வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (21/09/2018)

கடைசி தொடர்பு:14:06 (21/09/2018)

``இது சிவகார்த்திகேயனுக்காக வந்த கோபமில்லை..!’’ - ஆர்.ஜே.ராஜவேல்

`ஆன்லைன் ரிவ்யூக்களும், சீமராஜா ஓப்பனிங்கும்...' என்ற வீடியோ மூலம் ஆன்லைன் விமர்சகர்களால் ஒரு படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் பாதிக்கப்படுகிறது என ஆர்.ஜே. ராஜவேல் அவரது ஃபேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அது குறித்து விரிவாகப் பேச அவரை தொடர்பு கொண்டேன்.

``இது ரொம்ப நாளா எனக்கு இருந்த கோபம்தான். ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அதை ஆன்லைனில் ரிவ்யூ பண்றவங்க பேசுறதைப் பார்க்கும் போதெல்லாம் என் கோபத்தை வெளிப்படுத்தணும்னு தோணும். ஆனால், அதைப் பண்ணாமலே இருந்தேன். இந்த டைம் அது `சீமராஜா’ படம் மூலமா வெளிவந்திருக்கு. இது சிவகார்த்திகேயனுக்காகவோ இல்லை `சீமராஜா’ படத்துக்காகவோ பண்ணணும்னு பண்ணலை; இப்படிப் பண்ணுனா அது மூலமா எனக்கு ஆதாயம் கிடைக்கும்னு பண்ணலை. இந்த ஆன்லைன் விமர்சனங்கள் இப்போ எந்த லெவல்ல இருக்குனு சொல்ல நினைச்சேன்.

ஆர் ஜே ராஜவேல்

நான் இந்த வீடியோ போடுறதுக்கு முன்னாடியே friday facts ஷோவைப் பற்றி ஒரு பதிவு போட்டேன். friday facts சேனல் ஒரு தயாரிப்பாளரோட ஃபண்டிங்ல நடக்குறதா சொல்றாங்க. அந்தத் தயாரிப்பாளரோட ஃப்ரெண்ட்ஸ் எடுத்த படமா இருந்தா அதுக்கு நல்ல ரிப்போர்ட் கொடுக்குறது; பிடிக்காத தயாரிப்பாளரா இருந்தா அந்தப் படத்தை காலி பண்றதுனு பண்ணிட்டு இருக்காங்க. இதைப் பற்றி நான் பதிவு போட்டதும் என்னையும் அவங்க ஷோவுல கலாய்ச்சாங்க. இந்த யூ-டியூப் சேனல் மாதிரி இன்னும் சில சேனல்கள் சில தயாரிப்பாளர்களோட ஃபண்டிங்ல நடந்துட்டு இருக்கு.

முன்னாடியெல்லாம் யூடியூப் சேனல்கள் காமன் மேன் கையில இருந்துச்சு; அதுதான் அவங்களோட பலமே. ஆனால், இன்னைக்கு அந்த சேனல்கள் தயாரிப்பாளர்கள் கைக்கு மாறிட்டு இருக்கு. மீதம் இருக்கிற சில யூடியூப் சேனல்கள், தங்களுக்கு விளம்பரம் வரலைனா; ஹீரோ பேட்டி தரலைனா அந்தப் படத்தை தப்பா விமர்சனம் பண்றது, காசு வாங்கிட்டு அவங்களுக்கு பாசிட்டிவ்வா விமர்சனம் பண்றது, வேற ஒரு தயாரிப்பாளர்கிட்ட காசு வாங்கிட்டு இன்னொரு தயாரிப்பாளர் படத்தை நெகட்டிவ்வா விமர்சனம் பண்றதுனு ரொம்பவே தப்பாப் போயிட்டு இருக்காங்க.

 

 

அதே மாதிரி ஒரு படம் சரியில்லைன்னா அதை எடுத்து சொல்றதுக்குச் சில முறைகள் இருக்கு; பயன்படுத்துற வார்த்தைகள் முக்கியம். கதை சரியில்லைனா ஒரு நடிகரை எதுக்கு பர்ஷனலா திட்டணும். அதுக்கும் கதை சரியில்லாததுக்கும் என்ன சம்பந்தம். ஒரு நடிகரை பர்ஷனலா சிலருக்குப் பிடிக்கலைனா படம் நல்லா இருந்தாலும் அவரை டம்மி பண்ற மாதிரி விமர்சனங்கள் பண்றாங்க. மதன் சாரோட விமர்சனங்களைப் பார்த்தால் எப்படி விமர்சனம் பண்ணணும்னு தெரிஞ்சுக்கலாம். ஒரு விஷயம் சரியில்லைனாலும் அதை அவர் எடுத்துச் சொல்ற விதம் நல்லாயிருக்கும். அது சம்பந்தப்பட்ட நடிகர், இயக்குநருக்கு நெருடலா இருக்காது. அவர் விமர்சனம் பண்ணும்போது படம் சம்பந்தப்பட்ட ஆள்களை பக்கத்துல வெச்சுக்கிட்டுதான் பேசுவார். இப்போ வர விமர்சனங்கள் எதுவுமே அந்த மாதிரி இல்லை. 

நான் இந்த வீடியோ பண்ணுனதுக்கான காரணம், தயாரிப்பாளர் சங்கம் இதில் தலையிட்டு சில ரூல்ஸ் போடணும் என்பதுதான். `படம் ரிலீஸான முதல் மூன்று நாள்களுக்கு விமர்சனம் போடக் கூடாது. இந்த ரூலை ஃபாலோ பண்றவங்களுக்குத்தான் தயாரிப்பாளர்கள் விளம்பரங்கள் கொடுப்பாங்க’னு ஒரு ரூல் கொண்டு வந்தா மாற்றம் வர வாய்ப்பு இருக்கு’’ என்றார் ஆர்.ஜே.ராஜவேல்.


டிரெண்டிங் @ விகடன்