''சென்றாயன் உண்மையிலேயே அப்படித்தானா, நடிக்கிறானானு தெரியலையே!" - நவீன்

`அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியை இயக்கிக்கொண்டிருக்கிறார், `மூடர்கூடம்' நவீன். அவருடைய பேட்டி.

''சென்றாயன் உண்மையிலேயே அப்படித்தானா, நடிக்கிறானானு தெரியலையே!

`மூடர்கூடம்' படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகம் ஆனவர், நவீன். விரைவில் வெளியாகவிருக்கும் `அலாவுதீனின் அற்புத கேமரா' படத்துக்குப் பிறகு, விஜய் ஆண்டனியை வைத்து அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கிறார்.

``வழக்கமா விஜய் ஆண்டனி படங்களுக்கு டைட்டில் வித்தியாசமாதான் இருக்கும். இந்தப் படம் என்ன மாதிரியான கதை? படத்துக்கு டைட்டில் யோசிச்சு வெச்சாச்சா?"

இயக்குநர் நவீன் - விஜய் ஆன்டனி

``விஜய் ஆண்டனிகூட பண்ற படம் முழு ஆக்‌ஷன் கதை. கண்டிப்பா மசாலா இருக்காது. முதல் சீன்ல ஆரம்பிச்சு கடைசி சீன் வரைக்கும் அவருக்கு பெர்ஃபெக்ட்டான ஹீரோயிஸம் இருக்கும். ஆக்‌ஷன், த்ரில்லர், எமோஷன்னு மூணு விஷயத்தையும் படத்துல வெச்சிருக்கோம். வழக்கமான ஆக்‌ஷன் படம் மாதிரி இல்லாம, புதுசா இருக்கும். கதைப்படி முதல் பாதி கொல்கத்தாவுல நடக்கும், ரெண்டாவது பாதி ஐரோப்பாவுல நடக்கும். படத்துக்கு டைட்டில் இன்னும் முடிவு பண்ணலை. பொதுவா விஜய் ஆண்டனி நடிக்கிற படங்களுக்கு அவரே இசையமைப்பார். ஆனா, இந்தப் படத்துக்கு நடராஜன் மியூசிக் பண்ணியிருக்கார். `அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தோட ஒளிப்பதிவாளர்தான் இந்தப் படத்துக்கும் வொர்க் பண்ணியிருக்கார். `மூடர்கூடம்' படத்துக்கு முதல்ல `சொதப்பல்'னுதான் டைட்டில் வெச்சேன். தயாரிப்பாளர் தலைப்பைக் கேட்டு என் மூஞ்சியிலேயே முழிக்கலை. அப்புறம்தான் `மூடர்கூடம்'னு மாத்தினேன்!."

``விஜய் ஆண்டனிதான் உங்ககிட்ட படம் பண்ணலாம்னு கேட்டாரா, நீங்க அப்ரோச் பண்ணீங்களா?"

``ஒருநாள் காலையில போன் பண்ணி, `நாம படம் பண்ணலாம்'னு சொன்னார். சரினு நேர்ல போய் சந்திச்சேன். பொதுவா எனக்கு கதை சொல்லத் தெரியாது. என்னைப் பார்த்ததும், `உங்களுக்கு கதை சொல்லப் பிடிக்காதுனு தெரியும். ஒரு நல்ல கதையை ரெடி பண்ணுங்க, நாம படம் பண்ணலாம்'னு சொன்னார், விஜய் ஆண்டனி. ஆனா, நான் அவருக்குப் பொருத்தமான ஒரு கதையைச் சொல்லிட்டுதான் வந்தேன். அந்தக் கதை அவருக்கும் பிடிச்சிருந்தது. `கதைக்காக எதுவும் சொல்லுங்க, நான் பண்றேன்'னு தயாராகிட்டார்."

``தமிழ் சினிமாவுல மாற்றம் வரணும்னு எல்லோரும் சொல்றாங்க. உங்களுக்கு அப்படி எதுவும் தோணுதா?" 

``என்னைப் பொறுத்தவரை, தமிழ்சினிமா இப்போ ரொம்ப நல்லா இருக்கு. ஏன் மாற்றம் வரணும்? ஒரு பக்கம் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்கள் வருது, இன்னொரு பக்கம் கமர்ஷியல் படங்களும் வருது. தமிழ் சினிமாவுக்கு ஹீரோயிஸம் கண்டிப்பா தேவை. ரோட்டுல நடக்கிற பிரச்னையை என்னால போய் தட்டிக்கேட்க முடியாது. இதை என் படத்துல நான் ஒரு ஹீரோவை வெச்சுப் பண்ணலாம். அதுக்காக, எனக்கு மசாலா படங்கள் பிடிக்காதுனு சொல்லலை. `தூள்', `தில்', `கில்லி' மாதிரி பல படங்கள் எனக்குப் பிடிக்கும். பாலுமகேந்திரா படங்கள் ரொம்பப் பிடிக்கும்."  

``பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்குறீங்களா... முதல் சீசன்ல ஓவியா, இந்த சீசன்ல சென்றாயன்னு உங்க முதல் படத்துல நடிச்ச ரெண்டுபேர் இருக்காங்க..."  

அலாவுதீனின் அற்புத கேமரா

``பிக் பாஸ் முதல் சீசன் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தப்போ, எனக்கு சுவிஸ்ல ஷூட்டிங் போய்க்கிட்டு இருந்தது. அப்போ, திடீர்னு ஓவியாதான் ஹாட் டாபிக்கா இருந்தாங்க. அவங்க உள்ளே போகும்போது, `இவங்கெல்லாம் தாக்குப்பிடிக்க மாட்டாங்க'னுதான் நினைச்சேன். ஏன்னா, அவங்க கேரக்டர் அந்தமாதிரி!. அவங்க ஆளுக்குத் தகுந்த மாதிரியெல்லாம் பேசமாட்டாங்க. யாரா இருந்தாலும், `நீயெல்லாம் ஒரு ஆளா?'ங்கிற மாதிரி கேட்டு விட்ருவாங்க. சிலபேர் அவங்க பிளான் பண்ணிப் பண்றாங்கனு எல்லாம் பேசுனாங்க. அது, உண்மையில்ல. அந்தப் பொண்ணோட தன்மையே அதுதான். 

இப்போ சென்றாயன் உள்ளே போயிருக்கான். விஜய் ஆண்டனி நடிக்கிற படத்துல சென்றாயன் ஒரு முக்கியமான ரோல் பண்ணியிருக்கான். திடீர்னு ஒருநாள் பார்த்தா, பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கார்னு சொன்னாங்க. `அடப்பாவி, என்கிட்டகூட சொல்லலையே'னு நினைச்சேன். `மூடர்கூடம்' படம் பண்ணும்போதே அவன்கிட்ட, `தம்பி, நீ கேமராவுக்கு முன்னாடி மட்டுமல்ல, பின்னாடியும் நல்லா நடிக்கிற'னு சொல்லியிருக்கேன். ஒருவேளை, சென்றாயன் அங்கேயும் நடிக்கிறானா... இல்ல, அவன் இயல்பே அதுதானானு தெரியலை!" 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!