வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (22/05/2018)

கடைசி தொடர்பு:16:12 (22/05/2018)

``ஆமாங்க... என் பொண்ணு காலேஜ் படிக்கிறா; ஆனா, நான் இளமையா இருக்கக் கூடாதா?!" லஷ்மி வாசுதேவன்

``சோஷியல் மீடியாவில் என் ஒரு போட்டோவை அப்லோடு பண்ணினா, `நீங்க இளமையா இருக்கீங்க; உங்க இளமை ரகசியம் என்ன?, நீங்க ஏன் அம்மா ரோலில் நடிக்கிறீங்க?'னு நிறைய கமென்ட்ஸ் வரும். அதெல்லாம் எனக்குக் கோபத்தையே உண்டாக்கும்."

லஷ்மி வாசுதேவன்

``நடிப்பு பற்றி எந்த இலக்கும் இல்லாமல்தான் ஆக்டிங் ஃபீல்டுக்கு வந்தேன். 13 வருஷம் முடிஞ்சுடுச்சு. ஆரம்பம் முதல் இப்போ வரை பரபரப்பில்லாம, நிதானமா மனநிறைவுடன் நடிச்சுட்டிருக்கேன்" எனப் புன்னகைக்கிறார், நடிகை லஷ்மி வாசுதேவன். விஜய் டிவியின் `சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்துவருபவர். அவரிடம் உரையாடியதிலிருந்து...

``ஆக்டிங் ஃபீல்டுக்கு எப்படி வந்தீங்க?"

``பூர்வீகம், சென்னை. சின்ன வயசுல ஆக்டிங்ல ஆர்வம் இருந்ததில்லை. ஃபேஷன் டிசைனிங்லதான் ஆர்வம். காலேஜ் முடிச்சுட்டு மாடலிங் பண்ணிட்டிருந்தேன். பல மொழிகளில் விளம்பரப் படங்களில் நடிச்சேன். அதன்மூலமா சினிமா வாய்ப்பு கிடைச்சுது. சும்மா பார்க்கலாம்னு நினைச்சுதான் இந்த ஃபீல்டுக்கு வந்தேன். `அறிந்தும் அறியாமலும்' என் முதல் படம். பிரகாஷ்ராஜ் சாருக்கு ஜோடி. அடுத்தடுத்து நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால், தொடர்ந்து நடிக்கத் தயக்கம். அதனால், நிறைய வாய்ப்புகளை மிஸ் பண்ணிட்டேன். ஒருகட்டத்தில் சினிமாவைப் பத்தின தெளிவு கிடைச்சது. எனக்குப் பிடிச்ச கேரக்டர்களில் நடிக்க ஆரம்பிச்சேன். விளம்பரங்களில் நடிக்கிறதைக் குறைச்சுட்டேன்.''

``சினிமா பயணத்தில் மறக்கமுடியாத அனுபவங்கள்..."

`` `பட்டியல்', `தில்லாலங்கடி' உள்ளிட்ட 50 படங்களில் நடிச்சுருக்கேன். `555' படத்துக்காக எடையைக் கூட்டி நிறைய மெனக்கெட்டேன். ஒருகட்டத்தில் தெலுங்குப் படங்களில் நிறைய நடிக்க ஆரம்பிச்சேன். நாகார்ஜூனா, நாக சைதன்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலருடன் நடிச்சுருக்கேன். மகேஷ் பாபு படத்தில் நடிச்சிருந்தாலும் அவருடன் நடிக்க முடியலை. நடிச்சே ஆகணும் என்கிற கட்டாயத்தை எனக்குள் என்னிக்குமே வெச்சுக்கிறதில்லை. நம்பர் கவுன்டிங் நோக்கி ஓடினதுமில்லை. செலக்டிவா நடிக்கிறேன். சென்னை, ஹைதராபாத் என மாறி மாறி வசிக்கிறேன்."

source: www.facebook.com/luckylaxlaxmi/

 

``சீரியல் என்ட்ரி பற்றி..."

சன் டிவி `ஆனந்தம்' என் முதல் சீரியல். அதில், போலீஸ் இன்ஸ்பெக்டரா நடிச்சேன். மாடலிங்கில் நடிப்புக்குப் பெரிய வாய்ப்பு இருக்காது. `ஆனந்தம்' சீரியல் மூலம் பர்ஃபார்மன்ஸ் பண்றதுக்கு நிறைய வாய்ப்பு கிடைச்சுது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என இருபதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சிருக்கேன். `சரவணன் மீனாட்சி' நல்ல அடையாளம் கொடுத்துச்சு. சீரியலின் சீசன் 2-ல் கலகலப்பான அம்மாவா நடிச்சேன். இப்போ, சீசன் 3-ல் நெகட்டிவ் அம்மாவா மிரட்டுறேன். முன்பெல்லாம் சீரியல்னா, ரெகுலரா வொர்க் இருக்கும். மக்கள் மனசுல தொடர்ந்து இடம்பிடிக்க முடியும். இப்போ, டி.ஆர்.பி உள்ளிட்ட காரணங்களுக்காக, அடிக்கடி மாற்றங்கள் வருது. ரொம்ப இடைவெளிவிட்டு நடிக்கிற ஃபீல் உண்டாகுது. அந்த நிலை மாறணும்."

``ஆக்டிங் தாண்டிய உங்களின் பிரதானச் செயல்பாடுகள் பற்றி..."

``எப்போதும் ஃபேஷன் டிசைனிங்ல ஆர்வம் உண்டு. இப்போ ஒரு யூ-டியூப் சேனல் தொடங்கியிருக்கிறேன். உடல்நலம், அழகு, ஆரோக்கியம் உள்ளிட்ட பயனுள்ள பல விஷயங்களை வெளியிடறேன். பெட் அனிமல் வளர்ப்பில் அதிக ஆர்வமுண்டு. நான்கு நாய்களை வளர்க்கிறேன். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் பெரும்பாலும் இவங்களோடுதான் நேரத்தைச் செலவிடுவேன். தோட்டப் பராமரிப்பு மற்றும் சமையலிலும் அதிக கவனம் செலுத்தறேன்."

`` `இளமையா இருக்கீங்க'னு சோஷியல் மீடியாவில் உங்களுக்கு நிறைய பாராட்டுகள் வருதே..."

``சோஷியல் மீடியாவில் என் ஒரு போட்டோவை அப்லோடு பண்ணினா, `நீங்க இளமையா இருக்கீங்க; உங்க இளமை ரகசியம் என்ன?, நீங்க ஏன் அம்மா ரோலில் நடிக்கிறீங்க?'னு நிறைய கமென்ட்ஸ் வரும். அதெல்லாம் எனக்குக் கோபத்தையே உண்டாக்கும். அம்மா ரோலில் நடிச்சாலும், என் மகளாக/மகனாக நடிக்கிறவங்களுக்கும் எனக்கும் சில வயசுதான் வித்தியாசம் இருக்கும். கேரக்டர்படிதான் 50 பிளஸ்ல என் வயசு இருக்கும். நிஜத்திலும் அந்த வயதில் இருக்கணும்னு அவசியமில்லையே. என் பொண்ணு காலேஜ் படிக்கிறாள். அப்போ, என் வயசு என்ன இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. உடல்நலம், அழகில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், இளமையா இருக்கேன். அது மிக அவசியம் என நம்புறேன். வெளியிடங்களில் என் அழகு மற்றும் தோற்றம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்பாங்க. அதனால், `ஏன்தான் அம்மா ரோலில் நடிக்க ஆரம்பிச்சோமோ'னு சில நேரங்களில் வருத்தப்பட்டதுண்டு. இனி அம்மா ரோலில் நடிக்கக் கூடாதுனுகூட சில நேரங்களில் நினைப்பேன்." 


 


டிரெண்டிங் @ விகடன்