`கண்ணகியை மக்கள் நினைக்க கலைஞரின் வசனங்களே காரணம்!' - நடிகை விஜயகுமாரி #MissUKarunanidhi

``கலைஞர் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்குமான உறவில் மோதல் வரவில்லை. ஆனால், பிரிவு போன்ற ஒரு நிலை ஏற்பட்டது."

`கண்ணகியை மக்கள் நினைக்க கலைஞரின் வசனங்களே காரணம்!' - நடிகை விஜயகுமாரி #MissUKarunanidhi

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவால் தமிழகமே சோகத்தில் இருக்கிறது. அரசியல்வாதி, இலக்கியவாதி, பேச்சாளர், வசனகர்த்தா எனப் பன்முகத்தன்மை கொண்டவர், கருணாநிதி. அவர் சினிமாவில் வசனம் எழுதிய பல படங்களில் நடித்தவர், நடிகை விஜயகுமாரி. நடிகைகளில் சிறப்பான தமிழ் உச்சரிப்புக்குச் சொந்தக்காரர் எனப் பாராட்டப்படும் இவர், கருணாநிதியின் நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்கிறார்.

``என்னுடைய பூர்வீகம், மேட்டுப்பாளையம். ஐந்தாம் வகுப்புக்கு வரைதான் படித்தேன். எங்கள் குடும்பத்தில் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் யாருமில்லை. ஆனாலும், இளம் வயதிலேயே எனக்கு சினிமா ஆசை வந்துவிட்டது. என் விருப்பத்தை வீட்டில் சொன்னேன்; அடம்பிடித்தேன். ஒரு கட்டத்தில் என் சினிமா ஆசைக்குக் குடும்பத்தினர் சம்மதித்தனர். 1956-ல், ஏவி.எம் நிறுவனத்திலிருந்து, `நடிகர் நடிகையர் தேர்வு' என்று ஓர் அறிவிப்பு வெளியானது. அதைப் பார்த்து சென்னை வந்தேன். 

கருணாநிதி பற்றி விஜயகுமாரி

ஏவி.எம் ஸ்டுடியோவில் டெஸ்டிங் நடந்தது. அதில், `ஓடினால் ஓடினால்' என்ற `பராசக்தி' படத்தில் வரும் கலைஞரின் வசனத்தைப் பேசிக்காட்டினேன். எல்லோரும் கைத்தட்டிப் பாராட்டினார்கள்; தேர்வு செய்யப்பட்டேன். அந்த நிறுவனத்தின், `குலதெய்வம்' படத்தின் மூலம் சினிமா பயணத்தைத் தொடங்கினேன். அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி மதுரையில் நடந்தது. அதில், அந்தப் படத்தில் பணியாற்றிய எல்லாக் கலைஞர்களுக்கும் வெள்ளிக் குத்துவிளக்குப் பரிசளித்தார், கலைஞர். அப்படிக் கலைஞர் கரங்களால் வாங்கிய அந்தப் பரிசுதான், வாழ்நாளில் நான் வாங்கிய முதல் பரிசும்கூட. தொடர்ந்து பிஸியான நடிகையாக உயர்ந்தேன்" என்பவர் கண்ணகி பாத்திரத்தில் நடித்த நினைவுகளைக் கூறுகிறார். 

`` `பூம்புகார்' படத்தில் கண்ணகி பாத்திரத்தில் நடித்தது என் வாழ்நாள் பாக்கியம். அந்தப் படத்தில் நடிக்க தேர்வாகிட்டேன். அதில், நான் பேச வேண்டிய வசனங்கள் எழுதப்பட்ட பேப்பர் பண்டலை ஒருநாள் என் வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள். `இவ்வளவு பக்கங்களா?' என அதைப் பார்த்து எனக்கு பயம் வந்துவிட்டது. அதைவிட, `எப்படி அசாத்தியமாக வசனம் எழுதுகிறார்?' என்று கலைஞரின் மீது மதிப்பு வந்தது. பிறகு என்னை தைரியப்படுத்திக்கொண்டு நடிக்கச் சென்றேன். அப்போது ஒருமுறை ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்குக் கலைஞரும், முரசொலி மாறனும் வந்திருந்தார்கள். கலைஞர் முன்னிலையில், அவர் எழுதிய வசனத்தைப் பேசி நடிக்க எனக்கு பயமாக இருந்தது. அதை, இயக்குநர் பி.நீலகண்டனிடம் சொன்னேன். அதை அவர் கலைஞரிடம் சொல்லிவிட்டார். `நான் கிளம்பிடட்டுமா?' எனக் கலைஞர் என்னிடம் கேட்டார். `அதெல்லாம் வேண்டாம்' என வாய் வார்த்தையாகச் சொல்லிவிட்டு, என் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவர் முன்னிலையில் நடித்துக்காட்டினேன். அவர் என்னைப் பாராட்டிவிட்டுச் சென்றார். 

விஜயகுமாரி

அப்போது ஆன் தி ஸ்பார்ட்டிலேயே பேசுவதுதான்; தனியாக டப்பிங் பணிகள் இருக்காது. அதனால், வசனங்களை உரக்க கத்திப் பேச வேண்டும். பெரிதாக இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளை படமாக்குவார்கள். வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, முந்தைய ஷாட்டில் பேசிய வசனத்தின் பிற்பகுதியைப் பேசி, அதனுடனேயே அடுத்துப் பேச வேண்டிய புதிய வசனத்தையும் சேர்த்துப் பேசுவது என் வழக்கம். அதனால் மிகவும் சிரமப்பட்டு அந்தப் படத்தில் வசனங்களைப் பேசி நடித்தேன். அதனால் ஒருமுறை என் தொண்டையில் ரத்தம் வந்துவிட்டது. அதையும் பொருட்படுத்தாமல் அந்தப் படத்தில் நடித்தேன். `நாங்கள் கண்ணகியை நேரில் பார்த்ததில்லை. நீங்கள்தான் நிஜ கண்ணகி என நினைத்துக்கொண்டிருக்கிறோம்' என மக்கள் பாராட்டியதுதான் அந்தப் படத்தினால் எனக்குக் கிடைத்த பெரிய புகழ். கண்ணகியை மக்கள் நினைக்க முக்கியக் காரணம் கலைஞரின் வசனங்களே.

விஜயகுமாரி

`பூமாலை', `காஞ்சித் தலைவன்', `அவன் பித்தனா?', `பிள்ளையோ பிள்ளை' உட்பட கலைஞர் வசனம் எழுதிய பல படங்களில் நடித்திருக்கிறேன். ஒருமுறை கலைஞர் எனக்கு போன் செய்தார். `மு.க.முத்துவை (கருணாநிதியின் மகன்) வைத்து `பிள்ளையோ பிள்ளை'னு ஒரு படம் எடுக்கிறோம். அதில் அவனுக்கு அம்மாவாக நீ நடிக்கணும்' என்று கேட்டார். `இப்போ நான் ஹீரோயின். அம்மாவா நடித்தால், தொடர்ந்து அத்தகைய கேரக்டர்கள்தானே வரும். அதனால் நான் நடிக்கவில்லை' என்றேன். சில நாள்களில், அமிர்தம் (கருணாநிதியின் அக்கா மகன்) என் வீட்டுக்கு வந்திருந்தார். `முத்து சினிமாவுல நல்லா வரணும்னு எல்லோரும் விருப்பப்படுறோம். நீங்க நடிச்சாதான் ரொம்பப் பொருத்தமா இருக்கும்னு மாமாவும் ஆசைப்படறார்'னு வலியுறுத்திச் சொன்னார். நானும் ஒப்புக்கொண்டேன். ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் தருணம். தவறாது அடிக்கடி காலை ஆறு மணிக்கு தயாளு அம்மாள் எனக்கு போன் செய்வார். `முத்துவை நல்லா பார்த்துக்கோங்க' என்பார். அந்தப் படத்தில் நான் நடித்ததுக்காக, கலைஞரும் தயாளு அம்மாளும் என் மீது பெரிய மதிப்புடன் நடந்துகொண்டார்கள்" என்கிறார் விஜயகுமாரி.

``கலைஞர், பிறர் மனது புண்படக் கூடாது என்பதில் மிக கவனமுடன் இருப்பார். மீறி சில நேரங்களில் பிறரிடம் கோபமாகப் பேசிவிட்டாலும், பிறகு மிகவும் வருத்தப்படுவார். அவர் வீட்டிலும், நாட்டிலும் சிறந்த தலைவராக விளங்கினார். அவரைப் போல ஒரு மனிதர் கிடைப்பது மிகவும் அபூர்வம். அவரை வசனகர்த்தாவாக, திமுக தலைவராக, முதலமைச்சராக எனப் பல பரிமாணங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால், என் கணவர் மற்றும் என்னிடம் அவர் எப்போதும் மாறா பாசத்துடன் பழகுவார். அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமும் தலைக்கனம் இல்லாதவர்கள். கலைஞர் குடும்பத்தில் ஓர் உறுப்பினர்போல இருந்தேன். நான் எப்போது அவர்கள் வீட்டுக்குப் போனாலும், திரும்பி வரும்போது கார் வரை வந்து தயாளு அம்மாள், என்னை வழியனுப்பி வைப்பார். என் மேல் இருவருக்கும் அவ்வளவு அன்பு. `உன்னைவிட எந்த நடிகை அழகா தமிழ்ப் பேசுவாங்க?' எனக் கலைஞரும், தயாளு அம்மாளும் அடிக்கடி என்னைப் பாராட்டுவாங்க. 

கருணாநிதி

பத்து வருடத்துக்கு முன்பு. அப்போது கலைஞர் முதலமைச்சர். அவரைப் பாராட்டி ஒரு கவிதை எழுதி, அதை அவரைச் சந்தித்துக் கொடுத்தேன். 'ஓ... எனக்கே கவிதை எழுதியிருக்கியா?' எனச் சொல்லி சிரித்துக்கொண்டே கவிதையைப் படித்தார். `தமிழ்... தமிழ்... தமிழ்' என மூன்று வார்த்தைகளை மட்டும் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. `என்ன சொல்றீங்க?'னு அவரைப் பார்த்துக் கேட்டேன். `இவ்வளவு அழகா எழுதினால், வேற என்ன சொல்ல முடியும்!'னு சொன்னார். மேலும், `உனக்கு என்ன பரிசு வேணும்?'னு கேட்டார். `கண்ணகி வேஷம் கொடுத்தீங்களே. அந்தப் பரிசே எனக்குப் போதும். இதை விட வேற என்ன வேணும்!' எனச் சொன்னேன். 

என் கணவரான லட்சிய நடிகரும் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) கலைஞரும் எம்.ஜி.ஆர் அண்ணனும் சிவாஜி கணேசன் அண்ணனும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தார் போலத்தான் இருந்தோம். ஒருகட்டத்தில் அவர்களுக்குள் அரசியல் ரீதியான பிரிவுகள் ஏற்பட்டன. அதனால், கலைஞர் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்குமான உறவில் மோதல் வரவில்லை. ஆனால், பிரிவு போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. அது ஏன், எதனால் நடந்தது என அடிக்கடி சிந்திப்பேன். அப்படி நடக்காமல் முன்பு போல ஒற்றுமையாக இருந்திருக்கலாமே என ஆதங்கப்படுவேன்" என்று கண்கலங்கும் விஜயகுமாரி...

``ஈழத் தமிழர்களுக்கான நிதி திரட்டலில், கலைஞரிடம் 1 லட்சம் ரூபாய் கொடுத்தேன். பிறகு கோவையில் நடந்த கண்ணகி விழாவில், வெள்ளியில் சிலம்பு செய்து கலைஞரிடம் கொடுத்தேன். பிறகு அவரைச் சந்திக்கவில்லை. அவர் வீல் சேரில் இருக்கும் காட்சிகளை பல முறை டிவியில் பார்த்து வருந்தியிருக்கிறேன். அவர் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். ஆனாலும், அவர் முதலமைச்சராக இருக்கும்போது இறந்திருந்தால், மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன். கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கேள்விப்பட்டு, சில நாள்களாக எனக்குப் பெரிய வருத்தம். இப்போது அவர் மறைவுச் செய்தியைக் கேட்டு, சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறேன். அவர் மூச்சு, பேச்சு எல்லாவற்றிலும் தமிழ்தான் இருந்தது. அவர் மறைந்தாலும், அவரின் தமிழுக்கும், கொள்கைகளுக்கும், செய்த சாதனைகளுக்கும் அழிவே கிடையாது" என உருக்கமாகக் கூறுகிறார் விஜயகுமாரி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!