வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (09/11/2018)

கடைசி தொடர்பு:19:18 (09/11/2018)

``எல்லாத் துறைகளிலும் இருக்கிற மாதிரி சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கு...!’’ - பாலாஜி மோகன்

``எல்லாத் துறைகளிலும் இருக்கிற மாதிரி சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கு...!’’ - பாலாஜி மோகன்

`மாரி’ படத்தைத் தொடர்ந்து தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ’மாரி - 2’ படத்தை இயக்கி இருக்கிறார் பாலாஜி மோகன். `மாரி - 2’ வேலைகளில் பிஸியாக இருந்தவரை, சந்தித்துப் பேசினோம். 

முதல் முறையா தமிழில் வெப் சீரிஸ் எடுத்தது நீங்கதான்; இப்போ தமிழில் நிறைய வெப் சீரிஸ் வருது. இந்த வளர்ச்சியை எப்படி பார்க்குறீங்க; இன்னொரு வெப் சீரிஸ் நீங்க பண்ணுவீங்களா..?

``கண்டிப்பா பண்ணுவேன். அந்த பிளாட்பாரம்ல நிறைய பண்ணணும்னு ஆசைப்படுறேன். வெப் சீரிஸ் மத்த லாங்வேஜ்ல பெருசா பேசப்பட்டப்போ இங்க யாருமே பண்ண முன்வரலை. `மாரி’ படத்துக்கு அப்புறம் `மாரி - 2’ ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருக்கும்போதே `As I Am Suffering From Kaadhal’ சீரிஸை பண்ணினேன். இப்போ நிறைய வெப் சீரிஸ் வருது; ஆனால், இன்னும் எந்தப் பெரிய இயக்குநரும் அதைப் பண்ணலை. அவங்களும் வெப் சீரிஸ் பக்கம் வரணும். சினிமாவில் நாம் சொல்ல முடியாததையும் சென்சார் பிரச்னைகளுக்குள் சிக்காமலும் நிறைய விஷயங்களை வெப் சீரிஸில் பண்ணலாம். `As I Am Suffering From Kaadhal’ சீரிஸோட ரெண்டாவது சீசன் எடுக்குற ஐடியா இருக்கு.’’ 

பாலாஜி மோகன்

குறும்பட இயக்குநர்கள் சினிமாவுக்கு வந்த காலம்போய் இப்போ நிறைய இளம் இயக்குநர்கள் சினிமா பக்கம் வராம வெப் சீரிஸ் பண்ண போறாங்க. இது வருங்கால சினிமாவை பாதிக்காதா..?

``சினிமா பக்கமே வராம வெப் சீரிஸ் பண்ணக்கூடாது. ஓர் இயக்குநரோட கன்ட்டென்ட் ரெண்டு பக்கமும் படமாகணும். சென்சார் அனுமதிக்குற வகையில் அவர்கிட்ட இருக்கிற கதை சினிமாவுக்கும், வெப்பில் சொல்லக்கூடியதை சீரிஸிலும் பண்ணலாம். ஏன்னா, சென்சார் கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கு. அதனால், சினிமாவில் சொல்ல முடியாத பல விஷயங்களை வெப் சீரிஸில் சொல்லலாம்.’’

நீங்க, கார்த்திக் சுப்புராஜ், நலன் குமரசாமினு குறும்பட இயக்குநர்கள் சிலர், ஒரு கேங்காக சினிமாவுக்குள் வந்தீங்க... உங்க நட்பு எப்படி இருக்கு..?

``எங்களோட நட்பு தொழில் ரீதியாகத்தான் இருக்கு. பார்க்கும்போது எங்களோட படங்கள் பத்தி பேசுவோம். படம் சம்பந்தமா ஏதாவது உதவி தேவைப்பட்டா பேசிப்போம். என்னோட வெப் சீரிஸில் நடித்த சனத், அதே டைம்லதான் கார்த்திக் சுப்புராஜோட `மெர்க்குரி’ படத்துலேயும் நடிச்சிட்டு இருந்தார். ஒரே டைம்ல ஷூட் இருந்தனால, கார்த்திக்கிட்ட பேசி கொஞ்சம் மாத்திக்கிட்டோம். இப்படி எங்களோட நட்பு ஹெல்தியா இருக்கு.’’

மாரி 2

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கா..?

``இது எல்லாத் துறைகளிலும் இருக்கிற மாதிரி சினிமாவிலும் இருக்கு. `சினிமாவில் இருக்கா’னு ஒரு துறையை மட்டும் ஃபோகஸ் பண்ணி பார்க்கிறதுல நியாயமும் இல்லை. நம்ம சமூகத்தில் இந்தப் பிரச்னை இருக்கு. பாலியல் தொல்லை எங்க நடந்தாலும் அது தவறுதான். இந்தப் பிரச்னை இல்லாமல் போறதுக்கு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது நல்லது.’’

`காதலில் சொதப்புவது எப்படி’ படத்துல அமலா பால், `வாயை மூடி பேசவும்’ படத்தில் துல்கர் சல்மான் - நஸ்ரியா, `மாரி’ படத்துல விஜய் யேசுதாஸ், இப்போ `மாரி - 2’ல டொவினோ தாமஸ்னு உங்களோட எல்லா படங்களிலும் மலையாள டச் இருக்கே..?

``அட ஆமா... எனக்கு அது தெரியவே இல்லை. எல்லாமே யதார்த்தமா அமைஞ்சிருக்கு. மலையாள டச் இருக்கணும்; கேரளாவில் தமிழ்ப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு, அதுனால அந்த ஊர் நடிகர்களை நடிக்க வெச்சா பிசினஸ் ஆகும்னு நான் எப்போதும் நினைச்சது இல்லை.’’


டிரெண்டிங் @ விகடன்