வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (18/10/2018)

கடைசி தொடர்பு:10:53 (18/10/2018)

’’ ‘கமல் ஃபேன்ஸ்கிட்ட கவனமா இரு’ன்னார் என் டைரக்டர்!’’ - டேனியல் பாலாஜி

’’ ‘கமல் ஃபேன்ஸ்கிட்ட  கவனமா இரு’ன்னார் என் டைரக்டர்!’’  - டேனியல் பாலாஜி

’பொல்லாதவன்’ படத்திற்குப் பிறகு ’வடசென்னை’ படம் மூலம் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் டேனியல் பாலாஜி. ’வடசென்னை’ படத்தில் அமீரின் தம்பியாக தம்பி எனும் கதாபாத்திரத்தில், வழக்கம் போல் தன் எதார்த்த நடிப்பைக் கொடுத்திருக்கும் டேனியல் பாலாஜிக்கு வாழ்த்தைச் சொல்லிவிட்டு, பேட்டியை ஆரம்பித்தேன். 

நீங்க நடிக்கிற கேரக்டர் எல்லாமே வித்தியாசமா இருக்கு. இந்த ’வடசென்னை’ தம்பி கேரக்டரை நாம விட்டுவிடக்கூடாதுனு எந்த விஷயத்தை வைத்து முடிவு பண்ணுனீங்க..?

’’நான் எப்போதுமே எந்த கேரக்டரையும் விட்டுடக்கூடாதுனு நினைச்சு அந்தப் படத்துல கமிட்டாக மாட்டேன். இந்தக் கேரக்டருக்கு நாம செட்டாவோமானு எனக்குள்ள நானே கேட்டுப்பேன். ஓகேனு தோணுச்சுன்னா அதில் நடிப்பேன்; ’வடசென்னை’ படமும் அப்படித்தான். அதே மாதிரி ஒரே நேரத்துல நாலு படத்தை கமிட் பண்ணி வெச்சுக்கிட்டு ஒரு படத்துக்கு 5 நாள், இன்னொரு படத்துக்கு 10 நாள்னு ஒதுக்கி நடிக்க மாட்டேன். ஒரு படத்தில் கமிட்டானால், அந்தப் படம் முடிஞ்சதுக்கு அப்பறம்தான் அடுத்தப் படத்தில் நடிக்க கமிட்டாவேன். அது ஒரு மாதத்தில் முடியிற படமாக இருந்தாலும் சரி, ஒரு வருஷத்தில் முடியிற படமாக இருந்தாலும் சரி. இதுனால எனக்கு வேற சில நல்ல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் என்னை விட்டு போச்சு. இருந்தாலும் இதை நான் தொடர்ந்து கடைப்பிடிச்சிட்டு இருக்கேன்.’’ 

டேனியல் பாலாஜி

இயக்குநர் கெளதம் மேனனோட நீங்க பண்ணின படங்கள் எல்லாமே உங்களுக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு. அந்த காம்போவோட ரகசியம் என்ன..?

’’கெளதம் படங்கள்னு இல்ல; எந்தப் படமாக இருந்தாலும் ஹீரோவுக்கு சமமான முக்கியத்துவம் வில்லனுக்கும் இருக்கணும். அப்போதுதான் ஹீரோ கேரக்டர் வெயிட்டா இருக்கும். அதுவே அந்த வில்லன் கதாபாத்திரம் ரொம்ப வித்தியாசமா இருந்தா, அந்த ரோலில் எந்த நடிகர் நடிச்சாலும் அவருக்கு நல்ல பெயர்தான் கிடைக்கும். அப்படித்தான் எனக்கு கெளதம் மேனனின் படங்கள் அமைஞ்சது.’’

 

 

 

’வேட்டையாடு விளையாடு’ படத்தில் அமுதன் கேரக்டரில் நடிக்கிறதுக்கு தயக்கம் இருந்துச்சா..?

’’கெளதம்  என்கிட்ட, ‘டேய் இப்படி ஒரு கேரக்டர் எழுதியிருக்கேன். உனக்கு ஓகேவா; பிரச்னைனா சொல்லிடு’னு சொன்னார். எனக்கு அந்த கேரக்டரில் நடிக்கிறதுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏன்னா, அந்த ரெண்டு பசங்களும் அமெரிக்காவில் இருக்கிறவங்க. அதுனால ஒரு பையனுக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கிற மாதிரி கதை எழுதுனது எனக்கு தப்பா தெரியலை. ஆனால், எனக்கு வேணாம்னு தோணுன சில நல்ல ஸ்கிரிப்ட்களில் நடிக்காமலும் இருந்திருக்கேன். ‘ராட்சசன்’ படத்தில் கணக்கு வாத்தியார் கேரக்டரில் நடிக்க கேட்டிருந்தாங்க. கேரக்டரா அது படத்துக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர். ஆனால், அந்த கேரக்டர் பள்ளி மாணவிகள்கிட்ட தப்பா நடந்துக்கிற மாதிரி இருக்கும். இந்த கேரக்டரை நான் நடிச்சி, அதோட அவுட்புட் ரியலா இருந்துச்சுன்னா, எங்க வீட்டுல இருக்கிற பெண்களும் அவங்களோட மகள்களும் என்னை எப்படி பார்ப்பாங்கனு எனக்குத் தெரியலை. அதுனால, ரொம்ப ரியலா இருக்கிற இந்த கேரக்டர் எனக்கு வேணாம்னு டைரக்டர் ராம்குமார்கிட்ட சொன்னேன். இப்படி எனக்கு தயக்கமா இருக்கிற சில படங்களை நான் தவிர்த்தும் இருக்கேன்.’’

டேனியல் பாலாஜி

பெரிய நடிகர்களுக்கு வில்லனா நடிக்கும் போது அவர்களை அடிக்கிற மாதிரியான காட்சிகளில் நடிக்கும் போதும் டேமேஜ் பண்ற வசனங்கள் பேசும் போதும் ரசிகர்கள்கிட்ட இருந்து எந்த மாதிரியான ரியாக்‌ஷன்ஸ் வந்திருக்கு..?

’’தியேட்டரில் படம் பார்க்கும் போது கண்டிப்பா ரசிகர்களுக்கு கோவம் வந்திருக்கும். ஆனால், என்னைப் பார்க்கும்போது ’நல்லா பண்ணியிருக்கீங்க’னுதான் சொல்லியிருக்காங்க. ’வேட்டையாடு விளையாடு’ படம் ரிலீஸாகும் போது கெளதம் என்கிட்ட, ‘மச்சான் படம் ரிலீஸான கமல் ரசிகர்கள் உன்னை சும்மா விடமாட்டாங்க. அவங்ககிட்ட கவனமா இரு’னு சொன்னார். நானும் படம் ரிலீஸாகுற சமயம் என் கெட்டப்பை ஃபுல்லா மாத்திட்டுத்தான் தியேட்டருக்குப் போனேன். என்னைப் பார்த்து சில பேர் அவங்களுக்குள்ளேயே பேசிட்டு, பேசிட்டு போனாங்க. ஒருத்தர் மட்டும் என்கிட்ட வந்து, ‘எனக்கு படம் பார்க்கும் போது உங்க மேல அவ்வளவு கோவம் வந்துச்சு. ஆனால், செமையா நடிச்சிருக்கீங்க’னு சொல்லிட்டு போனார். அப்போதுதான், ‘சரி... மக்கள் இந்த கேரக்டரை ஏத்துக்கிட்டாங்க’னு ஒரு சந்தோஷம் வந்துச்சு.’’


டிரெண்டிங் @ விகடன்