''அரங்கிற்கு எம்.ஜி.ஆர் பெயர், குடியிருப்புகளுக்கு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் பெயர்கள்..." - ஆர்.கே.செல்வமணி | FEFSI to build new shooting floor residential complex

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (16/05/2018)

கடைசி தொடர்பு:15:11 (16/05/2018)

''அரங்கிற்கு எம்.ஜி.ஆர் பெயர், குடியிருப்புகளுக்கு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் பெயர்கள்..." - ஆர்.கே.செல்வமணி

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் இந்தியாவிலேயே மிகப்பெரிய படப்பிடிப்புத் தளத்தைக் கட்டியுள்ளனர்.

''அரங்கிற்கு எம்.ஜி.ஆர் பெயர், குடியிருப்புகளுக்கு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் பெயர்கள்...

தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் இந்தியாவிலேயே மிகப்பெரிய படப்பிடிப்புத் தளத்தைக் கட்டியுள்ளனர்.  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத்தளம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன அரங்கை ஜூலை மாதம் தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறார், ஆர்.கே.செல்வமணி. 

ஃபெப்சி

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ``சென்னையை அடுத்த பையனூரில் சம்மேளனத் தொழிலாளர்கள் சார்பில், இணைப்புச் சங்கங்களின் நன்கொடைகள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கொடுத்த நன்கொடைகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் திரட்டிய நிதியைக்கொண்டு, கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்ட நிலத்தில் பிரமாண்டமான படப்பிடிப்புத் தளம் ஒன்றைக் கட்டி வந்தோம். கிட்டத்தட்ட 6 ஏக்கர் நிலப்பரப்பில் 6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் படப்பிடிப்புத் தளம், இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகப்பெரிய படப்பிடிப்புத்தளமாக உருவாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி இதற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம் எனப் பெயரிட்டுள்ளோம். இதைத் திறந்து வைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். சென்னையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பையனூரில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தளம், ஜூலை மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்படும். அதற்கான பணியில் ஃபெப்சி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறோம்.

எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம்

``அதே இடத்துக்கு அருகே ஃபெப்சி தொழிலாளர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக 640 குடியிருப்புகளைக் கட்டும் பணிகளுக்கு அஸ்திவாரம் போடவிருக்கிறோம். பகுதிக்கு 80 வீடுகள் என மொத்தம் 8 பகுதிகள் அமைக்கப்படவிருக்கின்றன. முதல் இரண்டு பகுதிகளைக் கட்டுவதற்கு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவியிருக்கிறார்கள். எனவே, அந்தக் கட்டடங்களுக்கு அவர்கள் பெயரையே சூட்டவிருக்கிறோம். விஷால் ஒரு பகுதிக்கு உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். நூற்றாண்டுகளுக்கும் மேல் உங்கள் பெயர் சொல்லும் வகையில் அமையவிருக்கும் இந்தக் குடியிருப்புகளுக்கு உதவ நல்லுள்ளம் கொண்ட அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் முன்வரவேண்டும். இந்தக் குடியிருப்புகள் கட்டும் எண்ணம்  இயக்குநரும் முன்னாள் சங்க நிர்வாகியுமான வி.சி.குகநாதன் அவர்களின் கனவு. 

சென்னையில் `காலா' படத்துக்குப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தினார்கள். இதனால், ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்பெற்றார்கள். ஆனால், பல படங்களுக்கு ஹைதராபாத்தில் செட் போட்டுப் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இங்கே இத்தனை வசதிகள் இருந்தும், `விஸ்வாசம்' மாதிரியான பெரிய படங்களுக்கு வெளியூர்களில் படப்பிடிப்பு நடத்தி சென்னை மாதிரியோ, திருநெல்வேலி மாதிரியோ செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்துவதைத் தயாரிப்பாளர்கள் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை படப்பிடிப்புகளை சென்னையிலேயே நடத்தும்படி தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்." என்றார், ஆர்.கே.செல்வமணி.

fefsi

`சினிமாவில் யூனியன் வேண்டாம்' என்று இயக்குநர் பாரதிராஜா சொன்ன கருத்துக்கு, ஆர்.கே.செல்வமணியிடம் பதில் கேட்கப்பட்டது. அதற்கு, ``என்னை இந்த யூனியனுக்குள் கொண்டு வந்ததே பாரதிராஜா சார்தான். அவருக்குப் பதில் விளக்கம் கொடுப்பது அவ்வளவு சரியானதாக இருக்காது. இயக்குநர்கள் என்றைக்குமே எந்த அமைப்புகளுக்கும் எதிரியாக இருந்ததில்லை. இங்கே மூன்று மாதங்கள் வேலை செய்வதற்கு ஆட்கள் வேண்டுமென்றால், அதை யாரிடம் கேட்பீர்கள். அதற்கு ஒரு அமைப்பு வேண்டும்தான். ஒப்பந்தம் போட்டுதான் வேலைசெய்யவேண்டும் என்பது இராம.நாராயணன் சார் காலத்திலேயே கொண்டுவரப்பட்ட தீர்மானம். ஒரு படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்கான ஒப்பந்தம் போடுவதில் என்ன தவறு? இருப்பினும், பாரதிராஜா சாரின் நீண்ட நாள் கோரிக்கையான, `சம்மேளத்தின் பெயரை, தமிழ்நாடு சம்மேளனம் என மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கையை நாங்களும் விரும்புகிறோம்.  

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் அதிருப்தியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். கடந்த 30 வருடமாக இல்லாத அளவுக்குத் தயாரிப்பாளர் சங்கமும், ஃபெப்சி அமைப்பும் நட்பாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் சொல்லும் படப்பிடிப்பில் கலந்துகொள்வோம். எந்த நிர்வாகத்துக்கும் இல்லாத அதிகாரத்தை, தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குக் கொடுத்திருக்கிறோம். நான் விஷாலை ஆதரிப்பதாகப் பலரும் தனிப்பட்ட முறையில் என்மீது கோபப்படுகிறார்கள். நானும் விஷால் தலைவர் பதவிக்கு வருவதை எதிர்த்தேன். ஒரு நடிகன் தலைமைப் பதவிக்கு வரக்கூடாதென அப்போதே பாரதிராஜா சார், ராதாகிருஷ்ணன் என அனைவரையும் ஒற்றுமையாக இருக்கச் சொன்னேன். யாரும் கேட்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தை யாரும் இங்கே சம்மேளனத்திடம் அடமானம் வைக்கவில்லை. அவர்களது நட்பு மட்டுமே எங்களிடம் உள்ளது. விஷால், எஸ்.ஆர்.பிரபு போன்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தொழிலாளர்களுக்கு உதவிகளைச் செய்துள்ளனர்." என்றார்.

காவிரி பிரச்னையில் மக்களுக்கிடையே நட்பை விதைக்கும் விஷயங்களை அரசு மேற்கொள்ளவேண்டும். கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் அரசு தமிழக மக்களுடன் நட்பாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்தார், ஆர்.கே. செல்வமணி          


டிரெண்டிங் @ விகடன்