Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்க்கிறேன், மைனஸை ப்ளஸ்ஸா மாத்துறேன்!” - இமான் அண்ணாச்சி

Chennai: 

தொலைக்காட்சியில் தனக்கென தனியிடம் பிடித்த குழந்தைகளின் காமெடி சூப்பர் ஸ்டார் தற்போது கிட்டத்தட்ட பத்து படங்களுக்கும் அதிகமா நடித்துவருகிறார். "டிவியில அண்ணாச்சி வந்தாலே சிரிப்பு மத்தாப்புதான்னு சொன்னவங்க மத்தியில சினிமாவுலயும் ஜெயிச்சுக் காட்டணும்னு நெனக்கிறேன். அதுக்கேத்தமாதிரி பட வாய்ப்புகளும் அதிகமா வருது" என்று உற்சாகத்தில் இருக்கும் அண்ணாச்சியிடம் பேசினேன். 

இமான் அண்ணாச்சி

"இத்தனை படங்கள்ல நடிக்கிறீங்க, எப்படி உணர்றீங்க?"

"இத்தனை படங்களை ஒரே சமயத்துல மேனேஜ் பண்றது கஷ்டமாத்தான் இருக்கு. இனி டிவி பக்கம் போகமுடியாதோன்ற பயமும் இருக்கு. 'டிராஃபிக் ராமசாமி' படத்துல மேயர் கதாபாத்திரம்ல நடிச்சிருக்கேன். இதுல எனக்கு வழக்கமான காமெடி கேரக்டர் கிடையாது. பயங்கரமான நெகடிவ் ரோல். வினய் நடிக்கும் 'நேத்ரா' படத்தில் கனடாவில் ஹோட்டல் வெச்சுருக்கிறவரா வர்றேன். 'பொதுநலன் கருதி' படத்துல எப்படியாவது கவுன்சிலர் ஆகணும்னு வெறித்தனத்தோட இருக்குற அரசியல்வாதி கேரக்டர்ல நடிச்சிருக்கேன். 'இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்' என்ற படத்துல மூச்சுவிடாம நாலு நிமிஷம் நீளமான வசனம் பேசி நடிச்சிருக்கேன். காமெடி ரோல்ல நடிக்கிறவங்களுக்கு இந்தமாதிரியான சவாலான காட்சிகள் அமையுறது கஷ்டம். அடுத்ததா, 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்', 'வேங்கடசுப்ரமணியம் மைக் டெஸ்டிங்-123', 'ராஜாவும் ஐந்து கூஜாவும்', 'களவானி-2'னு நிறைய படங்கள்ல காமெடி பண்ணிட்டு இருக்கேன்." 

"இயக்குநர்  ஹரி படங்கள்ல உங்களை தொடர்ந்து பயன்படுத்துறார். இப்ப ‘சாமி-2’வுல நடிச்சிருக்கீங்க...”

"'சாமி-2' படத்தோட ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிஞ்சிருச்சு. அதுல எனக்கு 15 நாள் ஷூட்டிங். அதில் 10 நாள் நடிச்சு முடிச்சிட்டேன். விக்ரம் சாருடன் படம் முழுக்க பயணிக்கிற மாதிரியான முக்கியமான போலீஸ் கேரக்டர். விக்ரம் சார் ஷூட்டிங்ல இருந்தா, அங்க நகைச்சுவைக்கு குறைவே இருக்காது. ‘இவங்க பெரிய நடிகர், இவங்க சாதாரண கேரக்டர் ரோல் பண்றவங்க’னு பிரிச்சுப்பார்க்குற குணம் அவர்ட்ட கிடையாது. எல்லார்ட்டயும் ஒரேமாதிரி பழகுவார். இந்த பத்து நாள் ஷூட்டிங்ல கீர்த்தி சுரேஷோட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு ஒரே ஒருநாள் மட்டும்தான் கிடைச்சுது. சூரி ஏற்கெனவே கீர்த்தி சுரேஷுடன் நடிச்சதால அவர்கிட்ட நல்லா பேசிட்டு இருந்தாங்க. எனக்கு வெறும் ஹாய் மட்டும்தான் சொன்னாங்க."

"பரபரனு சினிமாவுல நடிக்கிறதால இனி டிவி பக்கம் வரமாட்டீங்களா?"

"இப்பவும் 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க' நிகழ்ச்சி பண்ணிட்டுதான் இருக்கேன். 'குட்டிச் சுட்டீஸ்- சீசன் 2' ஆரம்பிக்கலாம்னு சன் டிவி குழுவினர் திட்டமிட்டுட்டு இருக்காங்க. நமக்கு டிவிதான் எப்பவும் கை கொடுக்குற விஷயம். அதை அவ்வளவு ஈஸியா விட்டுடக்கூடாதுனு நினைக்கிறேன். 

இமான் அண்ணாச்சி

ஏதோ ஒரு கிராமத்துல பிறந்து, அழகுன்னா என்னன்னே தெரியாம வளர்ந்த எனக்கு டிவி மூலமா கிடைச்ச புகழ், எந்தளவுக்கு மரியாதை மிக்கதுனு மக்கள்ட்ட பேசும்போதுதான் தெரியவந்துச்சு. எல்லாரும் அவங்க குடும்பத்துல ஒருத்தவன்மாதிரி என்னை பார்க்குறாங்க. இது எல்லாத்தையும் மீறி தொலைக்காட்சியை முழுமையா விட்டுட்டு சினிமா பக்கம் போகுற மாதிரியான நிலைமையும் வரலாம். அது சினிமா எனக்கு எந்தளவுக்கு இடம் கொடுக்குது என்பதைப் பொருத்துதான் ஒரு முடிவுக்கு வரமுடியும்." 

"சினிமாவுல உங்களுக்கு கிடைக்குற வரவேற்பைப்பற்றி உங்க குடும்பம் என்ன நினைக்குறாங்க?"

"எனக்கு அமைந்த குடும்பம் மாதிரி வேறு யாருக்கும் அமைஞ்சிருக்கானு தெரியலை. கல்யாணம் ஆன முதல் எட்டு வருஷத்துக்கு என்ன வேலை பண்றதுனு தெரியாம, சினிமாவுல நடிக்குறதுக்கு மட்டும் முயற்சி பண்ணிட்டு இருந்தேன். வருமானத்துக்கு வழியே இல்லாம இருந்துச்சு. அப்போ என்னையும் சப்போர்ட் பண்ணிக்கிட்டு, குடும்பத்தையும் வழிநடத்திட்டு இருந்தது என் மனைவிதான். ‘மக்கள் தொலைக்காட்சி’யில் ஒளிபரப்பான 'கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை' நிகழ்ச்சிதான் என்னை இந்த லெவல்க்கு கொண்டுவந்து விட்டிருக்கு. இப்போ எனக்கு எட்டாவது படிக்கிற பொண்ணு இருக்காங்க. அவங்கதான் நான் பண்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் முதல் ரசிகை. அப்பா இவ்வளவு கலகலப்பா இருக்காங்கனு மத்தவங்க சொல்லும்போது அவளுக்கு ரொம்ப சந்தோஷம். 

"நகைச்சுவையில் தனித்து தெரிய என்னமாதிரியான விஷயங்களை ஃபாலோ பண்றீங்க?”

"இரட்டை அர்த்தமுள்ள வசனம் இருந்தா, அதை மாத்தச் சொல்லி இயக்குநர்கள்ட்ட ரெக்வஸ்ட் பண்ணுவேன். அதை எப்படி மாத்தி எழுதலாம்னும் நானே சொல்வதும் உண்டு. என் ரசிகர்கள்ல குழந்தைகள் அதிகம். அதனால அந்தமாதிரியான விஷயங்களை அறவே தவிர்த்திடுவேன். ஹ்யூமர்ல இருக்குற மைனஸைக்கூட இப்படி ப்ளஸ்ஸா மாத்திட்டு இருக்கேன். ஆயிரம் பேர் நிக்குற இடத்துல நாம மட்டும் தனியா தெரியணும்னா ஜவ்வு மிட்டாய் கலர்ல சட்டை போட்டு நிக்கணும்னு சொல்வாங்க. அந்தமாதிரியான காமெடி நிறைய பேர் பண்ணினாலும் அதில் நாம தனித்துவமா தெரியுறதுக்கு என்ன வழினு யோசிச்சேன். அப்பதான் நம்ம ஊரு பாஷயில தமிழ் பேசணும்ங்கிற முடிவுக்கு வந்தேன். நெல்லைத் தமிழ்மட்டுமல்ல, கொங்கு, மதுரை, சென்னைத் தமிழ்கூட பேசுவேன்." 

"ஒரு திமுக உறுப்பினரா இப்ப உள்ள அரசியல் சூழல்ல குறித்து என்ன நினைக்கிறீங்க?”

"இப்ப நடந்துட்டு இருக்கும்  ஆட்சியைப் பற்றி எதுவும் சொல்றதுக்கில்லை. கூடிய விரைவில் தமிழகத்துக்கு தேர்தல் வரும். திமுக ஆட்சி அமைக்கும். தளபதி ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆவார். ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் நிலைத்தன்மை இல்லாம இருக்குதுனு எல்லாருக்குமே தெரியும். ஆனா, திமுக ஆட்சி அமைந்தால்தான் அந்த நிலையற்றத் தன்மை சரியாகும்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement