Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ ‘பேய் பாபு’ல ஆரம்பிச்சது, ‘சூப்பர்’னு நயன்தாராவை சொல்ல வெச்சிருக்கு!” - ‘அறம்’ ராம்ஸ்

ரட்டை தலை முடி, மிடுக்கான உடல்வாகு, சிவந்திருக்கும் கண்கள் என டெரர் துணை நடிகராகவே பார்த்துப் பழக்கப்பட்ட ராம்ஸ், 'அறம்' படத்தில் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் கனமான கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார். ‘அறம்’ ராம்ஸுக்கு 'வாழ்த்துகள்' சொல்லி பேச ஆரம்பித்தோம். 

ராம்ஸ்

" 'அறம்' படத்தோட இயக்குநரை எனக்கு முன்னாடியே நல்லாத் தெரியும். ஒருநாள் என்னை அவரோட ஆபிஸுக்கு வரச் சொன்னார். போனவுடனேயே அறம் படத்தோட ஸ்கிரிப்டை கொடுத்து படிக்கச் சொன்னார். நானும் முழுசாப் படிச்சுப் பார்த்தேன். கதை ரொம்ப நல்லாயிருக்கு. அந்த கலெக்டர் கேரக்டரும், அந்தக் குழந்தையோட அப்பா கேரக்டரும் யார் பண்றாங்கனு கேட்டேன். அதற்கு அவர், கலெக்டர் கேரக்டர நயன்தாரா பண்றாங்கனு சொன்னவர், அந்த அப்பா கேரக்டர் யார் பண்ணப்போறாங்கனு சொல்லவே இல்லை. அடுத்தநாளும் அவரோட ஆபிஸுக்குப் போனேன். கோபி அப்போ என்கிட்ட 'அந்த அப்பா கேரக்டர நீங்களே பண்ணிடுங்க'னு சொன்னார். எனக்கு பயங்கர ஷாக்கு. நம்மலால அந்த கேரக்டர பண்ணமுடியுமானு யோசிச்சேன். ஏன்னா, படம் முழுக்க நயன்தாரா கூட டிராவல் ஆகுற முக்கியமான கேரக்டர் அது. 'உங்களால பண்ண முடியும்'னு கோபிதான் உற்சாகப்படுத்தி நடிக்க வெச்சாப்ல... இப்ப எல்லாரும் பாராட்டுறாங்க." 

"நயன்தாரா கூட நடிக்கிற மாதிரி பல சீன்ஸ் இருந்திருக்கும். நடிக்கும் போது உங்ககிட்ட அவங்க என்ன சொன்னாங்க?"

"நயன்தாராவை 'திருநாள்' படத்தில நடிக்கும்போது பார்த்திருக்கேன். அதுக்கு அப்புறம் 'அறம்' பட ஷூட்டிங் அப்பதான் பார்த்தேன். படத்தோட முதல் நாள் ஷூட்டிங். கேரவன்ல இருந்து இறங்கி வந்தாங்க. அப்போ சும்மா அட்னன்ஸ் போடுறதுக்காக 'வணக்கம்' வைச்சேன். உடனே, அவங்க என்னைப் பார்த்து 'நல்லா நடிங்க'னு சொன்னாங்க. படத்தில எங்க போர்ஷன் தனியா எடுத்தாங்க. நயன்தாரா போர்ஷன்ஸ் தனியா எடுத்தாங்க. ஒருசில காட்சிகள்தான்  ஒண்ணா எடுத்தாங்க. ஒரு காட்சியில நான் அழுகுற சீனை பார்த்துட்டு நயன்தாரா 'நீங்க சூப்பரா நடிச்சீங்க'னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு."

’அறம்’ ராம்ஸின் வீடியோ பேட்டியைக் காண...

"அறம் தியேட்டர் ரெஸ்பான்ஸ் பார்த்தீங்களா?"

" 'அறம் படம் வெளியான அன்னைக்கு நிறைய தியேட்டர்ல போய் மக்கள் எப்படி எடுத்துக்குறாங்கனு பார்த்தேன். நான் நடிச்ச காட்சிகளுக்கு மட்டுமல்லாமல் மொத்தப் படத்துக்கும் அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. நான் எப்படி எடுத்துக்குவாங்களோனு நினைச்ச காட்சிகளைக்கூட மக்கள் அப்படி ரசிச்சாங்க. நினைச்சதுக்கும் மேல படத்தை நல்லா கொண்டாடுறாங்க. நிறைய பேர் பாராட்டுறாங்க." 

"மறக்க முடியாத பாராட்டு எது?"

"நமக்கு யாருனே தெரியாதவங்க எல்லாம், 'நீங்க நடிச்ச பல படங்கள் பார்த்திருக்கோம். அதை எல்லாம் பார்த்துட்டு நீங்க ரௌடி கேரக்டருக்குதான் பொருந்துவீங்கனு தப்பா நினைச்சிக்கிட்டிருந்தோம். கலக்கிட்டீங்க. கண்ணுல தண்ணீ வர வெச்சிட்டிங்க ப்ரோ'னு சொல்றப்போ அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. இது எல்லாம்தான் மறக்கவே முடியலைங்க." 

"எப்படி சினிமாக்குள்ள வந்தீங்க?"

"நான் சென்னைக்கு வேலை செய்யதான் வந்தேன். எனக்கு போட்டோகிராபினா ரொம்பப் பிடிக்கும். நிறைய இடங்களுக்கு போவேன். கல்யாணங்களுக்குலாம் போட்டோ எடுத்துத் தருவேன். இப்படிதான் வாழ்க்கை ஓடிட்டு இருந்துச்சு. அப்படி போட்டோகிராபினு சுத்தும்போது எனக்கு நிறைய சினிமா நண்பர்கள் கிடைச்சாங்க. அவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு சினிமால இருக்கணும். சினிமாவுக்குள்ள போகணும்னு ஆசையா இருந்துச்சு. உடனே, நான் வேலையை விட்டுட்டேன். நான் அப்போ சினிமாக்குள்ள வரணும்னா ஒரு இன்டர்வியூ மாதிரி வெப்பாங்க. சில  கேள்வி கேப்பாங்க. பதில் சொன்னா வேலைக்கு எடுத்துப்பாங்கனு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, அப்படி எதுமே இல்லைனு இங்க வந்தபிறகுதான் தெரிஞ்சது. ஒருதடவை, இதைப் பத்திப் பேசுனப்போதான் ஒருத்தன் சொன்னான், 'டேய்... சினிமானா முதல்ல டைரக்டரயும் அவரோட அசிஸ்டென்ட்ஸையும் ஃபர்ஸ்ட் ஃபாலோ பண்ணணும்டா, தொடர்ந்து அட்டெண்டன்ஸ் போடணும்’னு சொன்னான். எனக்கு அப்போதான் சினிமா பற்றிய புரிதலே ஏற்பட்டுச்சு. இதையெல்லாம் சரியா புரிஞ்சிக்கவே எனக்கு ஒரு வருஷம் ஆகிடுச்சு. அதுக்கப்பறம்தான் சுசீந்திரன், மீரா கதிரவன் நட்புலாம் கிடைச்சுது. மீரா கதிரவனோட 'அவள் பெயர் தமிழரசி' படத்துல உதவி இயக்குநரா வேலை செஞ்சேன். சுசீந்திரனோட படங்களிலயும் தொடர்ந்து உதவி இயக்குநரா வேலை செஞ்சேன்." 

ராம்ஸ்

"சரி, நடிக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?"

"சுசீந்திரனோட படங்களிலெல்லாம் உதவி இயக்குநரா வேலை செஞ்சேன். அதேமாதிரி 'நான் மகான் அல்ல' படத்திலயும் உதவி இயக்குநரா இருந்தேன். அப்போதான் அந்தப் படத்துல வர்ற 'பேய்பாபு' கேரக்டருக்குச் சரியான ஆளே கிடைக்கலை. இதைப்பற்றி பேசிட்டு இருக்கும்போதுதான் கூட இருந்த ஒரு ஆளு 'ஏன்... ராமே இந்த கேரக்டர் பண்ணா நல்லா இருக்கும்'னு சுசீந்திரன்கிட்ட சொல்லிட்டார். அப்படித்தான் அந்த கேரக்டர்குள்ள நான் வந்தேன். நடிக்கவும் ஆரம்பிச்சேன். அப்புறம் பல படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடிச்சுட்டு இருந்தேன். இப்ப 'அறம்' மூலமாகப் பெரிய  திருப்புமுனை ஏற்பட்டிருக்கு. அதுக்காக இயக்குநர் கோபிக்கும், தயாரிப்பாளருக்கும் தான் பெரிய நன்றி சொல்லணும்."

"உங்க வாய்ஸ் உங்களுக்குப் பெரிய ப்ளஸ் தானே..." எனச் சொல்லி முடிக்கும் முன்பே குறுக்கிடுகிறார். 

"ஆமாங்க. நான் ஆரம்பத்துல இந்த வாய்ஸ்ல பேசும்போது பலரும் கிண்டல் பண்ணுவாங்க. 'என்னடா கிரைண்டர் குள்ள போட்ட கல்லு மாதிரி உன் வாய்ஸ் இருக்கு'னு சொல்லுவாங்க. சிலர் 'வாய்ஸ் மாத்துடா கறகறனு இருக்கு'னு சொன்னாங்க. ரொம்ப முக்கியமான சிலர் 'இந்த வாய்ஸ்தான் உனக்கு எதிர்காலத்துல சோறு போடப்போகுது. மாத்திடாத'னு சொன்னாங்க. நீங்க சொன்ன மாதிரி என் வாய்ஸ் பெரிய ப்ளஸ்தான்."

"உதவி இயக்குநராக வேலை செஞ்சு இருக்கீங்க. இயக்குநர் ஆவதற்கு முயற்சி செஞ்சுட்டு இருக்கீங்களா?"

"ஆமாங்க. ரெண்டு மூணு ஸ்கிரிப்ட் வெச்சிருக்கேன். தயாரிப்பாளர் கிடைச்சா படம் பண்ணிட வேண்டிதான்" என உற்சாகமாகிறார்.

வாழ்த்துகள் சார்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!