"மார்ச் வரைதான் ஸ்டிரைக்... ஏன்னா..?!" - வெளுக்கும் இயக்குநர் அறிவழகன்

சமீபத்தில் தமிழ் சினிமா ஸ்டிரைக் பற்றி அதிரடியாக ட்விட்டரில் பேசியுள்ளார், இயக்குநர் அறிவழகன். "பெரிய படங்கள் எதுவும் பாதிக்கப்படப் போவதில்லை. மார்ச் மாதம் என்பதால் சிறிய பட்ஜெட் படங்கள்தான் பாதிக்கப்படும்" என்று கூறிய அவரிடம் ஸ்டிரைக் குறித்த சில கேள்விகளை முன்வைத்தோம். 

அறிவழகன்

"ஸ்டிரைக்கின் முடிவு எப்படி இருக்கும்னு நெனைக்கிறீங்க?"

"ஸ்டிரைக் நடத்துறதுக்கான முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமானு தெரியாது. ஏப்ரலுக்கு முன்னாடி ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கணும்னு சொல்றாங்க. ஏன்னா, அந்த நேரத்துலதான் பெரிய பட்ஜெட் படங்கள்  ரிலீஸ் ஆகும். அதனால, மார்ச் மாதம் மட்டும்தான் ஸ்டிரைக் நடத்தணும்னு முன்கூட்டியே தீர்மானிச்சுட்டாங்க. இது மூலமா சரியான தீர்வு கிடைக்காதுனு தெரிஞ்சதுக்கு அப்புறமும், வீணா போராட்டம் நடத்துறதனால எந்தவித ஆதாயமும் இல்லை. மார்ச் மாதத்துல இது நடக்கிறதனால, சின்ன பட்ஜெட் படங்கள்தான் பெரிதளவு பாதிக்கப்படுது. வாரத்துல நான்கு படங்கள் வெளிவருது. அதுல ரெண்டு படங்கள்தான் நமக்குத் தெரிந்த படங்கள். மீதி இருக்கிற ரெண்டு படங்களும், எப்போ தியேட்டருக்கு வருது, எப்போ தியேட்டரை விட்டுப் போகுதுனே தெரியாது. அப்படியான படங்கள் ரிலீஸ் ஆவதற்கு உரிய மாதம் மார்ச்தான். அதையும் தடுத்தா, அவங்கெல்லாம் என்ன பண்ணுவாங்க? 

பொதுமக்களுக்கு இதனால நஷ்டம் எதுவும் இல்லை. சில ரசிகர் மன்றங்கள், அவங்க ஹீரோக்களோட படங்கள் வெளிவரலையேனு கவலைப்படலாம். மத்தபடி, தியேட்டர் உரிமையாளர்களுக்குத்தான் நஷ்டம் அதிகம். பொதுமக்கள்கிட்ட ஸ்மார்ட்போன்ல படம் பார்க்குற பழக்கம், தியேட்டர் இல்லைனா இன்னும் அதிகமாத்தான் ஆகும். 

படங்களோட போஸ்ட்-ப்ரொடக்ஷன்கூட நடத்தக் கூடாதுன்னு சொல்றாங்க. எடிட்டிங் ரூமுக்குள்ள உட்கார்ந்து எடிட் பண்ணா யாருக்குத் தெரியப்போகுது? ஷூட்டிங் நடக்குதா இல்லையான்னு மட்டும்தான் அவங்களால கண்காணிக்க முடியும். மார்ச் மாதம் பல்வேறு காரணத்தினால் தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவு. அதனால, இப்படி ஒரு ஸ்டிரைக் நடக்குதுன்னே மக்களுக்குத் தெரியாது. இந்த மாசத்தோட ஸ்டிரைக்கை நிறுத்தாமல், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்வது நல்லது."

"நயன்தாராகிட்ட கதை சொல்லும்போது அவங்க எப்படி ரியாக்ட் பண்ணாங்க? படத்தை எப்போ எதிர்பார்க்கலாம்? எந்த மாதிரியான கதை இது?"

"இது ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் படம். முதல் பாதி த்ரில்லர், இரண்டாவது பாதி காமெடியா, ரொமான்ஸா, ஆக்‌ஷனானு இனிமேதான் சொல்வேன். நயன்தாராவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள்ல அடுத்தடுத்து ஐந்து படங்கள் இருக்கு. அதனால, இப்போவரை இந்தப் படத்தோட ஷூட்டிங் தேதியை முடிவு செய்யலை. 'ஈரம்', 'குற்றம் 23', 'வல்லினம்' ஆகிய படங்கள் மாதிரி இந்தப் படம் இருக்காது. த்ரில்லேரோட சைக்காலஜிங்கிற ஒரு விஷயத்தை கதையில சேர்த்திருக்கிறது எனக்குப் புதுசு. சும்மா நாலு பாட்டு, சண்டைக் காட்சிகள், காமெடி என எல்லாம் சேர்ந்து இருக்கிறதுதான் கமர்ஷியல் படம்னு நெனைக்கிறோம். என்னைப் பொறுத்தவரை மக்களுக்குத் தேவையான கதையை, தேவையான நேரத்துல, தேவையான விதத்துல சொல்றதுதான், கமர்ஷியல் படம். 'ஈரம்' படம் எடுத்த சமயத்துல, வேறெந்த பேய்ப் படமும் வெளிவரலை. அந்த நேரத்துல அதை வெளியிட்டதுனால, ஹிட் ஆச்சு. அந்த மாதிரிதான் இந்தப் படமும் இதுவரை மக்கள் பார்க்காத வேற லெவல் படமா இருக்கும்னு நெனக்கிறேன்.

நயன்தாரா

இந்த மாதிரி ஒரு கதையை நயன்தாரா தவிர தமிழ்ல வேறு யாராலேயும் நடிக்க முடியாது. ஒருவேளை நயன்தாரா 'நோ' சொல்லியிருந்தாங்கன்னா, கண்டிப்பா இதை இந்திக்குக் கொண்டு போயிருப்பேன். இப்படத்தில் கதை சொல்லும் விதமும், கதையும் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பப் புதுசு. நயன்தாரா இந்தக் கதைக்குப் பொருத்தமா இருப்பாங்கன்னு நெனச்சேன். 45 நிமிஷத்துல மொத்தக் கதையையும் சொல்லிட்டேன். இடையில வந்த சந்தேகங்களை என்கிட்ட கேட்டு, நிவர்த்தி பண்ணிக்கிட்டாங்க. நயன்தாரா ஏற்கெனவே என் படங்களைப் பார்த்திருக்கிறதனால, அவங்களுக்கு எம்மேல நம்பிக்கை அதிகமா இருந்துச்சு. கதை சொல்ல ஆரம்பிச்சப்போ, உலகத்தையே மறந்து கதை கேட்கத் தொடங்கிடுவாங்க. ஒரு கட்டத்துக்கு மேல, இந்தக் கதையில இதையெல்லாம் சேர்க்கலாம்னு சொல்லி, அவங்களே கதையை டெவலப் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அந்த அளவுக்கு நல்ல கதை சொல்லி. அவங்களுக்கு இந்தக் கதை மட்டும் இல்லை, வேற எந்தக் கதை கொடுத்தாலும், கச்சிதமா நடிச்சுக் காட்டுவாங்க. அதுதான் நயன்தாராவோட ப்ளஸ்" என்று உற்சாகத்துடன் முடித்தார் அறிவழகன். 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!