Published:Updated:

"சர்காருக்காக ஜெயலலிதா மேல பழி போடாதீங்க!" - விக்ரமன்

பிர்தோஸ் . அ

இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் 'சர்கார்' படம் குறித்து தன் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

"சர்காருக்காக ஜெயலலிதா மேல பழி போடாதீங்க!" - விக்ரமன்
"சர்காருக்காக ஜெயலலிதா மேல பழி போடாதீங்க!" - விக்ரமன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் 'சர்கார்' திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. படத்தின் வசூலைத் தாண்டி படம் பேசியிருக்கும் அரசியல் இன்றைய அரசியல் தளத்தில் இருப்பவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றிருக்கும் வரலட்சுமியின் கேரக்டர் பெயர், அரசு கொடுத்த இலவச பொருள்களைத் தூக்கி எறியும் காட்சி... எனப் படம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. 'சர்கார்' பிரச்னைகள் குறித்து இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமனிடம் பேசினேன். 

''இந்தப் பிரச்னையை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகத்தான் பார்க்கிறேன். இதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிறாங்கனு தெரியலை. 1971-ஆம் வருடம் கலைஞர் பெரும்பான்மை பெற்று முதலமைச்சர் ஆனார். அப்போது 'முகம்மது பின் துக்ளக்' என்ற அரசியல் திரைப்படம் வெளியானது. அதில், கலைஞரைக் கிண்டல் பண்ணி காட்சிகள் இருக்கும். கிண்டல் செய்யக்கூடியவருடைய உடல் பாவனை, நடை, உடை எல்லாம் கலைஞரைப் பிரதிபலித்தது. அவரை மாதிரியே தோளில் துண்டு, கண்ணாடி போட்டுக்கிட்டு தூய தமிழில் பேசுவார். இதையெல்லாம் கலைஞர் பார்த்தார். ஆனா, ஒன்னும் பண்ணலை. அதே மாதிரி, இந்தப் படத்தில் மனோரமா இந்திரகாந்தியை இமிடேட் பண்ணி நடிச்சிருப்பாங்க. அவங்களை மாதிரியே சேலை உடுத்தி, பாப் கட்டிங் ஹேர் ஸ்டைல் பண்ணியிருந்தாங்க. எந்தவொரு முடிவு எடுத்தாலும் கிளி ஜோசியம் பார்த்துதான் முடிவு பண்ணுவாங்க. முக்கியமான கோப்புகளில் கையெழுத்துப் போட்டாலும், கிளியிடம் கேட்பாங்க மனோரமா.  

அந்த நேரத்தில் இந்திராகாந்தி அம்மையாரும் பிரதமரா இருந்தாங்க. இப்படிப் பலதரப்பட்ட அரசியல் நையாண்டியை இந்தப் படம் பேசியிருந்தது. ஆனா, இந்தப் படத்தை வெளியிட யாரும் தடுக்கலை. எல்லோரும் ரசிச்சாங்க. அப்புறம் எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனபோது, 'பாலைவன ரோஜாக்கள்', 'நீதிக்குத் தண்டனை' போன்ற அரசியல் படங்களெல்லாம் வந்தது. ஆளுங்கட்சியைக் குறைசொல்லி, விமர்சித்து காட்சிகள் இருந்தன. அவரும் எதுவும் சொல்லலை. ஏன், ஜெயலலிதா அம்மா முதலமைச்சரா இருந்தப்போதான் 'புதிய மன்னர்கள்' படத்தை நான் எடுத்தேன். இதுவும் அரசியல் சார்புடைய படம்தான். படத்தில் முதலமைச்சருடைய கார் ரோட்டில் வருதுங்கிறதுக்காக எல்லா வண்டிகளையும் நிறுத்திடுவாங்க, டிராஃபிக் ஆகும். ஜெயலலிதா அம்மா சி.எம்-ஆக இருந்தப்போ இப்படிப்பட்ட நடைமுறை இருந்தது. இந்தக் காட்சி முதலமைச்சரை தாக்குற மாதிரி இருக்குனு சொன்னாங்க. ஆனா, அதை அம்மா கண்டுக்கலை. இதுமாதிரியான அரசியல் படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்துக்கிட்டுதான் இருக்கு. சமீப காலங்களில்தான் குறை சொல்வதும், தடுப்பதும் நடக்கிறது" என்கிறார், விக்ரமன்,

'மறுதணிக்கை' என்ற விஷயத்தை எப்படிப் பார்க்குறீங்க?

"அப்படியெல்லாம் பண்ணக்கூடாதுதான். 'விஸ்வரூபம்' படத்தை மறு தணிக்கை செய்யணும்னு சொன்னப்போவும் இதைத்தான் சொன்னேன். மறு தணிக்கை பண்ணச் சொன்னா, அப்புறம் என்ன கருத்து சுதந்திரம் இருக்கு. பேச்சுரிமை, எழுத்துரிமை எங்கே போச்சு. ஜனநாயக நாடுனு சொல்லிக்கிட்டு இப்படிப் பண்ணலமா... இதில் எனக்கு மட்டுமில்ல எந்த இயக்குநருக்கும் உடன்பாடில்லை."

'சர்கார்' படம் மறுதணிக்கைக்கு சென்றதை உங்களால் தடுக்க முடியலையா?

"முடியாது. ஏன்னா, இந்த முடிவைப் படத்தோட தயாரிப்பு தரப்பிலிருந்து எடுத்துட்டாங்க. அதுக்குப் பிறகு நாம என்ன செய்ய முடியும்." 

கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவது இயக்குநர்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணும்னு நினைக்குறீங்களா?

"கண்டிப்பா. அரசியல் படங்களை எடுக்க யோசிப்பாங்க. கருத்து பேசத் தயங்குவாங்க. தியேட்டரில் தடை பண்ணுவாங்களோனு பயம் வரும். இதனால, நல்ல படைப்புகள் வரமாலேகூட போகும்." 

'சர்கார்' பிரச்னை தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸிடம் பேசுனீங்களா?

"முருகதாஸ் கைது செய்யப்படலாம்னு பேச்சு வந்தவுடனே, நேரா அவருடைய வீட்டுக்கே போனேன். வீட்டில் அவர் இல்லை. போலீஸ்காரர்களும் இல்லை. பிறகு, முருகதாஸ் எனக்கு போன் பண்ணிப் பேசினார். 'சார், நான் வீட்டுக்கு போகலை சார். வெளியே இருக்கேன். என்னைக் கைது பண்ண ஆறு போலீஸ்காரங்க வந்திருக்கிறதா சொன்னாங்க'னு சொன்னார். அவருக்கு ஆறுதல் சொன்னேன். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்னு சொன்னேன். ஒருவேளை முருகதாஸ் கைது செய்யப்பட்டிருந்தால், சினிமா துறை சார்பாக முதலமைச்சரைச் சந்தித்து 'இந்த முடிவை மறுபரீசிலனை செய்து, விடுதலை செய்யுங்க'னு கோரிக்கை விடுத்திருப்போம்." 

படத்தில் இடம்பெற்ற 'கோமளவள்ளி' கேரக்டர் பற்றி?

"ஜெயலலிதாவின் உண்மையான பெயர் 'கோமளவள்ளி'ங்கிறது யாருக்கும் தெரியாது. அவர் இறந்த பிறகுதான் செய்தித்தாள்களில் படிச்சு அவங்க உண்மையான பெயர் இதுதான்னு நானே தெரிஞ்சுக்கிட்டேன். அவரே ஒரு பேட்டியில், எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் வேற... திரைத்துறைக்கு வந்த பிறகு ஜெயலலிதா. இப்போ எல்லோரும் என்னை 'அம்மா'னு அழைத்து, அதுவே என் பெயர் ஆகிடுச்சுனு சொல்லியிருக்காங்க. அந்தளவுக்குப் புகழ் பெற்ற மனிதர் அவர். ஏற்கெனவே சொன்னதுபோல 'புதிய மன்னர்கள்' படம் வந்தப்போ எந்தப் பகையுணர்ச்சியும் இல்லாமா அவங்க என்கிட்ட பழகுனாங்க. திரைத்துறை சார்பாக அவங்களைப் பலமுறை சந்தித்த நபர் நானாகத்தான் இருப்பேன். ஒவ்வொரு முறையும் மரியாதையாக, பாசமாகத்தான் பேசுவாங்க. 'அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படி படம் எடுத்திருப்பாங்களா'னு கேட்கக்கூடாது. சர்காருக்காக ஜெயலலிதா மேல பழி போடக்கூடாது. அவங்க கண்டிப்பா இதை எதிர்த்திருக்க மாட்டாங்க. நிச்சயமாக, 'சர்கார்' அதிமுகவுக்கு எதிரான படம் இல்லை. பல அரசு இலவசப் பொருள்களைக் கொடுத்திருக்கு. ஆக, முருகதாஸும் அதிமுகவுக்கு எதிரான ஆள் கிடையாது."

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..