயும் ஒரு கேள்வியை தூண்டிவிட்டிருக்கு. 'இதுவரைக்கும் சுப்ரீம் கோர்ட்டை கேட்டுத்தான் 'ஆன்லைன் பைரஸி' நடக்குற மாதிரியும், இவங்க தடை போட்ட உடனே அவங்க எல்லாரும் படத்தை ஆன்லைன்ல வெளியிடாத மாதிரியும் ஒரே கூத்தும் கேலியுமா இருந்துச்சு. படத்தை வெளியிட்டு அது மூலமா வருமானத்தை எதிர்பார்க்குறவங்களுக்குத்தான் ஆன்லைன்-பைரஸி மாதிரியான பிரச்னைகள் வரும். இதை தவிர்க்கத்தான் நான் படத்தை யூ-டியூப்ல வெளியிடலாம்னு முடிவெடுத்தேன். சினிமா பாக்குறது மூலமா பொதுமக்கள் இனி பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்கிறதுதான் என்னோட கான்செப்ட்" என்று தன்னுடைய புதிய சினிமா திட்டத்தை நம்மிடம் விரிவாகக் கூறி, நேர்காணலைத் தொடர்ந்தார் ஒளிப்பதிவாளர் எஸ்.பி.எஸ் குகன்.

எஸ்.பி.எஸ் குகன்

"எஸ்.பி.எஸ் குகன் யார்?"

" 'மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி' படம்தான் என்னுடைய முதல் படம். இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண தமிழ்நாட்டுல எனக்கு 12 தியேட்டர்தான் கிடைச்சது. அதுக்கப்பறம் படம் நல்லாயிருக்குனு சொல்லி 50 தியேட்டர்கள் இந்தப் படத்தை வாங்குனாங்க. அப்படியிருந்தும் நிறைய தியேட்டர்கள்ல  25 நாள்கள் படம் ஓடியும் இழப்புக் கணக்கைத்தான் காட்டுனாங்க. அதுக்கப்பறம் 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி'கிற படம் பண்ணேன். முதன்முதல்ல 'கேனான் 5D மார்க் II' ஸ்டில் கேமராவை வச்சு வெளிவந்த முளு நீளப்படம் இதுதான். இது லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ல இடம் பிடிச்சிருந்துச்சு. சாதாரணமா வெட்டிங் போட்டோஸ் எடுத்துட்டு இருந்த நான் இன்னைக்கு படம் இயக்குற அளவுக்கு வளர்ந்துருக்கேன். நான் இதுவரை எந்த இயக்குநர்கிட்டயும் அசிஸ்டன்டா வேலை பார்த்ததில்லை. சினிமாட்டோகிராஃபி படிச்சுட்டு நண்பர்கள் உதவியோடு இப்போ படங்கள் இயக்க ஆரம்பிச்சிருக்கேன்."

"உங்களோட இந்த திட்டம் பத்தி விரிவா சொல்லுங்க"

"இனி நாங்க எடுக்குற எல்லா படத்தையும் யூ-டியூப்ல ரிலீஸ் பண்ணப் போறோம். ரசிகர்கள் அதை ஃப்ரீயா பார்க்கலாம். படம் முடுஞ்சதும் இந்தப் படம் உங்களுக்கு பிடிச்சிருந்தா அதுக்கு பணம் செலுத்தலாம். 50 ரூபாய்ல ஆரம்பிச்சு எவ்வளவு வேணும்னாலும் பணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவங்க பணம் கட்டத் தேவையில்லை. எங்களோட எல்லா படத்துக்கான பட்ஜெட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு கீழதான் இருக்கும். ரசிகர்கள் படம் பார்த்துட்டு எங்களுக்கு கட்டுற பணத்தை வச்சு நாங்க அடுத்த படத்தை எடுப்போம். எங்களுக்கு படத்தோட பட்ஜெட்டுக்கு மேல பணம் வசூலாச்சுன்னா, அந்தப் பணத்தை ரசிகர்களுக்கே குலுக்கல் முறையில திருப்பிக் கொடுப்போம். அப்படி குலுக்கல் முறையில தேர்ந்தெடுக்குற நபர்களுக்கு எவ்வளவு  கொடுக்கலாம்கிற முடிவு வசூலாகுற பணத்தை பொறுத்தது. இப்படி படத்துக்கு பணம் கட்டுறது மூலமா நீங்க எங்களோட பங்கு தாரர்களா மாறலாம். இதுதான் எங்களோட திட்டம்."

"இந்த ஐடியா எப்படி வந்துச்சு?"

"தியேட்டர்களின் கேளிக்கை வரி விதிப்பு மூலமா நமக்கு ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கு. இது எல்லாத்தையும் சமாளிக்க பெரிய பட்ஜெட் படங்களால முடியும். குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு இந்த வரி விதிப்பு ஒரு சாபக்கேடுன்னே சொல்லலாம். இது மூலமா எங்களுக்கு கிடைச்சுட்டு இருந்த கொஞ்ச நஞ்ச தியேட்டர்களும் எங்கள் கை நழுவி போயிடுச்சு. அதிக காசு கொடுத்து தியேட்டர்களை புக் பண்றது பெரிய கஷ்டம். அதுக்கு மேல விளம்பரம் கொடுத்து படத்தை ப்ரமோட் பண்றது அதை விட பெரிய கஷ்டம். இந்த நிலைமையில 'யூ-டியூப்' நமக்கு கிடைச்ச மிகப்பெரிய வரம். அதுமூலமா படத்தை ரிலீஸ் பண்ணலாம்னு முடிவெடுத்துருக்கோம்."

"மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி 2' படம் என்ன கான்சப்ட்?"

"முதல் படத்துல மதுரையில இருந்து தேனிக்கு பஸ்ல பயணம் பண்ணோம். இப்போ தேனியில இருந்து மதுரைக்கு ரிட்டர்ன் ட்ராவல். விஸ்காம் படிச்சுட்டு படம் இயக்கணும்கிற ஆர்வம் உள்ள ரெண்டு பேர் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதுதான் கதை. இளம் இயக்குநர்கள் சினிமாவுக்கு வர்றதுக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்பதை எடுத்து சொல்ற படம்."

"இதற்கான விளம்பர ஸ்பான்சர்கள் பத்தி"

"யூ-டியூப் விளம்பரம் மாதிரி வீடியோவுக்கு நடுவுல காட்சி விளம்பரங்கள் (Visual Advertisement) வராது.  வீடியோக்கு கீழ போடுற மாதிரியான ஸ்க்ரோலிங்க் விளம்பரங்கள் மட்டும்தான் இதுல வரும். அப்படி நமக்கு ஒருத்தவங்க விளம்பரம் கொடுத்தா அது வீடியோவுல எப்போதுமே இருக்கும். லைஃப் டைம் மாறாது. தவிர, யூ-டியூப்ல இருந்து வர்ற வருவாயும் நமக்கு வந்துக்கிட்டேதான் இருக்கும்."

"இதுக்கான வரவேற்பு எப்படி இருக்கு?"

"தீபாவளிக்கு 'மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி 2' ரிலீஸ் பண்ணியிருக்கோம். ஓரளவுக்கு நல்லா போயிட்டு இருக்கு.

 

 

அடுத்ததா 'எங்க ஊரு உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்'கிற படத்துக்கான ஷூட்டிங் போயிட்டு இருக்கு. நிறைய வளர்ந்து வரும் இளம் இயக்குநர்கள் ஏற்கெனவே படம் எடுத்து தியேட்டர் கிடைக்காம ரிலீஸ் பண்ண முடியாத சூழ்நிலையில இருப்பாங்க. அவங்க கிட்ட இருந்தும் காசு கொடுத்து படங்களை வாங்கி நம்ம சேனல்ல வெளியிடலாம்னு முடிவு எடுத்துருக்கோம். தவிர எல்லா விடுமுறை நாள்கள்லயும் ஒவ்வொரு படத்தையும் ரெகுலரா வெளியிடலாம்கிற திட்டம் இருக்கு" என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!