`` `செக்கச்சிவந்த வானம்’ மகாபாரதத்தின் இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம்..!’’ - கோ-ரைட்டர் சிவா | Chekka chivantha vaanam movie co writer siva ananth talks about his career

வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (01/10/2018)

கடைசி தொடர்பு:15:30 (01/10/2018)

`` `செக்கச்சிவந்த வானம்’ மகாபாரதத்தின் இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம்..!’’ - கோ-ரைட்டர் சிவா

சமீபத்தில் ரிலீஸாகி இருக்கும் 'செக்கச்சிவந்த வானம்' படம் குறித்த அனுபவத்தை படத்தின் கோ-ரைட்டர் சிவா ஆனந்த் பகிர்ந்து கொள்கிறார்...

`` `செக்கச்சிவந்த வானம்’ மகாபாரதத்தின் இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம்..!’’ - கோ-ரைட்டர் சிவா

``மானாமதுரைதான் என்னோட சொந்த ஊர். சின்ன வயசுல டாக்டர் ஆகணும், இன்ஜினீயர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அந்த ஆசையெல்லாம் 'ரோஜா' படம் பார்க்கிற வரைக்கும்தான். ஏன்னா, அந்தப் படம் பார்த்த பிறகு மணிரத்னம் சார்கிட்ட வொர்க் பண்ணணும், டைரக்டர் ஆகணும்ங்கிற கனவெல்லாம் வர ஆரம்பிச்சிருச்சு. அதனால, சினிமாவைப் பற்றிய படிப்பு படிச்சேன்...'' என்ற அறிமுகத்தோட பேசுகிறார் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் கோ ரைட்டர் மற்றும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவா ஆனந்த். இயக்குநர் மணிரத்னத்துக்கும் தனக்கும் உண்டான நட்பை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

செக்கச் சிவந்த வானம்

``என்னோட சிறுகதை விகடனில் பிரசுரமானது. அதை வைத்து மணிசார்கிட்ட பேசலாம்னு நினைச்சேன். அவருடைய மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அதற்கு என்னோட சிறுகதையை அனுப்பி அவர்கிட்ட பேசினேன். 'உங்களை மீட் பண்ணணும் சார்'னு சொன்னேன். ’பார்க்கலாம்’னு சொன்னார். இருவரும் சந்தித்தோம். 20 நிமிஷம் என்னை இன்டர்வீயூ பண்ணார். பிரமிப்பா இருந்தது. இன்னைக்கு வரைக்கும் அந்தப் பிரமிப்பு எனக்குள்ளே இருக்கு. பத்து வருஷமா அவருடைய ரசிகன். ஆறு வருஷம் அவருடைய சந்திப்புகாகக் காத்திருந்தேன். அவரைப் பார்த்தவுடனே வார்த்தைகள் தடுமாறித்தான் கீழே விழுந்தன. தயங்கிக்கொண்டே, 'உங்க கிட்ட உதவி இயக்குநரா சேர ஆசை'னு சொன்னேன். அந்தச் சமயத்துல மணி சாருடைய `தில் சே' படத்தோட ஷூட்டிங் போயிட்டு இருந்தது. அதனால, ’அடுத்த படத்துல வந்து சேர்’னு சொன்னார். ஆனா, `தில் சே’ படத்தோட கடைசி ஷெட்யூலிலேயே என்னைக் கூப்பிட்டார். வேலையில் சேர்ந்தேன். ஆறு உதவி இயக்குநர்கள் மணி சார்கூட இருப்பாங்க. கடைக்குட்டியா நான் நிற்பேன். என்னை ராக்கிங்லாம் பண்ணினாங்க... அதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.

மணிரத்னம்

'தில் சே' படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வொர்க் போயிட்டு இருந்த சமயத்துல என்கிட்ட 'அலைபாயுதே' படத்தோட கதையை சொன்னார். சீன் பை சீன்ஸ் ஒன்றரை மணிநேரம் சொன்னார். அந்த நேரத்துல நிறைய பேர் அவர்கிட்ட வந்து செக்ல கையெழுத்து வாங்கிட்டு போவாங்க. கையெழுத்துப் போட்டு முடிச்சிட்டு விட்ட இடத்துலிருந்து கதையைத் திரும்பவும் சொல்லத் தொடங்குவார். கதை சொல்லி முடிச்சவுடனே, 'எப்படியிருக்கு'னு கேட்டார். 'சூப்பரா இருக்கு சார். பண்ணலாம்'னு சொன்னேன். 

அதே மாதிரிதான் தற்போது 'செக்கச் சிவந்த வானம்' படத்தோட கதையும். படத்தோட கரு பற்றி மணிசார்கிட்ட சொன்னேன். அவருக்கு பிடிச்சிருந்தது. பிறகு, ரெண்டு வாரத்துக்குப் பிறகு கதையைப் பற்றி பேசினோம். ஒரு மாசத்துக்குப் பிறகும் பேசினோம். எப்போ, பேசினாலும் சுவாரஸ்யம் இருந்தது. அதனால, படமா பண்ணலாம்னு முடிவு பண்ணி 'செக்கச் சிவந்த வானம்' உருவாக்கிட்டோம். 

'செக்கச் சிவந்த வானம்' படத்துக்காக ஆரம்பத்திலிருந்தே அவர்கூட டிராவல் பண்ணினேன். பிறகு, படத்துகான நடிகர், நடிகைகள் தேர்வில் நானும், மணி சாரும் இறங்கினோம். இது மல்டி காஸ்டிங் படம். அதனால, நிறைய ஹீரோக்கள்கிட்ட கதை சொன்னோம். பலருக்கு கால்ஷீட் பிரச்னை இருந்தது. அதனால, நடிக்க முடியாமல் போயிருச்சு. குறிப்பா, மாதவன் சார்கிட்டயும் கேட்டோம். அவரால் கால்ஷீட் பிரச்னை காரணமா பண்ண முடியாமல் போய்விட்டது. 

சிம்பு

படத்துல சிம்புவோட மனைவி கேரக்டரை 'டயானா' பண்ணியிருந்தாங்க. அவங்க மும்பை சிட்டியைச் சேர்ந்தவங்க. நானும் மணி சாரும் மும்பை போனப்போ டயானவை பார்த்து ஆடிஷன் வெச்சு அவங்களைத் தேர்ந்தெடுத்தோம். 

படத்தோட வசனத்தையும், மணி சாருடைய வழக்கமான ஸ்டைலியே எழுதியிருந்தோம். குறைவான வரிகளிலேயே எங்களுடைய வசனத்தை ஹீரோக்கள்கிட்ட கொடுத்தோம். அவங்களும் அந்த வசனத்துக்கு ஏத்த மாதிரி டயலாக்ஸ் டெலிவரி பண்ணுனாங்க. கதைக்கு தேவையான அளவுதான் வசனத்தைப் பயன்படுத்தினோம். அதே மாதிரி, சிம்பு பற்றி சொல்லணும். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்துக்கு வந்துருவார். எல்லாரோடும் ரொம்ப நல்லா பழகினார். இதுக்கு முன்னாடி அவரைப் பற்றி கேள்விப்பட்ட சில வதந்திகளை பொய்யாகிட்டார். 

படத்தோட ட்ரெய்லர் பார்த்துட்டு நிறைய பேர் இது 'மகாபாரதம்' கதைதான்’னு சொன்னாங்க. அண்ணன், தம்பி சண்டைகள் புராணக் காலங்களிலிருந்தே இருக்கு. அப்படி பார்த்தா இந்தப் படம் மகாபாரதத்தின் இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம்’’ என்றவர் அவரின் முந்தையப் படங்கள் பற்றி பகிர்ந்துகொண்டார். 

``சினிமாவுல நிறைய வொர்க் பண்ணியிருக்கேன்னு சொல்ல மாட்டேன். ஒரு நாலு, அஞ்சு புராஜக்ட்தான் எழுதியிருக்கேன். மணி சார்கூட சேர்ந்து இந்தப் படத்துல கதை எழுதுனது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. ஏன்னா, தோல்வியை முதலில் சுவைத்தவன் நான். என்னோட முதல் படம் 'அச்சம் தவிர்'. படத்தோட ஹீரோ, ஹீரோயின் ஜோதிகா, மாதவன். ஆனா, படத்தோட ஷுட்டிங் இருபது நாள்ல நின்னுருச்சு. அதுதான் கொஞ்சம் வருத்தம். ஆனா, அதற்குப் பிறகு ஒரு தெலுங்கு படம் டைரக்‌ஷன் பண்ணி ஹிட் அடித்தது. மணி சாருடைய 'ஓ காதல் கண்மணி' படத்துல துல்கரோட அண்ணா கேரக்டரில் நடித்தேன். தற்போது 'செக்கச் சிவந்த வானம்' படத்துல செழியன் கேரக்டர்தான் எனக்கு பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்திருக்கு. தொடர்ந்து நல்ல படங்களில் வொர்க் பண்ணணும்'' என்று நம்பிக்கையுடன் முடித்தார் சிவா ஆனந்த்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்