வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (27/10/2018)

கடைசி தொடர்பு:18:45 (27/10/2018)

"வட்டம் ஃபார்மாயிடுச்சுல்ல...!" - விக்ராந்திற்கு விஜய் சேதுபதியின் பன்ச்

`தாக்க தாக்க' சஞ்சீவ் இயக்கத்தில் விக்ராந்த் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார், நடிகர் விஜய் சேதுபதி. அந்த அனுபவம் குறித்துப் பேசுகிறார், படத்தின் இயக்குநர் சஞ்சீவ்.

விக்ராந்தின் அண்ணனும் இயக்குநருமான சஞ்சீவ் `தாக்க தாக்க' படத்துக்குப் பிறகு இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதுமையைக் காட்டி வரும் விஜய் சேதுபதி, தான் தயாரித்த முதல் படமான `ஆரஞ்சு மிட்டாய்' படத்துக்கு வசனம் எழுதியது அனைவருக்கும் தெரிந்ததே. பல படங்களில் பிஸியாக இருப்பவர், தான் நடிக்காத ஒரு படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருப்பது ஆச்சர்யம். இதுகுறித்து, அப்படத்தின் இயக்குநர் சஞ்சீவிடம் பேசினோம்.  

விஜய் சேதுபதி

`` `தாக்க தாக்க' படத்துக்குப் பிறகு, ஒரு கதை எழுதி வெச்சிருந்தேன். அதை விஜய் சேதுபதி அண்ணனுக்குச் சொல்லப்போனேன். அப்போ, `இந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. கண்டிப்பா பண்ணலாம். ஆனா, எனக்கு நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு. அதையெல்லாம் முடிச்சிடுறேன். நீங்களும் இன்னொரு படம் பண்ணிட்டு வந்தா, சரியா இருக்கும்னு நினைக்கிறேன். இதுதவிர, வேற கதை வெச்சிருக்கீங்களா?'னு கேட்டார். இப்போ பண்ணிக்கிட்டிருக்கிற கதையைச் சொன்னேன். அதைக் கேட்டதும், `இந்த ஐடியாவுக்கு விக்ராந்த் சரியா செட் ஆவார். நாம ரெண்டுபேரும் சேர்ந்தே ஸ்கிரிப்ட் பண்ணலாம்'னு சொன்னார். நான் தினமும் அவர் ஆபீஸுக்குப் போயிடுவேன். அவர் ஷுட்டிங் முடிச்சுட்டு வந்து ராத்திரி 8 மணிக்கு உட்கார்ந்தார்னா, 3 மணி வரைக்கும் ஸ்கிரிப்ட் பண்ணுவோம். பிறகு, அவர் தூங்கிட்டு காலையில 7 மணிக்கு ஷூட்டிங் கிளம்பிடுவார். சேது அண்ணாதான் படத்துக்கு திரைக்கதை, வசனம்னு தெரிஞ்சதும் விக்ராந்த் பதறிட்டான். ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோவுக்கு இந்தளவுக்கு உதவி பண்ணணும்னு அவசியமே இல்லை. அதுவும் அவர் இருக்கிற பிஸியில வாய்ப்பே இல்லை. இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர்ல ரெடி பண்ணியிருக்கோம். ஆனாலும், ஹியூமருக்கு அதிக ஸ்கோப் இருக்கும். அவர்கூட இருந்து பார்க்கும்போதுதான் அவருக்குள்ள ஒரு இயக்குநர் இருக்கார்னு தெரிய வந்தது. நாம ஒரு விஷயத்தைப் பார்க்கிறதுக்கும், அவர் அதைப் பார்க்கிற கோணத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சேது அண்ணா அற்புதமான திரைக்கதை ஆசிரியர். சீக்கிரமே அவர் இயக்குநர் ஆனா, அந்தப் படம் வேற லெவல்ல இருக்கும். 

விஜய் சேதுபதி

நான் ஒரு கேரக்டரை அந்த கேரக்டரா மட்டும் பார்ப்பேன். ஆனா, அவரோ ஒவ்வொரு கேரக்டரையும் தன்னோட கேரக்டரா நினைச்சு திரைக்கதை எழுதினார். தவிர, இந்தக் கதையில அவர் வொர்க் பண்றதுக்கு விக்ராந்த் முக்கியக் காரணம். விக்ராந்தை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். `கவண்' படத்துல நடிச்சதுக்குப் பிறகு ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள் ஆகிட்டாங்க. எனக்கும் விக்ராந்த்துக்கும் எங்க கரியர்ல பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கார், விஜய் சேதுபதி. ரெண்டுபேரும் சேர்ந்துதான் திரைக்கதை எழுதினோம். வசனத்தை அவர் மட்டும் எழுதினார். ரொமான்ஸ், ஹியூமர் சீன்ஸுக்கு ரொம்ப ரசிச்சு ரசிச்சு வசனம் எழுதினார். `விக்ரம் வேதா' படத்துல 'கோட்டுக்கு அந்தப் பக்கம்; இந்தப் பக்கம்னுலாம் இல்லை. ரெண்டுபேரும் ஒரு வட்டத்துக்குள்ளேதான் சார் இருக்கோம்'னு ஒரு வசனம் வரும். அதுமாதிரி, இந்தப் படத்துல `வட்டம் ஃபார்மாகிடுச்சுல்ல...'னு ஒரு பன்ச் எழுதியிருக்கார். அது பெருசாப் பேசப்படும்னு நினைக்கிறேன். என்னோட கருத்துக்கும் மதிப்பு கொடுத்தார். `இதுக்குப் பதிலா வேற வசனம் இருந்தா நல்லாயிருக்கும்'னு சொன்னா, `அப்படியா தலைவா. இப்படி வெச்சுக்குவோமா?'னு உடனே வேற ஒண்ணு சொல்வார். விஜய் சேதுபதி ஒரு சுரங்கம். தோண்டத் தோண்ட புதுசா ஏதாவது அவர்கிட்ட இருந்து கிடைச்சுக்கிட்டே இருக்கும். விக்ராந்த் `பக்ரீத்' பட ஷூட்டிங்ல இருக்கான். அது முடிஞ்சதும், இந்தப் படத்துக்கான ஷூட்டிங் தொடங்கும். படம் மட்டுமல்ல, இந்தப் படத்துக்குப் பிறகு விக்ராந்தையும் மக்களுக்குப் பிடிக்கும்!" என்கிறார், சஞ்சீவ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்