''கமலுக்கும் எனக்குமான நட்பு சுடுகாட்டில் தொடங்கியது..!’’ - நட்புக் கதை சொல்லும் 'கிரேஸி' மோகன்

டிகர் கமல்ஹாசனின் பல படங்களின் வசனகர்த்தா கிரேஸி மோகன். இவர்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்த படங்கள் அனைத்துமே பக்கா காமெடி காம்போ. டைமிங், ரைமிங் காமெடியால் கிச்சுகிச்சு மூட்டுபவை. தனக்கும் கமலுக்கும் ஏற்பட்ட பழக்கத்தை பற்றியும் நட்பு பற்றியும் சொல்ல வருகிறார் கிரேஸி மோகன்.

கிரேஸி மோகன்

"நான் டிராமல நடிச்சுட்டு இருந்த சமயம். 1974-ம் வருஷம் 'கிரேட் பேங்க் ராபரி'னு ஒரு நாடகத்திற்காக எனக்கு பெஸ்ட் ஆக்டர் விருது கிடைச்சது. அந்த விருது வாங்கும்போதுதான் கமல்ஹாசனை முதன்முதலில் பார்த்தேன். எனக்கு அவரைத் தெரியும். ஆனா, அவருக்கு அப்ப என்னை யார்னு தெரியாது. இதுதான் எங்கள் முதல் சந்திப்பு. 

இரண்டாவது சந்திப்பு இன்னும் சுவாரஸ்யமானது. எங்க வீடு மந்தைவெளியில இருக்கு. அதுக்கு பக்கத்துல ஒரு கிறிஷ்டியன் சிமென்டரியில் தான் 'சத்யா' பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. ஷூட்டிங்னாலே எல்லாரும் வேடிக்கை பார்ப்போம். நான் அப்படியே நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். அப்ப உள்ளே இருந்து யாரோ கூப்பிடற மாதிரி இருந்தது. முதல்ல எனக்கு சுடுகாட்டுக்குள் போகவே பயமா இருந்தது. அப்பதான் கமல் கூப்பிடறார்னு தெரிஞ்சது. உடனே ஓடிப்போய் அவரைப் பார்த்தேன். அப்ப நான் டிராமாவில் ஸ்கிரிப்ட் எழுதுறது, நடிக்கிறது, விகடன்ல எழுதுறதுனு நிறைய வேலைகள் பண்ணிட்டிருந்தேன். அது எல்லாமே அவர் தெரிஞ்சு வெச்சிருந்தார். அதைப் பற்றி அந்தச் சுடுகாட்டுலயே நின்னு ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார். பொதுவாக தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, எங்களுக்கு முதல் பழக்கமே சுடுகாட்டில் இருந்ததால்... ஜென்மம் ஜென்மமாக தொடர்கிறது எங்க நட்பு உறவு. 

கிரேஸி மோகன்

அடுத்த நாள் காலையிலயே எங்க வீட்டுக்கு கமலோட கார் வந்தது. 'சார், உங்களைக்  கூப்பிட்டு வரச் சொன்னார்'னு சொன்னாங்க. உடனே கிளம்பி அவர் வீட்டுக்குப் போனேன். 'அபூர்வ சகோதரர்கள்' படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதறீங்க என்று சொன்னவர். கூடவே ஒரு கண்டிஷனும் போட்டார். 'நீங்க உங்க வேலையை விட்டுடணும்'னு சொன்னார். அப்ப நான் ஆனந்த விகடன்லதான் வேலை பார்த்துட்டு இருந்தேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச டயலாக் 'வேலையை விட்டுறேன்' என்பதுதான். எங்க வீட்டுல பயந்தாங்க. 'எம்.டெக் படிச்சு முடிச்சுட்டு, பார்த்துட்டு இருக்கிற பத்திரிகை வேலையும் விடாதே'னு சொன்னாங்க. 'எம்.டெக் படிச்சு முடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா, கமலுக்குத் தெரிஞ்ச முகம் என் முகம் தானே'னு சொல்லிட்டு சந்தோஷமா வேலையை விட்டுட்டேன்" என்றவர் கமலுடன் வேலை செய்த படங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார். 

"கமல் கூட சேர்ந்து படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பிச்சேன். 'அபூர்வ சகோதரர்கள்' தொடங்கி 25 படம் சேர்ந்து பண்ணியிருக்கோம். எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். 'பம்மல் கே சம்மந்தம்', 'பஞ்ச தந்திரம்', 'தெனாலி', 'அவ்வை சண்முகி', 'சதிலீலாவதி', 'மகளிர் மட்டும்', 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'னு நிறைய படங்களுக்கு டயலாக் எழுதினேன். 'மைக்கல் மதன காமராஜன்' படத்துல அவர் ஒரு பெரிய லிஸ்ட் சொல்லுவாரே... அப்படி நாங்க வேலை பார்த்த படங்களின் லிஸ்ட் ரொம்ப பெரிசு. 

கிரேஸி மோகன்

அதேமாதிரி நான் உள்ளூர்ல டிராமா போட்டா என்னுடைய விசிட்டிங் கார்டு கமல்தான். அதுவே நான் வெளிநாட்டிக்குப் போய் டிராமா போட்டால் என்னுடைய விசா கார்டும் அவர்தான். 'ஆளவந்தான்' படத்துல 'கடவுள் பாதி, மிருகம் பாதி'னு சொல்லுவார் கமல். என்னைப் பொறுத்த வரை கமல், சிவாஜி பாதி, நாகேஷ் பாதி. 

எலெக்டிரிக் வேவ்ஸ் மேல, கீழே போய்ட்டு வரும். அப்படி கமல் மேல போனது எல்லாம் 'தேவர் மகன்', 'விருமாண்டி' போன்ற படங்கள்னு சொல்லலாம். அவர் கீழ இறங்கி வந்த படங்கள் எல்லாம் 'அவ்வை சண்முகி', 'வசூல்ராஜா', 'தெனாலி'னு வெச்சுக்கலாம். காமெடி பண்ணுறதில் ரொம்பப் பெரிய கஷ்டம் என்னென்னா... இமேஜ்ஜையும் விட்டுக்கொடுக்கக் கூடாது. அதே சமயத்துல அந்த இமேஜ்ல இருந்து கொஞ்சம் கீழ இறங்கி வந்தால்தான் காமெடி வொர்க் அவுட் ஆகும். கமல் எனக்குக் கிடைச்ச ராபின் வில்லியம்ஸ் மற்றும் ஜிம் கேரி. அவர் எப்போதும் போல் நலமுடன் நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறேன்" என முடித்துக்கொண்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!