Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஆயிரம் புடவைகளை வித்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினேன்!” நெகிழும் நடிகை சாந்தி வில்லியம்ஸ்

சாந்தி வில்லியம்ஸ்

“மிக மிக வசதி, வாட்டும் ஏழ்மை என இருவித சூழலையும் எதிர்கொண்டிருக்கிறேன். வசதியோடு நடிச்ச காலத்துக்கும், குடும்பத் தேவைக்காக நடிக்கும் காலத்துக்குமான இடைவெளியில் நான் கற்ற பாடங்கள் மிக அதிகம். அதெல்லாம் மனதின் அழியாச் சுவடுகள்'' என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார், நடிகை சாந்தி வில்லியம்ஸ். 

"முதல் சினிமா வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது?" 

"பிறந்தது கோயம்புத்தூர். வளர்ந்ததெல்லாம் சென்னை. அசோக் நகரில் ஒரு ஸ்கூல்ல எட்டாவது படிச்சுட்டிருந்தப்போ, மலையாள 'செம்மீன்' படத்தை இயக்கிய ராமு சார், ஸ்கூலுக்குப் பக்கத்தில் வசித்தார். நான் சிவப்பாகவும் உயரமாகவும் இருப்பேன். ஸ்கூலுக்கு காரில் வந்து இறங்கும் என்னைப் பலமுறை பார்த்திருக்கார். அதனால், காட்டுவாசிகள் பற்றிய மலையாள டாக்குமென்ட்ரி படத்தில் நடிக்க கேட்டார். அப்படித்தான் 1972-ம் வருஷம் அதில் நடிச்சேன். 11 வயசுலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினேன். தொடர்ந்து நிறைய மலையாள படங்களில் ஹீரோயினா நடிச்சேன்." 

"படிப்பில் கவனம் செலுத்துவது சிரமமாக இருந்திருக்குமே..." 

"ஆமாம். இரவு பகலா ஷூட்டிங் நடக்கும். அதிகாலை நாலு மணிக்குத்தான் ரூமுக்கு வருவேன். ஒரு மணி நேரத்தில் ரெடியாகி, இன்னொரு படத்தின் ஷூட்டிங்ல கலந்துப்பேன். இடையில் அரை மணி நேரம்தான் தூக்கத்துக்கு. குளிக்கிறதுக்காக பாத்ரூமுக்குப் போய், பல நாள்கள் அங்கேயே தூங்கியிருக்கேன். இப்படி நடிச்சுக்கிட்டே எப்படியோ பத்தாவது முடிச்சுட்டேன். அப்புறம் படிப்பைத் தொடர முடியலை." 

சாந்தி வில்லியம்ஸ்

“தமிழ் சினிமா என்ட்ரி எப்படி அமைஞ்சது?" 

“1976-ம் வருஷம் 'மாந்தோப்பு கிளியே' படத்தின் மூலமா தமிழில் அறிமுகமானேன். 'பணம் பெண் பாசம்', 'மூடுபனி' உள்ளிட்ட நிறையப் படங்களில் நடிச்சேன். 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்துக்குப் பிறகு கல்யாணமாகி நடிப்பை நிறுத்திட்டேன்.'' 

"கணவரின் இறப்பு உங்க வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?" 

"கணவர் வில்லியம்ஸ், மலையாள சினிமாவின் பிரபலமான கேமராமேன். அவரும் நானும் ஒரு மலையாளப் படத்தில் வொர்க் பண்ணினோம். அவருக்கு என்னைப் பிடிச்சுப்போய் என் பெற்றோரிடம் பேசினார். 1979-ம் வருஷம் கல்யாணம் ஆச்சு. அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்தாங்க. குடும்பத்தை கவனிச்சுக்க நடிப்பை நிறுத்திட்டேன். அந்த நேரத்தில் சினிமா துறையினருக்கும், சில நடிகர்களுக்கும் என் கணவர் செய்த உதவி ரொம்ப பெருசு. அவரின் கால்ஷீட்டுக்காக காத்துகிட்டிருந்த பிரபலங்கள் அதிகம். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் அவர் இருந்தப்போ, உதவிக்குனு யாருமே வரலை. என் கணவர் கோடிகளில் சம்பாதிச்ச காலத்திலும் 200 ரூபாய் புடவைதான் கட்டுவேன். அதனால், திடீர் வறுமை என் மனசில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலை. ஆனால், 75 பைசா கொடுத்து அவர் பஸ்ல போகும் சூழ்நிலை வந்தப்போ பல நாள் அழுதிருக்கேன். எங்கிட்ட இருந்த ஆயிரம் புடவைகளை வித்துதான் குழந்தைகளைப் படிக்கவெச்சேன். குடும்பச் செலவுக்காக 18 வருஷத்துக்குப் பிறகு 1990-ம் வருஷம் நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுத்தேன். 'உதயா', 'ஜோடி', 'டும் டும் டும்', 'மனதை திருட்டிவிட்டாய்', 'பாபநாசம்' உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்ளில் நடிச்சுட்டேன். ஆனாலும், கணவரை இழந்த   துயரத்திலிருந்து இன்னும் மீள முடியலை.'' 

சாந்தி வில்லியம்ஸ்

“ 'மெட்டி ஒலி' உள்பட பல சீரியல்களில் உங்க நடிப்புக்கு கிடைச்ச ரீச் பெருசு. அந்த அனுபவம் பற்றி..." 

"என்னோட கஷ்டமான சூழல்ல ராதிகா மேடம்தான் 'சித்தி' சீரியல்மூலமா சின்னத்திரையில் முதல் வாய்ப்பு கொடுத்தாங்க. தொடர்ந்து 'வாணி ராணி' வரை அவங்களின் எல்லா சீரியல்களிலும் நடிச்சுட்டிருக்கேன். 'மெட்டி ஒலி' ராஜம்மா கேரக்டர் பெரிய ரீச் கொடுத்துச்சு. ரொம்ப நெகட்டிவ் ரோல் அது. சீரியல் ஒளிபரப்பான சமயத்தில் தினமும் என்னை திட்டினவங்க எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை. 'எதுக்கு இப்படி மருமகளைக் கொடுமை பண்றே'னு அடிக்காத குறையாக பாய்ஞ்சவங்க உண்டு. அந்த சீரியல்ல நடிச்சுட்டிருந்தப்போதான் என் கணவர் காலமானார். அப்போ பொருளாதார ரீதியாக ரொம்ப கஷ்டத்தில் இருந்தேன். 'மெட்டி ஒலி' டைரக்டர் திருமுருகன் சார் மற்றும் தயாரிப்பாளர் சித்திக் சார் செய்த உதவிகளை என் வாழ்நாளுக்கும் மறக்கமாட்டேன்." 

“இப்போ வரை நெகட்டிவ் ரோலில்தான் அதிகமா நடிக்கறீங்க அது ஏன்?'' 

“ 'மெட்டி ஒலி' சீரியலின் வெற்றியால் அடுத்தடுத்து நெகட்டிவ் ரோலே வந்தது. நிஜத்துல நான் ரொம்ப அமைதி. அதுக்கு ஆப்போசிட்டா நெகட்டிவ் ரோலில் நடிக்கிறதை நினைச்சு பல நேரங்களில் சிரிச்சுப்பேன். இதுவரை முப்பதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சுட்டேன்." 

“முன்புபோல சினிமாவில் உங்களைப் பார்க்க முடியலையே...'' 

“எங்கே போனாலும் ரசிகர்கள் கேட்கிற முதல் கேள்வி இதுதான். நான் எப்போதும் நடிக்கத் தயார். ஆனால், என்னை மாதிரியான சீனியர் கலைஞர்களுக்கான முக்கியத்துவம் இப்போ கிடைக்கிறதில்லை. என் புள்ளைங்க வேலைக்குப் போறாங்க. அதனால், என் பாடு கொஞ்சம் பரவாயில்லை. புதியவர்களின் வரவு நல்லதுதான். ஆனா, கஷ்ட நிலையில் நிறைய சீனியர் கலைஞர்கள் இருக்காங்க. அவங்களை நினைச்சுப் பார்க்க யாரும் தயாரில்லை. சினிமா உலகத்தின் இந்தப் புகழுக்குக் காரணமான பழைய கலைஞர்களை மறக்கிறது மிக ஆபத்து. இதை சினிமா உலகம் புரிஞ்சுக்கணும்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?