Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

" 'என்னம்மா படிக்கிறீங்க? ஸாரிடா கண்ணுங்களா; அப்பா மறந்துட்டேன்!' " மகள் கமலா செல்வராஜ் #GeminiGanesanMemories

கமலா செல்வராஜ்

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த நாயகர்களில் ஒருவர், 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன். காலத்தால் அழியாத பல வெற்றிப் படங்களின் நாயகன். அவரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தில் (22.03.2005), தந்தை பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார், டாக்டர் கமலா செல்வராஜ். 

"பொதுவாக, அப்பாக்களுக்குப் பெண் குழந்தைகள் என்றால் அன்பு அதிகமாக இருக்கும். எங்க அப்பா அதில் உச்சம். மகள்களிடம் வெச்சிருந்த பாசத்துக்கு ஈடு இணையே கிடையாது. எல்லா விஷயங்களிலும் எங்களை ஆண்களைவிட பலமானவர்களாகவே வளர்த்தார். நினைத்த காரியங்களில் விடாமுயற்சியுடன் வெற்றிபெறவும், நேர்மையான வழியில் செயல்படவும் சொல்லிக்கொடுத்து வளர்த்தார். அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடிச்சுட்டிருந்தபோதும், வீட்டுக்கு வந்ததும் எங்களோடு நேரத்தைச் செலவிடுவார். வீட்டில் ஒண்ணா தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுவோம்; செல்லமாக சண்டைகள் போடுவோம். என் அக்காவுக்குக் கல்யாணம் ஆனபோது, பொண்ணு இன்னொரு வீட்டுக்குப் போகுதேனு அப்பா கதறி அழுதார். அதுதான் என் வாழ்க்கையில் அப்பா அழுததைப் பார்த்த முதல் தருணம். என் திருமணத்தின்போதும் ரொம்ப வருந்தினார். 

ஜெமினி கணேசன்

ஃப்ரீ டைம் கிடைக்கும்போதெல்லாம் எங்களை ஷாப்பிங் கூட்டிட்டுப் போவார். பிடிச்சதை வாங்கிக்கொடுப்பார். ஸ்கூல் மற்றும் மியூசிக் க்ளாஸூக்கு அவரே டிரைவ் பண்ணி கூட்டிட்டுப் போவார். எங்களுக்கு மேக்கப் போட்டுவிடுவார். நெயில் பாலிஷ் போட்டுவிடுவார். ஈவுனிங் பீச்சுக்கு கூட்டிட்டுப்போய், ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுப்பார். அதெல்லாம்தான் நான் சிலாகிச்சு மகிழ உதவும் தருணங்கள். வெளியிடங்களில் பார்க்கிறவங்க, 'பிள்ளைங்க என்ன படிக்கிறாங்க?'னு கேட்பாங்க. உடனே அப்பா, 'என்னம்மா படிக்கிறீங்க?'னு எங்ககிட்டே திருப்பி கேட்பார். அதுதான் எங்களுக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்தும். 'ஸாரிடா கண்ணுங்களா. அப்பா மறந்துட்டேன்'னு சமாதானம் செய்வார். 

எனக்கு 17 வயசு இருந்தபோது ஒருநாள், அப்பாகிட்ட கார் ஓட்டணும்னு சொன்னேன். அடுத்த நாளே, பழைய ஃபோர்டு காரில் எனக்கு டிரைவிங் சொல்லிக்கொடுத்தார். அது எனக்கு என்றைக்கும் மறக்கமுடியாத நிகழ்வு. அந்த காரை இப்போவரை பயன்படுத்தறேன். இளம் வயசுல நான் ரொம்ப வேகமா கார் ஓட்டுவேன். அதனால், அப்பாகிட்ட என்னைப் பற்றி புகார் போகும். இது விஷயமா ஒருநாள் அப்பா கேட்டதும், 'நான் உங்க பொண்ணுப்பா. உங்களை மாதிரிதானே ஓட்டுவேன்'னு சொன்னேன். சிரிச்சுக்கிட்டே போய்ட்டார். அப்புறம் அவரும் நானும் வேகமா கார் ஓட்டுறதைத் தவிர்த்துட்டோம். 

கமலா செல்வராஜ்

அப்பா எங்கே இருந்தாலும் அந்த இடம் கலகலப்பா இருக்கும். எல்லோரையும் கலாய்ச்சு மகிழ்ச்சிப்படுத்துவார். பல நேரங்களில் எங்களை ஷூட்டிங் கூட்டிட்டுப்போவார். வெளியூர் ஷூட்டிங்னாலும் அதிக நாள்கள் இல்லாமல் பார்த்துப்பார். எங்ககிட்ட போனில் பேசிடுவார். 'படிச்சீங்களா? சாப்பிட்டீங்களா?'னு தவறாமல் கேட்பார். கர்நாடக மாநிலம், மணிபால் கஸ்தூரிபா மெடிக்கல் காலேஜில் நான் சேரப்போகும் நாள். முந்தின நாளே குடும்பத்தோடு அந்த ஊரில் தங்கிட்டோம். காலையில் பார்த்தால், எங்க காரை காணோம். போலீஸில் புகார் கொடுத்தோம். விசாரணையில், 40 மைல் தொலைவில் கார் ஆக்ஸிடென்ட் ஆன நிலையில் கண்டுபிடிச்சாங்க. காரை திருடின சில இன்ஜீனியரிங் ஸ்டூடன்ஸை போலீஸ் பிடிச்சுட்டாங்க. 'இந்தப் பசங்ளோட எதிர்காலம் வீணாக்கக்கூடாது. இவங்க மேலே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்'னு சொன்ன அப்பா அந்தப் பசங்களை மன்னிச்சுட்டார். இப்படி சென்சிடிவா எல்லா விஷயங்களையும் ஹேண்டில் பண்ணுவார். அந்தப் பசங்க அப்பாவின் செயலை நினைச்சு இன்னிக்கும் வாழ்த்திட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். 

1964-ம் வருஷத்தின் மறக்க முடியாத நாள் அது. தனுஷ்கோடிக்குப் போன அப்பா பெரும் புயலில் சிக்கிகிட்டார். இப்போ மாதிரிஜெமினி கணேசன் தொலைத்தொடர்பு வசதிகள் அப்போ இல்லை. அப்பா இறந்துட்டார்னு தகவல் வந்திடுச்சு. ஆனா, 'என் புள்ளை வந்துடுவான். அவனுக்கு எதுவும் ஆகாது'னு சாமி ரூமில் உட்கார்ந்து பாட்டி பூஜை செய்துட்டே இருந்தாங்க. பல சினிமா பிரபலங்கள் வீட்டுக்கே வந்து இரங்கல் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ நான் ரொம்ப சின்னப் பொண்ணு. அந்த விஷயத்தின் தன்மையை உணரும் பக்குவம் இல்லை. சில நாள் கழிச்சுதான் அப்பா வீட்டுக்கு வந்தார். காலிங்பெல் சத்தத்தைக் கேட்டு அப்பாவாகத்தான் இருக்கும்னு ஓடிப்போய் கதவைத் திறந்தேன். என் கணிப்பும் சரியா இருந்துச்சு. அப்பா ரொம்பவே சோர்வா இருந்தார். அவரைப் பார்த்ததும் உற்சாகமாக கத்த ஆரம்பிட்டேன். அப்புறம் அவரோடு பேசி பழைய உற்சாக நிலைக்கு வந்தோம். 

எனக்குப் பிடிச்ச மருத்துவ துறையில் சாதிக்க ரொம்பவே ஊக்கப்படுத்தினார். நான் டாக்டர் ஆனதும், 'என் பொண்ணு டாக்டர்... என் பொண்ணு டாக்டர்'னு எல்லோரிடமும் சொல்லி சொல்லி மகிழ்ந்தார். என் முதல் செயற்கை கருத்தரிப்பு குழந்தையைப் பெற்றெடுத்தது, அப்பாவின் ரசிகர் மனைவிக்குத்தான். மருத்துவத் துறையில் நான் பெரிய உயரங்களை அடைந்தபோது, அப்பாவும் அம்மாவும் கண்குளிர பார்த்து மகிழ்ந்தாங்க. மனம் குளிர பாராட்டினாங்க. 

2005-ம் வருஷம் அப்பா இறந்துட்டார். ஒவ்வொரு முறையும் என் வீட்டுக்குள்ளே நுழையும்போது, ஹாலில் இருக்கும் அப்பாவின் போட்டோவைப் பார்த்து நெகிழ்வேன். அப்பாவின் பிறந்தநாள், நினைவு நாள் சமயத்தில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கருணை இல்லத்துக்கு உணவும் மற்ற உதவிகளையும் செய்வோம். அப்பாவின் ரசிகர்கள் எங்க வீட்டுக்கு வருவாங்க. அவர்களை உபசரித்து அனுப்புவோம். அப்பா இப்போ உயிரோடு இருந்திருந்தால், என் வளர்ச்சியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீரில் உச்சி முகர்ந்து ஆசிர்வாதம் செய்திருப்பார். (கண் கலங்குகிறார்). 

எங்க அம்மா அலமேலுவுக்கும் பிள்ளைகளான எங்களுக்கும் அப்பா எந்த ஒரு குறையும் வெச்சதில்லை. எல்லோரையும் சமமாகக் கருதினார். அவர் வாழும் காலத்தில் செய்த தான தர்ம காரியங்கள் பலவும், அவர் இறந்த பிறகுதான் எனக்குத் தெரிஞ்சது. தொடர்ந்து அவர் வழியில் என்னாலான நல்ல காரியங்களை செய்துகிட்டிருக்கேன். இப்பவும் அவர், கடவுளா எங்களைத் தினமும் ஆசிர்வாதம் செய்துட்டுதான் இருக்கார்." 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்