"காதலைக்கூட பெண்கள்மீது வன்மமாகத்தான் காட்டுகிறார்கள்!" பாடலாசிரியர் உமாதேவி #AcceptTheWaySheIs

''பெண்களின் அழகை தங்களின் உடைமையாகப் பார்த்துவந்த ஆண்கள், இன்று அவர்களின் அறிவையும் உடைமையாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், எப்போதும் விழிப்போடு இருங்கள்'' எனக் கூர்மையான வார்த்தைகளால், மகளிர் தின வாழ்த்துகள் சொல்கிறார், பாடலாசிரியர் உமாதேவி. 'அடி வாடி திமிரா', 'புது வரலாறே' என இவரின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தூக்கலாகவே பெண்ணியம் பேசும். 

'திரைத்துறை 100 சதவிகிதம் பெண்களுக்கு ஏற்ற துறைதானா?' என்பது பற்றி நம்மிடம் பகிர்ந்தார். 

உமாதேவி

''தங்கள் வீட்டுப் பெண்கள் சினிமாவுக்குள் வந்தால், தங்களது சாதி மற்றும் மதத்தின் கௌரவம் போய்விடும் என்று நினைத்த ஆதிக்க சிந்தையுள்ள ஆண்களே, சினிமா பெண்களுக்கு பொருத்தமற்ற இடம்; கெளரவமற்ற இடம் எனச் சொன்னவர்கள். அந்த ஆதிக்க சிந்தைகள் இன்று இற்று விழுந்துகொண்டிருக்கின்றன. பெண் விடுதலைக்கான படைப்பாளிகள், முற்போக்குவாதிகள் சினிமாவில் பெண்களின் இடத்தைச் சாத்தியப்படுத்திவிட்டார்கள். இப்படிச் சாத்தியப்படுத்தவர்களில் பலரும் ஆண்கள்தான்'' என்கிறார் உமாதேவி. 

சமீப வருடங்களாக, காதலின் பெயரால் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளுக்கும் சினிமாவுக்குமான தொடர்பையும் கோடிட்டுக் காட்டுகிறார். ''காதல் என்பது அறமும் அழகியலும் சேர்ந்த கலவை. அதை மென்மையாக வெளிப்படுத்தினால், பார்க்கும் ரசிகனுக்குள்ளும் அந்த உணர்வு செல்லும். முகம் சுளிக்கிற மாதிரி காட்டினால், அதுவே பார்க்கிறவர்களின் மனதில் பதிவாகும். சினிமா வழியாக எப்படிப்பட்ட கருத்துகளையும் சமூகத்துக்குச் சொல்லிவிட முடியும். அப்பேர்ப்பட்ட சினிமாவில், பெண்கள் அதிகமாக இருக்க வேண்டும். பெண் ஆளுமைகள் அந்தத் துறையில் கோலோச்ச வேண்டும். இதை மொத்த பெண்களுக்குமாகப் பேசுகிறேன். சினிமா பெண்களிடம் போய்ச் சேர வேண்டும். இங்கே பெண்கள் குறைவாக இருப்பதினால்தான், பெண்களின் காதல் உணர்வுகள் சரியாக சமூகத்திடம் சேரவில்லை. இதன் விளைவே, மென்மையான காதலையும் வன்மமான முறையில் சொல்கிறார்கள் ஆண்கள். அந்தக் காதலைப் பெண்கள் ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில், வெறியாட்டத்தில் இறங்கிவிடுகிறார்கள்'' என்கிறார் மிகுந்த வருத்தத்துடன்.

பாடலாசிரியர்

பெண் விடுதலை மற்றும் பெண்கள் எந்த அளவுக்கு ஆண்களைச் சார்ந்திருக்கலாம் என்பது பற்றி குறிப்பிடும் உமாதேவி, ''இதுதான் பெண் விடுதலை என்று ஒரு கருத்தை மையப்படுத்திப் பேசவே முடியாது. ஒரு பெண்ணுக்கு விடுதலையாகத் தெரிவது, இன்னொரு பெண்ணுக்குச் சாதாரண விஷயமாகத் தெரியலாம். உதாரணமாக, எட்டு மணி இரவுகூட ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பில்லாமல் போகலாம். இன்னொரு பெண்ணின் வேலையே இரவு நேரப் பணியாக இருக்கலாம். அதனால், உங்களுக்கு எந்த அளவுக்கு இந்தச் சமூகத்தில் விடுதலை வேண்டுமோ, அந்த அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான விடுதலை என் விடுதலையிலிருந்து முரண்படலாம் என்பதுதான் என் கருத்து'' என்கிறார். 

பாடலாசிரியர்

''உலகம் முழுக்க ஒரு பெண், தன் கணவனை தாம்பத்தியம் தவிர மற்ற விஷயங்களில் சார்ந்திருக்காமல் இருப்பதுதான் பெண்ணுக்கான முழு சுதந்திரம் என்பேன். ஆண்களின் முன்னால் பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்வது, ஆண்களுக்கான மரியாதைக் குறைவாக இந்தக் காலத்திலும் பார்க்கப்படுகிறது. இதில் யாருடைய மரியாதை எங்கே கெட்டுப்போய்விட்டது? நான் வேலை பார்க்கும்போது எப்படி உட்கார்ந்தால் எனக்கு சௌகரியமோ அப்படித்தான் உட்கார்ந்திருப்பேன். இதில் அடுத்தவரின் எண்ண ஓட்டம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை'' என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

பாடலாசிரியர் உமாதேவி சொல்லியிருப்பதைப்போல, 'சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழாமல் இருக்க வேறு எந்தெந்தத் துறைகளில் பெண்கள் ஆளுமைசெலுத்த வேண்டும்' என்று நீங்கள் நினைக்கும் ஒரு துறையை  #AcceptTheWaySheIs என்ற ஹேஷ்டேக்குடன் நீங்களும் பதிவுசெய்யுங்கள் தோழிகளே..!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!