``விஜய் அப்படிப்பட்ட ஆளே கிடையாது..!’’ - `அவுட்டு’ பவன் | Polladhavan fame Actor pavan interview

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:13:26 (15/10/2018)

``விஜய் அப்படிப்பட்ட ஆளே கிடையாது..!’’ - `அவுட்டு’ பவன்

`` `ராசி’ படத்திலிருந்தே அஜித் எனக்கு நல்ல பழக்கம். `ஜி’ படத்திலும் அவரோடு சேர்ந்து நடிச்சேன். நான் அஜித்தை வாங்க, போங்கனு சொன்னா, உனக்கும் எனக்கும் ஒரே வயசுதான் வா,போனு கூப்பிடுனு சொல்லுவார்."

``விஜய் அப்படிப்பட்ட ஆளே கிடையாது..!’’ - `அவுட்டு’ பவன்

`ராசி’ படத்தின் மூலம் தன் கரியரைத் தொடங்கிய நடிகர் பவன், `கலாபக் காதலன்’ படத்தில் தனா; `பொல்லாதவன்’ படத்தில் அவுட்டு எனத் தனது 20 வருட சினிமா பயணத்தில் பெயர் சொல்லும்படியான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது `வடசென்னை’ படத்தில் வேலு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரைச் சந்தித்துப் பேசினோம்.

`வடசென்னை’ வேலு கதாபாத்திரம் உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷலாக இருக்கும்..?

``வெற்றிமாறனோடு நான் `பொல்லாதவன்’ பண்ணும் போது, `எனக்கு அதிகமா வசனமே இல்லையே. என் கதாபாத்திரம் நல்லா வருமா’னு அவர்கிட்ட கேட்டேன். அந்தப் படம் ரிலீஸானதுக்கு அப்புறம் என்னை அவுட்டுனு சொன்னாத்தான் பல பேருக்குத் தெரிஞ்சது. அந்தளவுக்கு எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தவர், வெற்றிமாறன். அதனால் `வடசென்னை’ படத்துக்கு அவர் என்னை நடிக்கக்கூப்பிட்டதும் எதுவும் கேட்காமப் போயிட்டேன். இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு சீன், ரெண்டு சீன் மட்டும் வர கேரக்டர்கூட நல்லா ரீச்சாகும். அந்த மாதிரியான ஸ்கிரிப்ட். எல்லாரும் என்கிட்ட அவுட்டு மாதிரி இன்னொரு கேரக்டர் எப்போ பண்ணுவீங்கனு கேட்டாங்க. எனக்கு வேற எந்தப் படமும் அந்த கேரக்டர் அளவுக்குக் கிடைக்கலை. இப்போ அவுட்டு மாதிரி ஒரு கதாபாத்திரம் `வடசென்னை’ வேலு மூலமா கிடைச்சிருக்கு.’’

பவன்

`வடசென்னை’ டீசரில் கிஷோர், சமுத்திரக்கனியோடு நீங்க வர மாதிரி சில ஷாட்ஸ் இருந்தது... தனுஷோடு உங்களுக்கு சீன்ஸ் இருக்கா..?

``நிறைய சீன்ஸ் இருக்கு. ஜெயில்ல ஒரு போர்ஷன் இருக்கும்; அது முழுக்க தனுஷோடுதான் நடிச்சிருக்கேன். ஒரு சீன்ல நான் ஒரு கெட்ட வார்த்தையில திட்டிட்டு அவரை உதைக்கணும்னு வெற்றிமாறன் சொன்னார். ஒரு பெரிய நடிகரை எப்படிக் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுறதுனு ரொம்ப யோசிச்சேன்; அது ரொம்ப கொச்சையான வார்த்தை. அதைச் சொல்லிட்டு அவரை உதைக்கணும்; எனக்கு ரொம்ப பயமா இருந்தது. அப்புறம் தனுஷ் சார்தான், `பரவாயில்லை அடிங்க. மேலப்பட்டாலும் பிரச்னை இல்லை’னு சொன்னார். அதுக்கப்புறம்தான் அந்த சீன் நல்லா வந்துச்சு.’’

பொதுவாகவே வெற்றிமாறன் படங்கள் ரியலா இருக்கும். அப்படிச் சண்டைக்காட்சிகளில் ரியலா நடிக்கும் போது எதாவது அடிப்பட்டுச்சா..?

`` `வடசென்னை’யில அந்த மாதிரி எதுவும் நடக்கலை. ஏன்னா, படத்துல மாஸ் சண்டைக்காட்சி எதுவும் இருக்காது. இது கேங்ஸ்டர் படம்தான்; ஆனால், தேவையான இடத்துல மட்டும்தான் சண்டை இருக்கும். அது எல்லாமே எதார்த்தத்தின் உச்சமா இருக்கும்.’’

 

 

உங்களோட இந்த 20 வருட சினிமா பயணத்தில் நீங்க சந்திச்ச சில மனிதர்களைப் பற்றிச் சொல்லுங்க...

லிங்குசாமி:

``என்னோட குரு. நான் சின்னச் சின்ன கேரக்டர்கள் நடிச்சிட்டு இருந்த சமயத்தில் `ஜி' படம் மூலமா எனக்கு ஒரு பெரிய கேரக்டரைக் கொடுத்து என்னை வெளியே தெரிய வெச்சவர்.’’

வெற்றிமாறன்:

``தெய்வம்.’’

விஜய்:

``விஜய் யார்கிட்டேயும் பேச மாட்டார்; ரொம்ப அமைதியான ஆள்னு சொல்லுவாங்க. அவர் அப்படிப்பட்ட ஆளெல்லாம் கிடையாது. செம ஜாலியாப் பேசுவார். `குருவி’ படத்தில் நான் அவரோட நடிச்சப்போ, ` `பொல்லாதவன்’ படத்தில் நல்லா பண்ணியிருந்தீங்க. அந்த அழற சீன்ல செம’னு சொன்னார்.’’

அஜித்:

`` `ராசி’ படத்திலிருந்தே அஜித் எனக்கு நல்ல பழக்கம். `ஜி’ படத்திலும் அவரோடு சேர்ந்து நடிச்சேன். நான் அஜித்தை வாங்க, போங்கனு சொன்னா, உனக்கும் எனக்கும் ஒரே வயசுதான் வா,போனு கூப்பிடுனு சொல்லுவார். நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கார். `நீயே போய் எனக்கு வில்லன் ரோல் வேணும்னு கேட்காத. டைரக்டர் பார்த்துட்டு அவரே உனக்கு எது செட்டாகும்னு பார்த்து நடிக்க வைப்பார்’னு சொல்லுவார். ரொம்ப அக்கறை எடுத்துப் பேசக்கூடிய ஆள்.’’


டிரெண்டிங் @ விகடன்