வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (05/06/2018)

கடைசி தொடர்பு:11:44 (06/06/2018)

``சாமி 2 டீசர் நான் எடிட் பண்ணலை...படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்!" - எடிட்டர் வி.டி.விஜயன் #VikatanExclusive

நாற்பது வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் எடிட்டராக இருந்து வருபவர், வி.டி.விஜயன். `சாமி 2' படத்தின் டீஸரை நெட்டிசன் கலாய்த்துகொண்டிருக்கும் சூழலில், அவரிடம் பேசினேன்.

``சாமி 2 டீசர் நான் எடிட் பண்ணலை...படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்!

யக்குநர் ஹரி படம் என்றாலே நாலு டாட்டா சுமோ கண்டிப்பா வானத்துக்குப் பறக்கும். ஹீரோ பறந்து பறந்து அடிப்பார். கேமரா சுத்தி சுத்தி ஓடும். இதெல்லாம் படத்தைப் பார்க்கிற ஆடியன்ஸ் ஃபீல் பண்ற விஷயங்கள். ஹரியுடன் தொடர்ந்து 15 படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்திருக்கும் எடிட்டர் வி.டி.விஜயன் ஃபீலிங் என்னவாக இருக்கும்? அவரிடமே பேசினேன். 

எடிட்டர் விஜயன்

``ஹரி படம்னாலே ரொம்ப வேகமா இருக்கும், இது ஆடியன்ஸ் கருத்து. அவரோட `தமிழ்' படத்துல தொடங்கி, `சாமி 2' வரை... அவர்கூட வொர்க் பண்றேன். `உங்க படங்கள் வேகமா இருக்கட்டும்'னு சொல்லி, இந்தப் பழக்கத்தைத் தொடங்கி வெச்சதே நான்தான். போகப் போக அவரோட படங்கள் ரொம்ப வேகம் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. `தமிழ்' படத்துக்குப் பிறகு ஹரி என்கிட்ட, `உங்க ஸ்டைல்ல வேகமாவே எடிட் பண்ணிக் கொடுங்க'னு கேட்க ஆரம்பிச்சுட்டார். அதனால, நானும் ஹரி படம்னாலே வேகம்தான்னு முடிவெடுத்து வொர்க் பண்ண ஆரம்பிச்சுட்டேன். படம் மட்டுமல்ல, ஷூட்டிங்ல அவர் ஆர்ட்டிஸ்ட்கிட்ட வேலை வாங்குவதிலும் ரொம்பவே ஃபாஸ்ட்தான். என்கிட்ட எப்போவும் அளவுக்கு மீறிய மரியாதை வெச்சிருக்கிறவர். நானும் ஹரியும் அண்ணன் - தம்பி மாதிரி!" 

``டீசர், டிரெய்லர் எடிட்டிங்கின்போது உங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பாரா?"

``ஹரிகிட்ட எப்பவும் முழுச் சுதந்திரத்தை எதிர்பார்க்கலாம். டீசர், டிரெய்லரை நான் எடிட் பண்ணமாட்டேன். `சாமி 2' படத்துக்கும் நான் டீசர் கட் பண்ணலை. எடிட் செய்ய கொடுக்குறதுக்கு முன்னாடி எந்தெந்த சீன் இருக்கணும்னு ஹரி ஐடியா கேட்பார். அதேமாதிரி முழுப் படத்தோட எடிட்டிங் வொர்க் பண்ணும்போது, ரஃப் கட் ஒண்ணு செஞ்சு ஹரிகிட்ட காட்டுவேன். அவர் ஓகே சொன்னா, அதுவே ஃபைனல் ஆகும். கரெக்‌ஷன்ஸ் சொன்னா, அதைக் கேட்டுக்குவேன்." 

``ஹரி படங்கள் எப்பவுமே சத்தமா இருக்கும். எடிட்டிங் செய்யும்போது அதை நீங்க எப்படி உணர்வீங்க?" 

``என் அபிப்ராயம் கேட்டா, சவுண்ட் அதிகமாதான் இருக்கும். `சவுண்டு கொஞ்சம் அதிகமா இருக்கே'னு இன்ஜினீயர்கிட்ட கூட சொல்வோம். அவர், `மக்கள் தியேட்டரில் பார்க்கும்போது சரியா இருக்கும்'னு சொல்லிடுவாங்க. மணிரத்னம், ஷங்கர் படங்களுக்கெல்லாம் வொர்க் பண்ணும்போது ஃபிலிம்லதான் எடிட்டிங் பண்ணுவோம். பிறகு தியேட்டரில் படத்தைப் போட்டு பார்ப்போம். அப்போ சவுண்ட்ஸ் எப்படியிருக்கும்னு தெரியும். ஆனா, இப்போ எல்லாமே ஒரு சின்ன டிவி பெட்டிக்குள்ள அடைஞ்சிடுது. சவுண்ட் இன்ஜினீயர்கிட்டதான் சொல்லணும். நான் என்ன செய்ய?!"

சாமி 2


``கமர்ஷியல் படங்களுடைய ரசனை மாறிக்கிட்டு இருக்கிற சூழல்ல, தொடர்ந்து ஹரியின் படங்கள்ல வேலை பார்க்கிற நீங்க, இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்குறீங்க?" 

``கமர்ஷியல் படமா இருந்தாலும், ஆடியன்ஸ் நம்புற மாதிரி படம் எடுக்கணும். அந்த நம்பிக்கை வந்திடுச்சுனா, அந்தப் படம் கண்டிப்பா ஹிட். இந்த விஷயத்தில் ஹரி கவனமாதான் இருப்பார். `சாமி 2' படத்தோட கதை விவாதத்தின்போதே `படத்தோட எடிட்டிங் கட்டிங்ல சில மாற்றங்கள் பண்ணலாம். ஏன்னா, படம் பார்க்கும்போது ஆடியன்ஸுக்குச் சில விஷயங்கள் புதுசா தெரியும்'னு ஹரிகிட்ட சொன்னேன். ஏன்னா, `சிங்கம் 3' படத்தைப் பார்த்துட்டு என் மனைவி, `படம் நல்லாயிருக்கு. ஆனா, ரொம்ப வேகமா போறதால, எந்த சீனும் மனசுல நிற்கலை'னு சொன்னாங்க. அதை இந்தப் படத்துல மாத்தியிருக்கோம்!" 

``நிறைய மலையாளப் படங்களுக்கு எடிட்டரா இருந்திருக்கீங்க. தமிழ்ப் படங்கள், மலையாளப் படங்களிலிருந்து எப்படி வேறுபடுது?"

``மலையாளப் படங்களின் திரைக்கதை பக்காவா இருக்கும். ப்ரீ புரொடக்‌ஷன் வொர்க் சரியா இருக்கும். திரைக்கதையில் சமரசம் இருக்கவே இருக்காது. ஆனா, தமிழ் சினிமாவில் அப்படி இல்லை. இயக்குநர்கள் ஹீரோகிட்ட கதை சொன்னா, ஹீரோவுக்காகக் கதையில் சில விஷயங்களை மாற்றவேண்டி இருக்கு. `படத்துல என் வசனங்கள் இப்படித்தான் இருக்கணும்'னு ஹீரோக்கள் முடிவு பண்றாங்க. கேரக்டர்களையும் முடிவு பண்றாங்க. முக்கியமா, இங்கே ஹீரோகிட்ட கதை போனதுக்குப் பிறகு, அந்தக் கதையோட தன்மையே மாறிடுது."  

எடிட்டர் விஜயன்

``ஷங்கரின் முதல் படத்திலிருந்து சில படங்களுக்கு அவருடன் வொர்க் பண்ணியிருக்கீங்க. அதுக்குப் பிறகு ரெண்டுபேரும் இணையலையே... என்ன காரணம்?"  

``ஷங்கர் உதவி இயக்குநரா வேலை பார்த்த காலத்துல இருந்தே எனக்குத் தெரியும். `ஜென்டில்மேன்' படத்தோட எடிட்டிங் ஸ்டுடியோவுல, `இதுவரைக்கும் எடிட்டிங்ல இருந்ததில்லை. முதல்முறையா உங்ககூட இருக்கேன்'னு சொன்னார். எடிட்டருக்கான முழுச் சுதந்திரத்தைக் கொடுப்பார். நம்ம வொர்க்கைப் பார்த்து, `நான் இந்தக் காட்சியை இப்படி யோசிச்சு எடுத்தேன். நீங்க இப்படிக் கொடுத்திருக்கீங்க!'னு சொல்வார். `இந்தியன்' படத்தோட க்ளைமாக்ஸ் காட்சியில் விமானத்துக்கு அடியிலே கமல் போயிட்டு வர்றமாதிரி காட்சி இருக்கும். அது ஒரிஜினலாவே கமலை ஃபிளைட்டுக்கு அடியில அனுப்பி எடுத்த சீன். `அந்நியன்' படத்துக்குப் பிறகு ரெண்டுபேரும் சேர்ந்து வொர்க் பண்ணலை. ஷங்கருக்குப் புதிய நபர்களோட வேலை பார்க்கிறது பிடிக்கும். `நண்பன்' படத்துலகூட ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்குப் பதிலா ஹாரீஸ் ஜெயராஜ் இசை இடம்பெற்றிருக்கும். அப்படித்தான் இதையும் எடுத்துக்கணும். அதிகமா செலவு செய்து படமெடுத்தாலும், தயாரிப்பாளர் செலவு செய்ததைவிட அதிகமா சம்பாதிக்கணும்னு நினைக்கிற மனிதர், ஷங்கர்."

`` `சாமி' படத்தோட விக்ரமுக்கும், `சாமி 2' படத்தோட விக்ரமுக்கும் என்ன வித்தியாசம் எதிர்பார்க்கலாம்?"

`` `சாமி' படத்தோட முதல் பாகத்தைவிட விக்ரம் ரெண்டாவது பாகத்துல இன்னும் நல்லா வொர்க் பண்ணியிருக்கார். ஆக்‌ஷன் காட்சிகள்ல அவர்கிட்ட மெச்சூரிட்டி தெரியுது. `சாமி' படத்துல இருந்த ஃபயர், இதுல இன்னும் அதிகமா இருக்கு. டீசரைக் கலாய்க்கிறாங்கனு கேள்விப்பட்டேன். ஆனா, படம் ஆடியன்ஸுக்குப் பிடிக்கும்!" 

நீங்க எப்படி பீல் பண்றீங்க