"நான் இருக்கும்போது எப்படி அறிமுக ஹீரோயினுக்கு வாய்ப்பு அளிக்கலாம்?!" - சமந்தா

நடிகை சமந்தா பேட்டி

திருமணமாகியும் சினிமாவில் சற்றும் அயராது நடித்துக்கொண்டிருக்கிறார், சமந்தா. `ஆந்திர மருமகள்', `தமிழ்நாட்டின் டார்லிங்' என்று பலவாறாகக் கூறப்படும் இவரை எப்போது பேட்டி கண்டாலும் பேசுவதற்கு ஸ்பெஷலான விஷயங்கள் நிறையவே இருக்கும். அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார், சமந்தா.

சமந்தா

``ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிச்ச `யு-டர்ன்' கன்னடப் படத்தைப் பார்த்துட்டீங்களா?"

``இந்த இயக்குநரோட முதல் படம் `லூசியா'. இப்படம் இவருக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது வாங்கிக் கொடுத்துச்சு. `யு-டர்ன்' படத்தோட டிரெய்லரைப் பார்க்கும்போது, `அது எப்படி என்கிட்ட சொல்லாம பவன் இப்படி ஒரு படத்தை எடுக்கலாம்?'னு யோசிச்சேன். படம் பார்த்தப்போ, `இந்த மாதிரி ஒரு கதையை ஏன் பவன் என்கிட்ட கொடுக்கலை'னு கோபத்துல இருந்தேன். கதை ரொம்பப் பிடிச்சிருந்ததுனால கன்னட `யு-டர்ன்' படத்தை புரமோட் பண்றதுக்காக பெங்களூரு போயிருந்தேன். அங்கேதான் பவன் என்கிட்ட `யு-டர்ன்' படத்தோட தமிழ், தெலுங்கு ரீமேக்ல நீங்க நடிக்கணும்னு சொன்னார்."

``கன்னடப் படத்துல இருந்து தமிழ் `யு-டர்ன்' எவ்வளவு வித்தியாசப்பட்டது?"

``இந்தப் படத்தை வெறும் த்ரில்லர்னு மட்டும் சொல்லிட முடியாது. இதுல பல்வேறு வகையான எமோஷன்களும் அடங்கியிருக்கு. நியூஸ் ரிப்போர்ட்டரா இருக்கிற பொண்ணுக்கு எப்படியான எமோஷன்ஸ் இருக்கும்னு இதுல தெளிவாக் காட்டியிருப்போம். பூமிகாவும் ஆதியும் ரொம்ப நாளைக்கு அப்புறம் இதுல நடிச்சிருக்காங்க. படத்தோட முதல் பாதியைவிட இரண்டாம் பாதி ரொம்ப வேகமாப் போயிடும். அந்த அளவுக்குத் திரைக்கதை பரபரனு இருக்கும்.  

சமந்தா

நிகேத் பொம்மி ரெட்டி படத்தோட ஒளிப்பதிவாளர். இவர் கேமராவை கையிலேயே வெச்சுதான் படம் எடுத்திருக்கார். இந்தக் கதைக்குக் கையிலே வெச்சுதான் கேமராவை இயக்கணும்னு இயக்குநர் சொல்லிட்டார். இந்த எஃபெக்ட்டைத் திரையில பார்க்கும்போது ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்னு நினைக்கிறேன்."

``இதுல உங்க ரோல் என்ன?"

``ரிப்போர்ட்டரா நடிச்சிருக்கேன். ரிப்போர்ட்டர்னாலே டாம் பாய் லுக்ல இருப்பாங்கனு பரவலா ஒரு கருத்து இருக்கு. அதனாலதான் இந்தப் படத்துல முடிவெட்டி என்னோட லுக் அண்டு ஸ்டைலை முழுசா மாத்திருக்கேன். ரொம்ப தைரியமா, பரபரப்பா படம் முழுக்க ஓடிக்கிட்டே இருப்பேன். சுருக்கமாச் சொல்லணும்னா பையன் மாதிரி இருக்கிற பொண்ணு கதாபாத்திரம். 

மற்ற மொழி இயக்குநர்களை தமிழுக்குக் கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம். அப்படி இருக்கும்போது பவன் இந்தப் படத்தை தமிழ்ல எடுக்க சட்டுனு ஒப்புக்கிட்டார். பவன் அவரோட படங்களை அவரே தயாரிப்பார், கதை எழுதுவார், நிறைய விஷயங்கள் அவர் கைப்படவே பண்ணணும்னு நினைப்பார். அதுதான் அவரோட பலம். பலபேர் அவரோட படங்கள்ல வேலை பார்க்கிறது அவருக்குப் பிடிக்காது. இந்தப் படம் கன்னடப் படத்தைவிட பெட்டரா இருக்கும். இது ரிலீசாகுற அன்னைக்கு சைதன்யாவோட தெலுங்குப் படமான `சைலஜா ரெட்டி அல்லுடு' படமும் ரிலீசாகுது. டபுள் ஹாப்பி!"

`` `சீமராஜா'வுல சுதந்திர தேவி எப்படி இருப்பாங்க?"

``இந்தப் படத்துக்காக சிலம்பம் கத்துக்கிட்டேன். முதல் ரெண்டுநாள் தலையில பயங்கரமா அடிபட்டுச்சு. அவ்வளவு கஷ்டமான ஒரு கலையை நம்ம ஊர் மக்கள் அசால்ட்டா பண்ணிக்கிட்டு இருக்காங்கனு ஆச்சர்யமா இருந்தது. நம்ம ஊர் கலைகளுக்கான மரியாதையை நாம கொடுத்தே ஆகணும். அவங்களோட திறமையை அங்கீகரிக்கணும்னு ஆசைப்படுறேன். முதல்ல இது ஒரு கமர்ஷியல் படம், ஹீரோயினுக்குப் பெருசா எந்த ஒரு ரோலும் இருக்காதுனு நினைச்சேன். ஆனா, நான் நினைச்சதுக்கு நேரெதிரா இருந்தது. மதுரை கிராமத்துப் பொண்ணுதான், இந்தச் சுதந்திரதேவி." 

``சிவகார்த்திகேயனோட சேர்ந்து நடிச்ச அனுபவம்?"

``சிவகார்த்திகேயன், சூரி ரெண்டுபேரும் செட்ல எதையாவது சொல்லி சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்களை பார்க்கும்போது காமெடி சேனல்தான் ஞாபகத்துக்கு வரும். வீட்ல இவங்களை எப்படித்தான் வெச்சுக்கிட்டு இருக்காங்களோனு நினைச்சு சிரிப்பேன். சிவகார்த்திகேயனோட ரியாலிட்டி ஷோக்களை நான் பார்த்தது கிடையாது. அந்த காமெடி நிகழ்ச்சிகள்ல எந்த வேலை பண்ணிக்கிட்டு இருப்பாரோ, அதே வேலையைத்தான் செட்டுல பார்த்துட்டு இருப்பார். அதாவது, சரமாரியா காமெடி சொல்லி சிரிக்க வைப்பார். சிவகார்த்திகேயன் ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர்!"  

``ஸ்டன்ட் காட்சிகளெல்லாம் பண்ணிடலாம்னு எப்படித் தோணுச்சு?"  

``ஹாலிவுட் நடிகை ஆட்ரே ஹெப்பர்னோட படங்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். `ரோமன் ஹாலிடே', `ஃபன்னி ஃபேஸ்', `லவ் இன் தி ஆஃப்டர்நூன்' படங்களையெல்லாம் பலமுறை பார்த்திருக்கேன். இவங்களைப் பார்த்துதான் நடிக்கிற ஆசையே வந்தது. இவங்க சண்டைக்  காட்சிகளுக்கு டூப் போடுற விஷயங்களைப் பண்ணவே மாட்டாங்கனு ஒரு பேட்டியில படிச்சிருக்கேன். அவங்களை நான் அப்படியே ஃபாலோ பண்றதுனால, சண்டைப் பயிற்சிகளையெல்லாம் திறம்படக் கத்துக்கிட்டு தொடர்ந்து நடிக்கணும்னு நினைக்கிறேன்." 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!