" 'கை ஏதாச்சும் மேல பட்டுச்சு... அவ்ளோதான்'னு மிரட்டியதும் பயந்துட்டார்!" நடிகை லதா ராவ்

"சீரியல்ல நடிச்சு ஆறு வருஷமாச்சு. மறுபடியும் எப்போ நடிப்பேன்னு தெரியலை. குடும்பம், குழந்தைகள், வொர்க் ஃப்ரம் ஹோம், சினிமா ஷூட்டிங்னு வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்குது" எனப் புன்னகைக்கிறார், நடிகை லதா ராவ். 'அப்பா', 'திருமதி செல்வம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.

"சீரியல் ஆக்டிங்ல இருந்து பிரேக்... என்ன காரணம்?"

"ஒருகாலத்தில், சண்டே தவிர மாதத்துல மற்ற எல்லா நாளும் நடிச்சிருக்கேன். கல்யாணம் ஆன அடுத்த நாளே ஷூட்டிங் போயிருக்கிறேன். அப்படியெல்லாம் நடிச்சுட்டு இப்போ நடிக்காம இருக்கிறது வித்தியாசமான ஃபீலிங். 'திருமதி செல்வம்'தான் என் கடைசி சீரியல். ஆனா, இந்த இடைப்பட்ட காலத்துலதான் நிறைய நல்ல நல்ல வாய்ப்புகள் வந்துச்சு. அதையெல்லாம் நான் ஏத்துக்கலை. 'என் ஃப்ரெண்ட்ஸோட அம்மாக்கள் எல்லாம் அடிக்கடி ஸ்கூலுக்கு வராங்க. நீங்க மட்டும் ஏன் வரமாட்டீக்கிறீங்க? என்னைவிட ஷூட்டிங்தான் உங்களுக்கு முக்கியமானு' என் பெரிய பொண்ணு ஒருமுறை கேட்டா. அது நியாயமாகவும் பட்டுச்சு. எப்போ வேணாலும் நடிக்கலாம். ஆனால், இப்போதான் என் அம்மா பொறுப்பை சரியா செய்யணும். அதனால்தான் சீரியல்ல இருந்து பெரிய பிரேக் எடுத்துட்டேன்."

லதா ராவ்

"குழந்தைங்க என்ன பண்றாங்க?"

"எங்களுக்கு லாரா, ராகானு ரெண்டு மகாலட்சுமிங்க. பெரிய பொண்ணு 5-வது மற்றும் சின்னப் பொண்ணு 2-வது முடிச்சிருக்காங்க. இப்போ நான் அவங்களோடு அதிக நேரத்தை செலவிடுறேன். என்னோட வேலையையும் அவங்க ஓரளவுக்குப் புரிஞ்சுகிட்டு நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கிறாங்க." 

"நீங்க நடிக்க வந்தது எப்படி?"

"வளர்ந்ததெல்லாம் பவானி சாகர். உறவினர் கல்யாணத்துக்காக அப்பாவும் நானும் சென்னை வந்திருந்தோம். வழியில 'மெட்டி ஒலி' ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அதைப் பார்க்க போன அப்பாவைத் தேடி நான் போனேன். அப்போ, 'நடிக்கிறீங்களா?'னு என்னைக் கேட்டாங்க. நான் முதல்ல மறுத்தேன். அப்புறம் ஒப்புக்கிட்டு, அந்தச் சீரியல்ல நடிச்சேன். அப்போ பத்தாவது படிச்சுகிட்டு இருந்தேன். அப்புறம், 'அப்பா' உள்பட அடுத்தடுத்து நிறைய சீரியல்கள்ல நடிச்சேன்." 

"கணவர் ராஜ்கமலுடன் காதல் மலர்ந்த தருணம் பற்றி..."

"பாலசந்தர் சாரின் 'றெக்கை கட்டிய மனசு' சீரியல்ல இருவரும் நடிச்சோம். அதில் ஒருநாள் அவர் என்னைக் கட்டிப்பிடிச்சு புரப்போஸ் பண்ற மாதிரி ஒரு ஷாட். அப்போ, 'கை ஏதாச்சும் மேல பட்டுச்சு... அவ்ளோதான்'னு ராஜ்கமலை மிரட்டினேன். அவர் பயந்துபோய் தள்ளி நின்னுட்டார். அப்புறம் அந்தக் காட்சியை வேற மாதிரி எடுத்தாங்க. வீட்டுக்கு கிளம்புறப்போ, 'வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்குங்க'னு சொன்னேன். அது அவருக்கு ஒரு இம்ப்ரஸை ஏற்படுத்தியிருக்கு. அப்புறம் சில முறை என்னை மீட் பண்ணக் கேட்டார். தட்டிக்கழிச்சுகிட்டே இருந்தேன். ஒருநாள் சங்கடமாகி, 'பாண்டிபஜார்ல இருக்கேன்'னு சொன்னேன். பத்தே நிமிஷத்துல அங்க வந்துட்டார்.  'உன் வீட்டுல மாப்பிள்ளை பார்க்கிறப்போ முதல் சாய்ஸ் நானாக இருந்தால் சந்தோஷப்படுவேன்'னு சொன்னார். 'என்ன புரப்போஸ் பண்றீங்களா?'னு கேட்டேன். 'ஆமாம்!'னு சொன்னார். அப்படித்தான் எங்க காதல் மலர்ந்துச்சு. ஒருவழியா ரெண்டு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணமான பிறகு ஒருநாள், 'அப்படி எங்கிட்ட என்னங்க உங்களுக்குப் பிடிச்சு இருந்துச்சு'னு அவர்கிட்ட கேட்டேன். 'பாண்டிபஜார்ல மீட் பண்றப்போ, பிச்சைக்காரி மாதிரி இருந்தியே. அந்த எதார்த்தமான மேக்கப் இல்லாத தோற்றம்தான் எனக்குப் பிடிச்சு இருந்துச்சு'னு சொன்னார். ஒருத்தர் கோபமா இருக்கிறப்போ, இன்னொருத்தர் அமைதியாகிடுவோம். அதனால, தினமும் காதலோடு லைஃப் சூப்பரா போயிட்டு இருக்குது. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க சேர்ந்து நடிக்கலை. 'ஜோடி நம்பர் 1', 'மஸ்தானா மஸ்தானா' நிகழ்ச்சிகள்ல ஜோடியா டான்ஸ் ஆடினோம். சேர்ந்து தொகுப்பாளர்களாக வொர்க் பண்ணியிருக்கிறோம்."

லதா ராவ்

"சினிமாவுல நடிக்கிறீங்களா?" 

"சில நாள்கள் மட்டும் ஷூட்டிங் என்பதால, செலக்டிவா படங்கள்ல நடிக்கிறேன். 'தில்லாலங்கடி' படத்துல வடிவேலு சாருக்கு ஜோடியா நடிச்சது பலருக்கும் நியாபகம் இருக்கும். அப்புறம் தொடர்ந்து பல படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். பிரபுதேவா ஹீரோவா நடிக்கும் 'யங் மங் சங்' மற்றும் பரத் ஹீரோவா நடிக்கும் '8' படங்கள்ல நடிச்சுகிட்டு இருக்கிறேன். ஒரு கார்ப்பரேட் கம்பெனியில மீடியா ஹெட்டா நாலு வருஷமா வொர்க் பண்றேன். வீட்டில் இருந்துதான் வேலை. அதனால எந்தப் பிரச்னையும் இல்லை." 

"உங்க கணவர் ஹீரோவா நடுச்சுகிட்டு இருக்காரே..."

"சீரியல் நடிப்பு, ஆங்கர்னு வளர்ந்து இப்போ ஹீரோவா நடிச்சுகிட்டு இருக்கார். சமீபத்துலதான் அவரின் 'மேல்நாட்டு மருமகன்' படம் ரிலீஸ் ஆச்சு. ஹீரோவா நடிக்கிறதைத் தாண்டி, நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டா பெயர் வாங்கிறதுதான் அவரின் பெரிய விருப்பம். சினிமாவில் நல்ல அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கிறார். அவரின் எல்லா உழைப்புக்கும் லைஃப் பார்ட்னரா சப்போர்ட் பண்ணிட்டு இருக்கேன்."  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!