வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (27/07/2018)

கடைசி தொடர்பு:13:14 (27/07/2018)

``ரொம்ப சீக்கிரமா அம்மா ரோல்ல நடிச்சுட்டேன்னு வருதப்படுறேன்'' - `எம்.ஜி.ஆர்' சங்கீதா

`` `அண்ணா என் தெய்வம்' படம் டிராப் ஆகிருச்சு. அவர் முதலமைச்சரானதை நினைச்சு சந்தோஷப்பட்டாலும், `சில மாதம் கழிச்சு முதலமைச்சர் ஆகியிருக்கலாமே'னு மனசுல நினைச்சேன்."

தென்னிந்திய சினிமாவில் நாயகியாக, குணச்சித்திர நடிகையாகப் புகழ்பெற்றவர், `எம்.ஜி.ஆர்' சங்கீதா. தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்துவருகிறார். தன் நடிப்புப் பயணத்தைப் பகிர்கிறார்.  

``என் பூர்வீகம் ஆந்திரா. டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். `அழகா இருக்கே. ஹீரோயினாக ட்ரை பண்ணு'னு பலரும் உசுப்பேத்தினாங்க. `முத்யலா முக்கு' என்கிற தெலுங்குப் படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன். அந்தப் படம், பெரிய ஹிட். சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைச்சது. நந்தி விருதும் கிடைச்சுது. அந்தப் படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர் அண்ணா, `அண்ணா என் தெய்வம்' என்கிற படத்தில் தங்கையா நடிக்கவெச்சார். அப்போ எனக்குச் சரியா தமிழ்த் தெரியாது. அவர் பெரிய நடிகர் என்பதால், பயத்துடனே நடிச்சேன். அந்தப் பட ஷூட்டிங் நடந்துட்டிருக்கும்போதுதான் என் அரங்கேற்றம் நடந்துச்சு. எம்.ஜி.ஆர் கலந்துகிட்டு, `நடனச் சுடர்' விருது கொடுத்தார். அப்போ, அவர் முதலமைச்சர் ஆகிட்டார். அதனால், `அண்ணா என் தெய்வம்' படம் டிராப் ஆகிருச்சு. அவர் முதலமைச்சரானதை நினைச்சு சந்தோஷப்பட்டாலும், `சில மாதம் கழிச்சு முதலமைச்சர் ஆகியிருக்கலாமே'னு மனசுல நினைச்சேன். என் ஆசைப்படி நடந்திருந்தால், அந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்கும். ஆனால், `எம்.ஜி.ஆர்' சங்கீதா என்ற அடைமொழி எனக்குக் கிடைச்சது. கொஞ்ச நாளிலேயே சிவாஜி அண்ணனுக்குத் தங்கையா, `தீபம்' படத்தில் நடிச்சேன்" என்பவர், ரஜினிகாந்த் நட்பு பற்றிக் கூறுகிறார்.

சங்கீதா

`` `நிழல் நிஜமாகிறது' படத்தின் தெலுங்கு ரீமேக்ல ரஜினியின் ஜோடியாக நடிச்சேன். அப்போதிலிருந்து எங்கள் நட்பு தொடருது. பிறகு, `ஆறிலிருந்து அறுபதுவரை' உட்பட சில படங்களில் சேர்ந்து நடிச்சோம். அந்தப் படத்தில் வரும் `கண்மணியே காதல் என்பது' பாட்டுல அவர் என்னைத் தூக்கிச் சுத்தும் காட்சி பலமுறை வரும். அப்போ, நடந்த காமெடிகள் இன்னும் நினைவுல இருக்கு. அப்போ அவர் சூப்பர் ஸ்டார் ஆகலை. ஆனாலும், அப்போ பழகின மாதிரிதான் இப்போதும் பேசறார். என்கிட்ட தெலுங்கில்தான் பேசுவார். எந்த நிகழ்ச்சியில சந்திச்சாலும் பேசாமல் போக மாட்டார். சமீபத்தில், `ஹைதராபாத்ல செட்டில் ஆகிட்டாலும், தமிழ்நாட்டை மறந்துடாதீங்க'னு சொன்னார்.

ரஜினியுடன்

ஹீரோயினா இருந்தப்போ, தமிழில் நிறைய படம் பண்ண நினைச்சேன். எனவே, ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ஷிஃப்ட் ஆனேன். ஆந்திராவுக்குப் போய் தெலுங்குப் படங்களில் நடிச்சேன். ஆனால், எதிர்பார்த்த மாதிரி தமிழ்ல பிரேக் கிடைக்கலை. அதனால், நிறையவே வருத்தமுண்டு. `அண்ணா என் தெய்வம்' படம் கொஞ்சம் கதை மாற்றம் செய்யப்பட்டு, `அவசர போலீஸ் 100' என எடுக்கப்பட்டது. அதில், பாக்கியராஜ் அம்மாவா நடிச்சேன். பிறகு, `பிரியமானவள்' உட்பட பல படங்களில் அம்மாவா நடிச்சேன். ரொம்ப சீக்கிரமே அம்மா ரோலில் நடிச்சிருக்கக் கூடாதுனு இப்போ வருத்தப்படுறேன்.

சங்கீதா

எனக்குத் தனி மேனேஜர் வெச்சுக்காமல், புரமோஷன் பண்ணிக்காம விட்டுட்டேன். தென்னிந்திய மொழிகள் எல்லாத்திலும் நடிச்சிருக்கேன். என் திறமையை முழுமையா வெளிப்படுத்த ஆசைதான். அது முழுசா நடக்கலை. தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிச்சுட்டிருக்கேன். தமிழில் வாய்ப்புகள் வந்தால், சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிருவேன். தமிழில் என் முதல் மற்றும் கடைசி சீரியல், `வசந்தம்'. இப்போ சீரியல் வாய்ப்பு வந்தாலும் நிச்சயம் நடிப்பேன்" என்கிறார் 'எம்.ஜி.ஆர்' சங்கீதா.


டிரெண்டிங் @ விகடன்