''ரஜினியிடம் ஏன் கேள்வி கேட்பதில்லை!" - சாருஹாசன்

கமல்ஹாசன் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகப் பேசுகிற துணிச்சலை அவருக்குக் கற்றுக்கொடுத்த ஆசான், சாருஹாசன். அண்ணன், தம்பி இருவருக்கும் இடையில் 20 ஆண்டுகளுக்குமேல் இடைவெளி உண்டு, இருந்தாலும் தம்பியிடம் நண்பர்போலப் பழகும் இயல்பு கொண்டவர். தமிழ்நாட்டில் நடந்துவரும் 60 ஆண்டுகால அரசியல் நடப்புகளைக் கூர்ந்து கவனித்து வருகின்ற அவரிடம் பேசினோம்.

''நம் நாட்டில் வாழுகின்ற நம்மை ஆளுகின்ற அரசியல்வாதிகள் எல்லோரிடமும் ஒரு ஆபத்தான குணாதிசயம் உண்டு. தன்னுடைய வாழ்நாளில், தனது சுயவாழ்க்கையில் எந்த அரசியல்வாதிகளும் கற்பு நெறியைக் கடைபிடிப்பதே இல்லை. அதேநேரத்தில் தங்களிடம் இல்லாத கற்பு நெறியை மக்களிடம் புகுத்தும் வித்தை, திறமை நம்மை ஆளும் எல்லா அரசியல்வாதிகளிடமும் உண்டு. இது நம் நாட்டு நடப்பில் புதிது அல்ல. காலம் காலமாக நடந்துவரும் சங்கதி. இந்தச் சமூகத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு தகப்பனும் தான் மட்டும் பல பெண்களைத் திருமணங்கள் செய்துகொண்டு சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். அதேவேளையில் தனக்குப் பிறந்த மகன் மட்டும் ஒரு கல்யாணத்தோடு நிறுத்தவேண்டும் என்கிற கற்பு நெறியை அவனிடம் எதிர்பார்க்கிறான்.

சாருஹாசன்

ராமாயணத்தில் தசரத மன்னனுக்கு 60 ஆயிரம் மனைவிகள். ஆனால், தசரதன் மகன் ராமன் மட்டும் ஒரே ஒரு பெண்ணை மணந்து கொண்டு ஏகபத்தினி விரதனாக வாழவேண்டும். தந்தையின் மூன்றாம் மனைவி கைகேயி கட்டளையை ஏற்று காட்டுக்குச் சென்று 14 ஆண்டுகள் வனவாசம் அனுபவிக்க வேண்டும். இதை எழுதிவைத்தவன் நிச்சயம் ஒரு தந்தையாகத்தான் இருக்கவேண்டும். இதுபோன்ற குணம்கொண்ட தந்தைமார்களுக்குத்தான் நம் மக்களும் வாக்களிப்பார்கள். திரைப்படத் துறையில் நடித்துவரும் நடிகர்கள் ரகசியமாக கற்பை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்தச் சமூகம் ஆராதித்து ஏற்றுக்கொள்கிறது. நிஜமான வாழ்க்கையில் வெளிப்படையாகக் கற்பை இழந்து வாழும் ஆண்களை இந்தச் சமூகம் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. 

தவிர, தமிழக அரசியலில் இதுவரை மறைந்த பெரியார், 'துக்ளக்' சோ இவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும் உண்மை பேசியதாக எனக்குத் தெரியவில்லை. முன்பு ஒருமுறை திமுக-வில் இருந்த முக்கியப் புள்ளிகளிடம் 'இப்படியே இருந்தால் தி.மு.க ஆட்சி, எம்ஜிஆரின் கைக்குப் போய்விடும்' என்று சொல்லி அவர்களிடம் கெட்டபெயர் வாங்கியவன் நான். நம் நாட்டில் ஊழல் என்பது ஏதோ புதிதாகத் திடீரென்று தோன்றிவிடவில்லை. பிற்போக்கு சக்திகள் கொண்ட இராமாயணம், மஹாபாரதம், சிலப்பதிகாரம் உருவான காலங்களில் இருந்தே ஊழல் ஊற்றுக்கண்ணாக இருந்து வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் எப்போது காமராஜரை அரசியலிலிருந்து ஓரங்கட்டினார்களோ, அப்போது இருந்தே தமிழகத்தில் ஊழல் புரையோட ஆரம்பித்துவிட்டது.  இப்போது உச்சத்தில் இருக்கிறது. தமிழனின் ஆட்சி என்பது பக்தவத்சலம் ஆட்சி காலத்தோடு முடிந்துவிட்டது.

சமீபகாலமாக, கமல் அரசியலில் இறங்கியிருப்பது குறித்து தமிழ் உலகம் வியப்போடு பார்ப்பதாக அடிக்கடி தொலைபேசி வாயிலாக என் கருத்தைக் கேட்கிறார்கள். நான் என் வாழ்நாளில் பெரும்பாலும் உண்மை பேசி வாழ்ந்தவன். நான் சொல்லும் உண்மை கேட்பவர்களுக்கு விஷம்போல் கசந்தால் அதை நாகரிகம் கருதி சொல்லாமல் விட்டுவிடுவேனே தவிர, பொய்யாக ஏதாவது திரித்துக் கூறுவது எனக்குப் பிடிக்காது. இப்போது எனக்குத் தெரிந்த கேள்வி இது ஒன்றுதான். கமலை பார்த்து, "ஏன் அரசியலுக்கு வருகிறாய்” என்று கேட்பவர்கள், ரஜினியைப் பார்த்து, ''நீங்கள் ஏன் இன்னும் அரசியலுக்குள் தீர்க்கமாக நுழையவில்லை'' என்று கேள்வி கேட்காமல் இருப்பதிலேயே மக்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது.

சாருஹாசன்

இந்தியாவில் இதுவரை எத்தனையோ சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்து வெற்றிகண்டு இருக்கிறார்கள், தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் கமல் அரசியல் பேசுவதுதான் மக்களுக்கு ஏனோ புதிதாக இருக்கிறது. இதுவரை ரஜினி, கமல் என்ற இந்த இரண்டு பெயர்களைத் தவிர வேறு யாரையும் நோக்கி இந்தளவுக்கு ஆச்சர்யக் கேள்விகள் எழுந்தது இல்லை." என்றவரிடம், இந்தச் சூழலில் கமலின் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அவரின் சுபாவத்துக்கு தனிக்கட்சி, தமிழக அரசியல் சரிப்பட்டு வருமா என்பது குறித்தும் சாருஹாசனிடம் கேட்டோம். ''நான், என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே சொல்லிவிடும் இயல்பு கொண்டவன். நான் சொல்லும் பதில்களை மாற்றாமல் அப்படியே பிரசுரிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா'' என்று பீடிகையுடன் பேச ஆரம்பித்தார் சாருஹாசன். 

“அரசியலில் வெற்றிபெற ஒரு பொய்யான தெய்வ வழிபாடு தேவை. அந்த வழிபாடு இல்லாதது கமலுக்குப் பெரும் குறை. தவிர, ஏற்கெனவே சொன்னதுபோல, திரைப்படத்துறையில் நடித்துவரும் ஏனைய நடிகர்கள்போல் ரகசிமாகக் கற்பை இழக்காமல், வெளிப்படையாக இழந்த ஆணின் கற்பு ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை." என்று முடித்தார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!