``நடிப்பு, டிராவல், பெட்ஸ், மியூசிக், கார்டன்... ஓய்வுங்கிற பேச்சுக்கே இடமில்லை!" ப்ரியா ஆனந்த்

``ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அது நடக்காதபோதுதானே வருத்தம் வரும். நான் அப்படி நினைச்சதுமில்லை; வருத்தப்பட்டதுமில்லை. என்னோட பாதை வேற; ஆர்வம் வேற. நான் எப்போதுமே படங்களோட எண்ணிக்கை, சம்பளத்துக்காக மட்டும் நடிக்கிறதில்லை."

``நடிப்பு, டிராவல், பெட்ஸ், மியூசிக், கார்டன்... ஓய்வுங்கிற பேச்சுக்கே இடமில்லை!

டிப்பு மற்றும் அழகு இரண்டிலும் தனித்துவமானவர், நடிகை ப்ரியா ஆனந்த். பல மாதங்களுக்குப் பிறகு, தற்போது தமிழில் `எல்.கே.ஜி' படத்தில் நடித்துவருகிறார். அவர் தன் தற்போதைய சினிமா பயணம் குறித்துப் பேசுகிறார்.

`` `கூட்டத்தில் ஒருவன்' படத்துக்குப் பிறகு உங்களைத் தமிழ் சினிமாவில் பார்க்க முடியலையே..."

``போன வருஷம் நான் நடிச்ச `ஃப்யூக்ரே ரிட்டர்ன்ஸ்'ங்கிற இந்திப் படம், நூறு கோடி வசூல் சாதனை செய்துச்சு. அதுக்குப் பிறகு மலையாளத்தில் `கயம்குளம் கொச்சுன்னி'ங்கிற பெரிய பட்ஜெட் படத்தில் கமிட்டானேன். இந்தப் படத்துக்காக என் கரியர்லயே அதிகபட்சமா எட்டு மாதம் கால்ஷீட் கொடுத்திருந்தேன். அந்த நேரத்தில் வேற எந்தப் படத்திலும் நடிக்கல. அந்தப் படம் விரைவில் ரிலீஸாகப்போகுது. அதனாலதான் தமிழ்ல இடைவெளி ஏற்பட்டிருக்கு. இப்போ ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்கிற `எல்.கே.ஜி' படம் மூலமா தமிழ் சினிமாவுக்கு கம்பேக் வந்திருக்கேன்."

``எட்டு மாதம் கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு அந்தப் படத்தில் உங்க கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததா?"

``ஆமாம்! மலையாள சினிமாவில் கதையைப் பொறுத்துதான் பட்ஜெட், நடிக்கும் ஆர்டிஸ்டுகளோட தேர்வு... என எல்லாமே நடக்கும். கல்யாணமானவங்க, உடலமைப்பு, நிறம் போன்ற விஷயங்களைப் பெரிசா எடுத்துக்கமாட்டாங்க. கதை, நடிப்புக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அப்படிப்பட்ட படங்களுக்கு மக்களும் பெரிய ஆதரவைக் கொடுக்கிறாங்க. அதனாலதான், மலையாள மொழிப் படங்களுக்குத் தனி மரியாதை இருக்கு. `கயம்குளம் கொச்சுன்னி' படம் கேரளாவில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வெச்சு எடுக்கப்பட்டிருக்கு. `கொச்சுன்னி'னா, திருடன்னு அர்த்தம். திருடனா, கதை நாயகன் ரோல்ல நிவின் பாலி நடிச்சிருக்கார். அவரின் ஜோடியா, ஜானகி ரோல்ல நான் நடிச்சிருக்கேன். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற இந்தப் படம், என் கரியர்லயும் முக்கியமான படமா அமையும். மலையாள சினிமாவுலயும் மிக முக்கியமான படங்கள்ல ஒன்றா இந்தப் படம் நிச்சயம் இருக்கும்." 

kochunni

`` `எல்.கே.ஜி' அரசியல் கதைக்களம் கொண்ட படம் போல தெரியுது. அதில் உங்க ரோல்?"

(சிரிப்பவர்) ``இந்தப் படம் நிச்சயம் பரபரப்பா பேசப்படும். முக்கியமான அரசியல் விஷயங்களை, காமெடி மூலம் மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கிற மாதிரி இருக்கும். அதில், எனக்கு ரொம்ப வித்தியாசமான ரோல். இது தவிர இப்போதைக்குப் படத்தைப் பத்தி மற்ற விஷயங்களைச் சொல்லக் கூடாது."

``தமிழில் முன்னணி ஹீரோக்கள்கூட ஜோடியாக முடியலையேனு உங்களுக்கு வருத்தமுண்டா?"

``ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அது நடக்காதபோதுதானே வருத்தம் வரும். நான் அப்படி நினைச்சதுமில்லை; வருத்தப்பட்டதுமில்லை. என்னோட பாதை வேற; ஆர்வம் வேற. நான் எப்போதுமே படங்களோட எண்ணிக்கை, சம்பளத்துக்காக மட்டும் நடிக்கிறதில்லை. சினிமாவை நேசிச்சுதான் இந்த ஃபீல்டுக்கு வந்தேன். எனக்குப் பல மொழிகள் தெரியும்; மொழி எனக்கு ஒரு பிரச்னையே இல்லை. எந்த மொழிப் படமா இருந்தாலும், செலக்டிவா நடிச்சாலும், அது என் மனசுக்குப் பிடிக்கணும். அதில் எனக்கு முக்கியத்துவம் இருக்கணும். படம் குவாலிட்டியா இருக்கணும். அந்த டீமும் நல்லதா அமையணும். அவ்ளோதான். அதனால ஒரு வருஷத்துக்கு ஒரு மொழியில என் ஒருசில படங்கள்தாம் ரிலீஸாகுதுனு நான் ஒருபோதும் கவலைப்பட்டதேயில்லை. நடிப்பைத் தாண்டி, எதையும் தலையில ஏத்திக்க மாட்டேன். அதனால, ரொம்ப ஹேப்பியா இருக்கேன்." 

``நீங்க சினிமாவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிடுச்சு. இதில் கத்துக்கிட்ட விஷயங்கள்..."

``நிறைய இருக்கு. நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு பாடம். ஒரு படத்தில் கமிட்டாகி, நடிச்சு, ரீலீஸ் ஆகிற வரைக்கும் ரொம்பவே த்ரிலிங்கா இருக்கும். ஒரு படத்தின் வெற்றி, தோல்விகள் ஏற்படுத்தும் தாக்கமும், நிறைய அனுபவங்களையும், பாடங்களையும் கொடுக்கும். இந்த ஃபீல்டில் இருக்கிறதே சவாலானதுதான். இதில் கத்துக்கிற விஷயங்கள், வாழ்க்கை முழுக்கவே உதவும்."

ப்ரியா ஆனந்த்

``ஷூட்டிங் இல்லாத நேரங்களில், விரும்பிச் செய்யும் விஷயங்களைப் பற்றி..."

``நான் ஒவ்வொரு காலகட்டத்துலயும் பல இடங்களில் வளர்ந்திருக்கேன். அதனால, எனக்கு நண்பர்களும் அதிகம். அவங்களோடு நிறைய டிராவல் போவேன். தோட்டப் பராமரிப்பு, பெட் அனிமல்ஸூடன் விளையாடுறது, மியூசிக் கத்துக்கிறது, பிடிச்ச விஷயங்களைச் செய்றதுனு ஆக்டிவா இயங்கிட்டுதான் இருப்பேன். அதனால ஓய்வுங்கிற பேச்சுக்கே இடமில்லை."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!