`` 'மிஸியம்மா' படத்துல மட்டுமில்ல... நிஜத்திலேயும் என் அக்கா..." - நடிகையர் திலகம் சாவித்திரி நினைவுகள்

``அக்கா கோமாவில் இருந்தப்போ, ஹாஸ்பிட்டலுக்குப் போய் பார்த்தேன். 'அக்கா உன் செல்லி வந்திருக்கேன். கண்ணைத் திறந்து பாருக்கா'னு அழுதேன். அக்கா கடைசிவரை கண்ணைத் திறக்கவே இல்லை

``சாவித்திரி அக்கா பெரிய பாசக்காரி. அக்கா எங்கிருந்தாலும் அந்த இடமே கலகலப்பா இருக்கும். என்னை 'செல்லி' னுதான் கூப்பிடுவாங்க. செல்லி என்றால் தெலுங்குல தங்கைன்னு அர்த்தம்'' - வயதின் காரணமாக வார்த்தைகள் தடுமாறித் தடுமாறி வந்தாலும், நட்பு பற்றி சொல்லும்போது, நடிகை ஜமுனா குரலில் 'அன்புத் தேன்' வடிகிறது.

சாவித்ரி

''சாவித்திரி அக்கா பற்றி என்கிட்ட எதுவுமே கேட்காமல் படம் எடுக்கிறாங்க'' எனச் சில மாதங்களுக்கு முன்னால் வருத்தப்பட்டிருந்தவரிடம், படம் வெளி வந்துவிட்ட நிலையில் பேசினோம். உடன்பிறவாத அக்கா சாவித்திரியுடனான தன் இளம்பிராயத்து நினைவுகளில் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

''விஜயவாடாவில் இருக்கும் துகிராலா கிராமம்தான் நான் பிறந்த ஊர். நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ, சாவித்திரி அக்கா எங்க கிராமத்துக்கு நாட்டியமாட வந்திருந்தாங்க. அந்த ஊரிலேயே பெரிய குடும்பம் எங்களுடையது. அன்னிக்கு அக்காவுக்கு என் வீட்லதான் விருந்து. இது நடந்த கொஞ்ச வருஷத்துல, சாவித்திரி அக்கா 'தேவதாஸ்' படத்துல நடிச்சு பெரிய ஸ்டார் ஆகிட்டாங்க. அந்த நேரத்துல 'பிறந்த வீடு'  என்கிற  தமிழ்ப் படத்தில் நான் கதாநாயகியா அறிமுகமானேன். என் பேரையும் ஊரையும் கேள்விப்பட்டதுமே சாவித்ரி அக்கா, என்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைச்சுட்டுவர கார் அனுப்பிட்டாங்க. சாவித்திரி அக்கா பாசக்காரின்னு நான் ஏன் சொன்னேன் இப்போ புரியுதா?'' எனச் சிலிர்ப்புடன் தொடர்கிறார் ஜமுனா அம்மா.

``அப்புறம் `மிஸியம்மா' படத்துல நானும் அக்காவும் முதல் தடவையா அக்கா தங்கையாக நடிச்சோம். அதுக்கப்புறம், 'கடன் வாங்கி கல்யாணம்' உள்பட ஆறு படங்களில் அக்கா, தங்கையாக நடிச்சோம். ஷூட்டிங் ஸ்பாட்லேயும் அவங்களை அக்கான்னும், அவங்க என்னை செல்லின்னும்தான் அன்போடு கூப்பிட்டுப்போம். அக்காவின் அன்பு வெறும் வாயளவு அன்பு கிடையாது. மனசிலிருந்து வரும் உண்மையான அன்பு. அதனால்தான், நான் சினிமாவை விட்டு விலகி கல்யாணமாகி செட்டில் ஆகிட்டபோதும் நட்பு தொடர்ந்துட்டிருந்துச்சு.

இவ்வளவு ஏன்... என் கல்யாணத்துல எனக்கு ஜடை அலங்காரம் பண்ணிவிட்டதே அக்காதான். நான் கர்ப்பமா இருந்தப்பவும் பார்க்க வந்திருந்தாங்க. என் பையனை தொட்டிலில் போட்ட ஃபங்ஷனுக்கும் வந்திருந்தாங்க. சாவித்திரி அக்கா எனக்கு ஜடைப் பின்னிவிடும் போட்டோ, என் பிள்ளையின் தொட்டிலை ஆட்டிவிடும் போட்டோ என என்கிட்ட நிறைய போட்டோஸ் இருந்துச்சு. ப்ச்... பத்திரிகைக்காக வாங்கிட்டுப் போனவங்க திருப்பித் தரவே இல்லைம்மா" என்கிறார் வருந்தமான குரலில். 

நடிகை

சாவித்திரியின் இறுதி நாள்கள் பற்றி பேசும்போது, ``அக்காவின் பொண்ணு சாமுண்டீஸ்வரிக்கு 10 வயசு ஆகிற வரை நாங்க தொடர்பில்தான் இருந்தோம். தன் சொந்த விஷயங்களை எல்லாம் என்கிட்ட சொல்லி அழற அளவுக்கு நெருக்கமானத் தொடர்பில்தான் இருந்தோம். அப்புறம், நான் ஹைதராபாத் போயிட்டேன். அதோடு தொடர்பு விட்டுப்போச்சு. கடைசியா, அக்கா கோமாவில் இருந்தப்போ, ஹாஸ்பிடலுக்குப் போய்ப் பார்த்தேன். 'அக்கா உன் செல்லி வந்திருக்கேன். கண்ணைத் திறந்து பாருக்கா'னு அழுதேன். அக்கா கடைசி வரை கண்ணைத் திறக்கவே இல்லை'' என்ற ஜமுனா அம்மா குரல் கண்ணீரில் கரைகிறது.

வயது காரணமாக வெளியே செல்லமுடியாமல் இருக்கும் ஜமுனா அம்மா, 'நடிகையர் திலகம்' படத்தை இன்னும் பார்க்கவில்லையாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!