Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``தலைவர்கள் கெட்டப்ல தூங்கி விழும் குழந்தைகளை நினைச்சா சிரிப்பா இருக்கு!" - `மலரும் மொட்டும்' அனிதா குப்புசாமி. #25YearsOfSunTV

90's கிட்ஸ்களுக்கு எப்போதும் மறக்க முடியாத பல நினைவுகளைக் கொடுத்தது, சன் டிவி. இன்றைய பல டிவி நிகழ்ச்சிகளுக்கு முன்னுதாரணமாக இருந்து, பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைக் கொடுத்த சன் டிவி தற்போது 25- ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாமும் கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணி ப்ளாஷ்பேக் காட்சிக்குள்ளே போனால், குட்டீஸ்களுக்காகவே ஒளிப்பரப்பான `மலரும் மொட்டும்' நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. இந்த நிகழ்ச்சியைப் பலர் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொகுத்து வழங்கியிருந்தாலும், பாடகி அனிதா குப்புசாமியை நம்மால் மறக்க முடியாது. `மலரும் மொட்டும்' நினைவலைகளைப் பற்றி அவரிடம் பேசினேன். 

அனிதா குப்புசாமி

``இந்த நிகழ்ச்சியை எனக்கு முன்னாடியே சிலர் தொகுத்து வழங்கிட்டு இருந்தாங்க. அந்தச் சமயத்தில் என்கிட்ட கேட்டாங்க. ஏன்னா, அவங்களுக்கு ரொம்ப இன்னோசன்ட்டா இருக்கிற தொகுப்பாளினிதான் தேவைப்பட்டாங்க. முக்கியமா, தொகுப்பாளினியைப் பார்க்குறப்போ குழந்தைங்க பயப்படமா பேசணும்னு நினைச்சாங்க. `மலரும் மொட்டும்' நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட பசங்க எல்லாம் ரொம்ப அடம் பிடிப்பாங்க. சில பசங்க, பக்கத்துல இருக்கிற பசங்ககிட்ட பேசக்கூட மாட்டாங்க. அந்தப் பசங்களை தாஜா பண்ணிப் பேச வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். ஆனா, நம்மகிட்ட பேச ஆரம்பிச்சிட்டா, நல்லாப் பேசுவாங்க!

என்கிட்ட சேனல் தரப்பிலிருந்து கால்ஷீட் கேட்கும்போது, நான் ரொம்ப பிஸியா இருந்தேன். நிறைய கச்சேரி நிகழ்ச்சிகளெல்லாம் பண்ணிட்டிருந்த சமயம் அது. என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கிற நிகழ்ச்சிகளை மட்டும்தான் நான் பண்ணுவேன். என்கிட்ட கேட்டப்போ, உடனே ஓகே சொன்னேன். ஏன்னா, நாம பண்ற நிகழ்ச்சி கொஞ்சமாவது நமக்கும் யூஸ்புஃல்லா இருக்கணும், மத்தவங்களுக்கும் பயன்படணும். தவிர, `மலரும் மொட்டும்' நிகழ்ச்சியை என் ஃப்ரீ டைம்லதான் ஷூட் பண்ணுவாங்க. ஒரு நாளைக்கு நாலு எபிசோடு ஷூட்டிங் போகும். 

இந்த நிகழ்ச்சியை மட்டும் நான் குறைந்தது பத்து வருடம் பண்ணேன். இதுவரைக்கும் எத்தனையோ நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன், இப்போகூட பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா, என்னைப் பார்க்குற ஆடியன்ஸ் இன்னமும் `மலரும் மொட்டும்' அனிதா குப்புசாமினுதான் சொல்றாங்க. நிகழ்ச்சியில கலந்துக்கிற குழந்தைகள்கிட்ட நான் வாங்க, போங்கனு மரியாதையாப் பேசுவேன். அதை டி.வியில பார்த்த பலரும், `உங்களைப் பார்த்து நாங்களும் பசங்களை மரியாதையாதான் கூப்பிடுறோம். எங்களைப் பசங்களும் மரியாதையாக் கூப்பிடுறாங்க'னு சந்தோஷமா சொல்வாங்க. இது நான் ஈழத் தமிழர்கள்கிட்ட கத்துக்கிட்ட விஷயம். தவிர, என் சொந்த ஊர் கோயம்புத்தூர். அங்கேயும் எல்லோரும் எல்லார்கிட்டேயும் மரியாதையாதான் பேசுவாங்க. 

மலரும் மொட்டுகள்

அதேமாதிரி நிகழ்ச்சியில கலந்துக்கிற குழந்தைகள்கிட்ட, `யார் வேஷம் போட்டு விட்டாங்க'னு கேட்பேன். `மம்மி'னு சொல்வாங்க. நான் `அம்மாவா?'னு கேட்பேன். `அம்மாதான்னு சொல்லணும்'னு குழந்தைகள்கிட்ட சொல்வேன். அதைப் பார்த்துட்டும் பல பெற்றோர்கள் அவங்க வீட்டுக் குழந்தைகள்கிட்ட, `அம்மா'னு கூப்பிடச் சொன்னாங்க. நான் சந்திச்ச பல சின்னக் குழந்தைங்க இப்போ பெரியவங்களா வளர்ந்திருப்பாங்க. எங்கேயாவது என்னைப் பார்க்கும்போது, `மேடம், நான் சின்னக் குழந்தையா இருக்கும்போது `மலரும் மொட்டும்' நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன்'னு சொல்லி, என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போவாங்க. எனக்குப் பெரிய சந்தோஷமா இருக்கும்.

நிறைய குழந்தைகள் `மலரும் மொட்டும்' நிகழ்ச்சியில வீரபாண்டிய கட்டபொம்மன் வேஷம்தான் போட்டுட்டு வருவாங்க. அந்த வேஷத்தைப் போட்டுக்கிட்டு அந்தச் சின்னக் குழந்தைங்க சொல்ற, `யாரைக் கேட்கிறாய் வரி, எதற்குக் கேட்கிறாய் வரி?'னு டயலாக்ஸ் பேசும்போது அழகா இருக்கும். நிறைய குழந்தைகள் அப்துல் கலாம் வேஷமும் போட்டுக்கிட்டு வருவாங்க. ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கும்போது, நிறைய குழந்தைங்க தூங்கி விழும், பக்கத்துல அம்மா இருந்தாதான் பேசுவேன்னு அடம்பிடிக்கும். அதுக்காகவே அவங்க அம்மாவைப் பக்கத்துல உட்கார வெச்சு, குழந்தைகளை மட்டும் ஃபோக்கஸ் பண்ணி ஷூட் பண்ணுவோம். 

இந்த நிகழ்ச்சியை நான் பண்ணும்போது எனக்கான டிரெஸ்ஸை என் கணவர்தான் செலக்ட் பண்ணிக் கொடுப்பார். என் சொந்த காஸ்ட்யூம்தான் யூஸ் பண்ணேன். குறிப்பா, காட்டன் புடவைகளைத்தான் நிகழ்ச்சிக்காகக் கட்டுவேன். இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கும்போது, என் முதல் பொண்ணு என்னை டிவியில பார்த்துட்டு, `நீங்க ஏன் அம்மா எல்லாக் குழந்தைகள்கிட்டேயும் சிரிச்சுப் பேசுறீங்க'னு பொறாமைப் பட்டு அழுவா. அதனாலேயே அவளை நிகழ்ச்சியோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டு போகமாட்டேன். அதையெல்லாம் இப்போ நினைச்சாக்கூட சிரிப்பா வருது!" என்கிறார், அனிதா குப்புசாமி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement