வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (19/09/2018)

கடைசி தொடர்பு:18:51 (19/09/2018)

``8 லட்சம் பேரைத் திரட்டிய அந்த 18 பேர்..!’’ - `மெரினா புரட்சி’ ராஜ்

கடந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் உலகளவில் பேசப்பட்டது. அதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் `மெரினா புரட்சி' படத்தின் இயக்குநர் ராஜ், அப்படம் குறித்துப் பேசியிருக்கிறார்.

``8 லட்சம் பேரைத் திரட்டிய அந்த 18 பேர்..!’’ - `மெரினா புரட்சி’ ராஜ்

2017- ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும், அதற்கு உலகமே கண்டு பிரமித்த மக்கள் எழுச்சியையும் மையமாக வைத்து `மெரினா புரட்சி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார், இயக்குநர் ராஜ். அவரிடம் பேசினோம். 

``ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் படமாக மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கணும்னு எப்போ தோணுச்சு?"

``இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தமிழ்நாட்டுல நடந்த மாபெரும் போராட்டம், கடந்த வருடம் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம். இந்த அளவு மக்கள் எழுச்சி எப்படி நடந்தது, உண்மையா இது தலைவன் இல்லாத கூட்டமா... அதைக் கண்டுபிடிக்கணும்னு எனக்குள்ள ஒரு ஆசை. தவிர, இந்த வரலாற்று நிகழ்வைப் பதிவு பண்ணணும்னும் தோணுச்சு. 8 மாத தேடல்களுக்குப் பிறகு இந்தப் போராட்டத்துக்கான பொறி எங்கிருந்து தொடங்கியதுனு கண்டுபிடிச்சேன். நான் கண்டுபிடிச்ச உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தணும்னு நினைச்சேன். அதுதான், இந்தப் படம்." 

மெரினா புரட்சி

``கண்டுபிடிச்ச பொறினு நீங்க சொல்றது, எல்லோருக்குள்ளும் இருக்கிற உணர்வுதானே... அதைத் தவிர வேறென்ன?" 

``2017 ஜனவரி 8- ம் தேதி எந்த ஒரு அரசியல் பின்னணியும், நடிகர்களின் ஆதரவும் இல்லாமல் மெரினாவுல இருபதாயிரம் பேர் கூடினாங்க. ஆனா, அதுக்குப் பின்னாடி சிலர் இருந்தாங்க. இந்தப் போராட்டம் வலுப்பெற்று உலகம் முழுக்க இருக்கிற தமிழர்கள் மத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. நீங்க சொல்ற மாதிரி எல்லோருக்குள்ளேயும் இருக்கிற தமிழ் உணர்வுதான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம். ஆனா, அந்த உணர்வை ஒண்ணு சேர்க்கிறது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்காக 8 லட்சம் பேரைத் திரட்டிய 18 நபர்களை நாங்க அடையாளம் காட்டியிருக்கோம். இந்தப் படத்தோட ஸ்பெஷல், அதுதான்." 

``உலகம் முழுக்க தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்தினாங்க. அதுல இவங்களை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"

``உண்மையிலேயே இவங்களைக் கண்டுபிடிக்க ரொம்ப சிரமமாதான் இருந்தது. அப்படிக் கண்டுபிடிச்சு, நாங்க படமெடுக்கிற விஷயத்தை அவங்ககிட்ட சொன்னா... அவங்க தங்களை அடையாளப்படுத்திக்கவே விரும்பல. இருந்தும் ஏன் அவங்களை அடையாளம் காட்டியிருக்கோம்னா, `மெரினா போராட்டத்துக்கு நாங்கதான் காரணம்'னு வேறு சிலர் சொல்லிக்கிட்டு இருக்காங்க. தவிர, நான் கண்டுபிடிச்ச அந்த 18 பேரும் தனித் தனி ஆள்கள்தான். போரட்டத்துக்குப் பிறகுதான், அவங்களுக்குள்ள பழக்கம் ஏற்பட்டுச்சு. அந்த 18 பேரில் சிலர் தமிழ்நாட்லயே இல்ல. 36 நாடுகள்ல நடந்த போராட்டம் இது. அதனால, கண்டுபிடிக்க சிரமமா இருந்தது." 

``சரி... இந்தப் படம் மூலம் நீங்க உணர்த்த விரும்புற விஷயம் இதுமட்டும்தானா?"

``அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டப்போ, ஒசாமா பின்லேடன்தான் அதைப் பண்ணதாச் சொன்னங்க. ஆனா, அந்தத் தாக்குதலுக்குக் காரணம் யார்னு, மைக்கேல் மூர் என்பவர், `பாரன்ஹீட் 9/11' (Fahrenheit 9/11) என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தார். இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பின்னணியில் யாரெல்லாம் இருந்தாங்க, அதுக்குப் பின்னாடி இருந்த அரசியல் சூழ்ச்சி... எல்லாம் அந்த ஆவணப்படத்தில் இருந்தது. அமெரிக்கர்களும் அந்தப் படத்தைக் கொண்டாடினாங்க. `மெரினா புரட்சி' அப்படி ஒரு விஷயத்தைச் சொல்லும். தவிர, போராட்டத்தில் என்னென்ன நடந்ததுனு மட்டுமல்ல, சில பிரபலங்கள் கடைசி நேரத்துல காணாமப் போனதுக்கான காரணத்தையும், அரசியல் தலைவர்கள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுக்கான காரணத்தையும் படத்துல சொல்லியிருக்கோம்."  

மெரினா புரட்சி

``டெக்னிக்கல் டீம் பற்றி..." 

``வேல்ராஜ் சார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். அவர்கிட்ட இந்தக் கதையைச் சொன்னதும், `கண்டிப்பா இதைப் பதிவு பண்ணணும்'னு சொல்லி, சம்பளமே வாங்காம வொர்க் பண்ணிக் கொடுத்தார். சவுண்ட் இன்ஜினீயர் தபஸ் நாயக்கும் சம்பளமே வாங்கலை. இசையமைப்பாளர் அல்ரூஃபியான், எடிட்டர் தீபக் ரெண்டுபேரும் ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்தில் இருந்தவங்க. தவிர, போராட்டத்துல கலந்துக்கிட்டவங்களைத்தான் முக்கிய கேரக்டரில் நடிக்க வெச்சிருக்கோம்."

மெரினா புரட்சி

``ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு, மெரினாவுல அடிக்கடி 144 தடை உத்தரவு பிறப்பிக்கிறாங்களே?"

``ஜல்லிக்கட்டுப் போராட்டம் கிட்டத்தட்ட 192 மணி நேரம் நடந்த பெரும் போராட்டம். அப்படி ஒரு எழுச்சி மறுபடியும் நடக்கக்கூடாதுனு இப்படிப் பண்றாங்க. அடிக்கடி இப்படித் தடை உத்தரவு போடுறது, மெரினாவுக்கே கோபமாதான் இருக்கும்னு நினைக்கிறேன். தடை போட்டாலே, அது மக்களுக்கான களம்தான். இப்போ இருக்கிற இளைஞர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அந்தக் காலத்துல மேடைப் பேச்சுகளிலும், சினிமா கவர்ச்சியிலும் மயங்கிக் கிடந்தோம். இப்போ யாரும் அப்படி இல்லை. எல்லோரும் எல்லா விஷயங்களையும் கவனிக்கிறாங்க. அதனாலதான், `மெரினா புரட்சி'க்கு நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, விருதும் வாங்கியிருக்கு. அங்கே இருக்கிற தமிழர்கள் மத்தியில், இந்தப் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். மெரினா புரட்சியை மறுபடியும் பார்க்க ஒரு ரீவைண்டு பட்டன் மாதிரி இருக்கும், இந்தப் படம்."

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்