``அவர்கிட்ட மரணம் நெருங்காதுன்னு நம்பினேன்'' - கருணாநிதி பற்றி நடிகை ஸ்ரீப்ரியா! | Actress Sripriya talks about her experiences with Karunanidhi

வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (17/08/2018)

கடைசி தொடர்பு:12:15 (17/08/2018)

``அவர்கிட்ட மரணம் நெருங்காதுன்னு நம்பினேன்'' - கருணாநிதி பற்றி நடிகை ஸ்ரீப்ரியா!

``அவரை காவேரியில் அட்மிட் செய்த பிறகுகூட, சரியாகி வந்துவிடுவார், 100 வயதை தொடுவார் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.''

சிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதுபோல, 'தமிழ் வசனங்களைச் சரியாக உச்சரிக்கிறவர்' என்ற பாராட்டை, கருணாநிதியிடம் பெற்றவர் நடிகை ஸ்ரீப்ரியா. அவரைப் பற்றிய தன் நினைவுகளை நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

``சன் டிவியின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில்தான், கலைஞர் என்னுடைய தமிழ் உச்சரிப்பைப் பாராட்டினார். இன்னமும் அந்த நாள் எனக்குப் பசுமையாக நினைவிருக்கு. 'உங்களுடைய வசனங்களைச் சரியாக உச்சரித்துப் பேசக்கூடிய நடிகைகள் யார் யார்' என்று பேட்டி கண்டவரின் கேள்விக்குப் பதிலாகத்தான், கலைஞர் என் பெயர் உட்பட சில நடிகைகளைக் குறிப்பிட்டிருந்தார். கண்ணாம்பாள் அம்மா, விஜயகுமாரி அம்மா, மனோரமா அம்மா போன்றவர்களுடன் என் பெயரையும் குறிப்பிட்டது எத்தனை பெருமையான விஷயம்? 'பாசப் பறவைகள்' படத்தில் ராதிகாவின் தமிழ் உச்சரிப்பையும் பாராட்டியிருக்கிறார். கலைருடைய வசனங்களை எதுகை, மோனை தவறிப் போகாமல் பேச வேண்டும். ஒரு வார்த்தையை மாற்றினாலும் பொருள் மாறிவிடும். நான் அவருடைய வசனங்களை 'மாடி வீட்டு ஏழை', 'குலக்கொழுந்து' ஆகிய படங்களில் பேசி நடித்திருக்கிறேன்.

பள்ளி நாள்களில் நான் படித்தது ஆங்கில வழியில். இரண்டாம் மொழிகூட சமஸ்கிருதம்தான். அதனால், தமிழில் எழுதப் படிக்கவே தெரியாது. ஆனால், வீட்டில் தமிழில்தான் பேசுவோம் என்பதால், தமிழ் எனக்கு அந்நிய மொழி கிடையாது. நடிக்க வந்த புதிதில், தமிழ் வசனங்களை யாராவது சொல்லிக்கொடுத்தால், அதை அப்படியே திருப்பிச் சொல்லிவிடுவேன். எவ்வளவு பெரிய வசனம் என்றாலும் சரியாகச் சொல்லி விடுவேன்'' என்கிறார் ஸ்ரீப்ரியா.

கருணாநிதி முன்னிலையில், நிகழ்ச்சி ஒன்றைத் தமிழில் தொகுத்து வழங்கிய சம்பவம் குறித்தும் நினைவுகூர்ந்தார்.

''அது திரைப்பட நிகழ்ச்சி. வருடம், நிகழ்ச்சியின் பெயர் நினைவில் இல்லை. ஆனால், கலைஞர் அதில் கலந்துகொண்டது மட்டும் பசுமரத்தாணியாக நெஞ்சில் பதிந்துள்ளது. அன்றைக்கு அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டியவர், தவிர்க்க முடியாத காரணத்தால் வரவில்லை. சரியாகத் தமிழை உச்சரிப்பவர்தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டும் என்று கலைஞர் சொல்லிவிட்டதால், என்னை அழைத்தார்கள். தமிழ் என்றாலே என் கண் முன்னால் வருபவர் முன்னிலையிலே 3 மணி நேரம், ஒரு தமிழ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது மிக உயர்ந்த விஷயம்'' என நெகிழ்கிறார். 

கலைஞர் குடும்பத்துடன் தனக்கு இருந்த நெருக்கம் பற்றி குறிப்பிடுகையில், ''கலைஞர் வீட்டுக்கு சினிமாத் துறையிலிருந்து யார் போனாலும், அவர்களைத் தன் வீட்டு மனிதர்கள்போலவே நடத்துவார். எங்களுடைய சொந்தப் பிரச்னைகளிலும் தலையிட்டுச் சரிசெய்திருக்கிறார். அவருடைய குடும்பத்திலும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களை அன்பாக நடத்துவார்கள். அப்பாயின்மென்ட் வாங்காமல் போய் நிற்கும்போதும், நேரம் ஒதுக்கிப் பேசக்கூடியவர் தலைவர். மு.க.தமிழரசுவை அண்ணன் என்றுதான் அழைப்பேன்.

ஶ்ரீபிரியா

கலைஞரை, கடைசியாக மருத்துவமனையில் சேர்ப்பதற்கு இரண்டு நாள் முன்பு அவரைப் பார்க்க வீட்டுக்குப் போயிருந்தேன். அவருக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க, தனியே அறையில் இருந்ததால், பார்க்க முடியவில்லை. அவர் குடும்பத்துடன் பேசிவிட்டு வந்தேன். காவேரி மருத்துவமனையில் இருந்தபோதும், சரியாகி வந்துவிடுவார், 100 வயதைத் தொடுவார் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவரிடம் மரணம் நெருங்காது என்று நம்பினேன். சொன்னால் நம்புவீர்களா? எம்.ஜி.ஆரைகூட மரணம் நெருங்காது என்றுதான் அப்போது நினைத்திருந்தேன்'' என்றவரின் குரலில் அழுத்தமான சோகம் தொனிக்கிறது. 

 


டிரெண்டிங் @ விகடன்