வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (27/10/2018)

கடைசி தொடர்பு:08:27 (27/10/2018)

"ப்ளீஸ் வதந்தி பரப்பாதீங்க!" கோவை சரளா

மீபத்தில், நடிகை கோவை சரளாவின் உடல்நிலை குறித்து வதந்தி கிளம்பியது. அது தவறான செய்தி என சினிமா துறையினர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகள் பற்றி நம்மிடம் பேசினார், கோவை சரளா.

"என் உடல்நிலை பற்றி பலமுறை வதந்திகள் வெளியாகியிருக்கு. ஆரம்பத்தில் இந்த மாதிரியான வதந்திகள் வருத்தத்தை கொடுக்கும். அப்புறம், அதுக்காக வருத்தப்படறதில்லை. என் சொந்தக்காரங்க வெளிநாட்டில் இருக்காங்க. அவங்களோடு தினமும் போனில் பேசுவேன். அடிக்கடி நேரில் போய் பார்ப்பேன். அவங்களும் என்னைப் பார்க்க சென்னைக்கு வருவாங்க. இப்போ, 'தேவி 2' படத்தில் நடிச்சுட்டிருக்கேன். அதுக்காக, ஒரு மாச ஷூட்டிங்கா மொரீசியஸ் போய்ட்டு சமீபத்தில்தான் வந்தேன். 'விஸ்வாசம்', 'காஞ்சனா 3' உள்பட நான்கு பெரிய படங்களில் நடிச்சுட்டிருக்கேன். இந்த ஷூட்டிங் பரபரப்பினால் மற்ற விஷயங்களைப் பெரிசா கவனிக்கிறதில்லை. இந்த நிலையில்தான், நான் ட்ரீட்மென்ட்டுக்காக வெளிநாடு போயிருக்கிறதாக தகவல் பரப்பியிருக்காங்க.

கோவை சரளா

சினிமாவில் பிரபலங்கள் பலரின் உடல்நிலைப் பற்றியும் அடிக்கடி வதந்தி பரப்பவதையே வாடிக்கையா வெச்சிருக்காங்க. அதனால், அவங்களுக்கு என்ன கிடைக்கப்போகுது? நான் சீரியஸா இருக்கிறதாகவும்,  யாருமே ஆதரவுக்கு இல்லைனும் தகவல் பரப்பியிருக்காங்க. இப்படிப் பொய்யான செய்தியைச் சொல்றது, உயிரோடு உள்ளவரை கொலைச் செய்யறதுக்குச் சமம். இந்த சோஷியல் மீடியா யுகத்தில், ஒரு செய்தியை உடனே மத்தவங்களுக்கு பகிரமுடியுது. அதற்காக, நமக்கு வரும் செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்திக்காமலே ஷேர் பண்றது சரியா? அதை அறிவுள்ளவங்க பண்ணலாமா? என் மேல் உண்மையான அன்புள்ளவங்க, எனக்கே போன் பண்ணித்தான் எந்தச் செய்தியையும் உறுதிபடுத்திப்பாங்க. என்னை அணுக முடியாதவங்க, அச்செய்தியின் உண்மைத்தன்மை தெரியாதவரை எந்தச் செயலையும் செய்ய மாட்டாங்க. சிலர் செய்ற இத்தகைய செயல்களால், எனக்கு வருத்தமில்லை. ஆனால், என் மீது அன்புகொண்டவங்க ரொம்ப அதிர்ச்சியாகறாங்க. அதுதான் கவலையை உண்டாக்குது" என்கிறார் ஆதங்கத்துடன்.

கோவை சரளா

தன் சினிமா நட்புகள் பற்றி கூறும்போது, "ஒட்டுமொத்த சினிமா துறையும் என் குடும்பம்தான். என் நல்லது, கெட்டது எல்லாத்திலும் உறுதுணையா இருக்காங்க. இப்போ என்னைப் பற்றி வதந்தி வெளியானதும் பல திரைப் பிரபலங்கள் எனக்காகப் பேசியிருக்காங்க. நான் தனியாள்; எனக்கு யாரும் இல்லைனு இனி யாரும் சொல்ல வேண்டாம். 30 வருஷத்துக்கும் மேலாக சினிமாவில் இருக்கேன். முன்னாடி ஒரே நேரத்தில் பல படங்களில் நடிச்சுட்டிருந்தேன். இப்போ அடுத்தடுத்த தலைமுறைக்கும் வழிவிட,  நான் ரொம்ப செலக்டிவாக நடிக்கிறேன். சினிமா மற்றும் பர்சனல் வாழ்க்கையிலும், பிறர் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். நான் உண்டு; என் வேலை உண்டுனுதான் வாழறேன். இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. என்னால் முடியும் வரை தொடர்ந்து நடிப்பேன். நடிகர் சங்கம் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகள்லயும் ஆர்வமா கலந்துகிட்டுதான் இருக்கேன். என் உடல்நிலை நல்லா இருக்கு. நான் ஆக்டிவா இருக்கிறேன். நாட்டில் தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகள் நிறைய இருக்கு. அதுக்காகவோ அல்லது ஏதாவது பயனுள்ள வழியிலோ உங்க ஓய்வு நேரத்தைச் செலவிடுங்க. இப்படி, மற்றவர்கள் பற்றி தவறான, உறுதிப்படுத்தாதச் செய்திகளைப் பகிராதீங்க" என வேண்டுகோள் விடுக்கிறார் கோவை சரளா.


டிரெண்டிங் @ விகடன்