Published:Updated:

``விவசாயத்தைப் பற்றித் தெரிஞ்சவன், வில்லன். தெரியாதவன் ஹீரோ!" - `குத்தூசி' திலீபன்

உ. சுதர்சன் காந்தி.

`குத்தூசி' படம் பற்றியும், தன் அடுத்த படங்களின் அப்டேட் பற்றியும் சொல்கிறார், நடிகர் திலீபன்.

``விவசாயத்தைப் பற்றித் தெரிஞ்சவன், வில்லன். தெரியாதவன் ஹீரோ!" - `குத்தூசி' திலீபன்
``விவசாயத்தைப் பற்றித் தெரிஞ்சவன், வில்லன். தெரியாதவன் ஹீரோ!" - `குத்தூசி' திலீபன்

`` `வத்திக்குச்சி' படத்துக்குப் பிறகு நான் கமிட்டான படம், `குத்தூசி'. ஆனா, `காலா' முன்னாடியே ரிலீஸ் ஆகிடுச்சு. இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட கதை இது. உணவுச் சங்கிலியின்படி இந்த உலகத்துல இருக்கிற எல்லா உயிரினமும் ஆரோக்கியமா வாழ, இயற்கை விவசாயம் அவசியம். `குத்தூசி' அதைத்தான் பேசப்போகுது"  ஆர்வத்துடன் படத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார், நடிகர் திலீபன். 

`` `குத்தூசி' படத்துல உங்க கேரக்டர் என்ன?"

``இதுல இயற்கை விவசாயம் பண்ற பையன். அதுக்கு முன்னாடி எப்படி இருந்தேன், ஏன் இயற்கை விவசாயத்துக்கு வந்தேன், விவசாயம் பண்ணா நஷ்டம்னு நம்மளுக்குச் சொன்னது யார், அதுக்குப் பின்னாடி இருக்கிற அரசியல் என்ன.. இதுதான் படம். சிம்பிளா சொன்னா, விவசாயத்தைப் பத்தி நல்லா தெரிஞ்சவன், வில்லன். தெரியாதவன், ஹீரோ. ஊர்ல இருக்கிற இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் முழுசா தெரியாது, அவங்களை என் கேரக்டர் பிரதிபலிக்கும். கம்மியான ஏக்கர்ல விவசாயம் பண்ணிட்டு இருந்தவங்க, அதைக் கவனிக்க முடியாம ஏதோ ஒரு கம்பெனியில மாச சம்பளத்துக்கு வேலை பார்த்துக்கிட்டு இருப்பாங்க. அவங்களுக்கெல்லாம் இந்தப் படம் மீண்டும் விவசாயம் பண்ணணும்னு யோசிக்க வைக்கும்." 

``விவசாயத்தை மையமாக வைத்து வெளியான `கடைக்குட்டி சிங்கம்', `கனா' படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. இந்த சமயத்துல இந்தப் படமும் வர்றது எப்படி இருக்கு?"

``படம் ரிலீஸாக லேட் ஆனது ஒருவகையில நல்லதுனு நினைக்கிறேன். `கடைக்குட்டி சிங்கம்' மூலமா பாண்டிராஜ் சாரும், கார்த்தி சாரும் விவசாயத்தைப் பற்றிப் பேசி, அந்த உணர்வைத் தூண்டிவிட்டுட்டாங்க. `கனா' படத்துல சத்யராஜ் சார் பேசுற வசனம் ஒவ்வொண்ணும் அவ்வளவு ஆழமா இருந்தது. `குத்தூசி' மட்டுமல்ல, சீனு ராமசாமி சாரோட `கண்ணே கலைமானே', மணிகண்டன் இயக்குற `கடைசி விவசாயி'னு அடுத்தடுத்து விவசாயத்தை மையப்படுத்திய படங்கள் வர்றது, சந்தோஷம்."

``விவசாயத்துல உங்களுக்கு அனுபவம் இருக்கா?" 

``இல்லை. ஆனா, அவங்களுடைய உழைப்பைப் பார்த்திருக்கேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, இயற்கையோட போராடி நமக்காக உழைச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்குக் கிடைக்கிற லாபம் கம்மிதான். இருந்தாலும், விவசாயத்தை விடாமப் பண்றாங்க. அது ஒரு சென்டிமென்ட் பாண்டிங். இந்தப் படத்துல நடிச்சதுக்குப் பிறகு எனக்கும் இயற்கை விவசாயம் பண்ணணும்னு ஆசை வந்திருக்கு,  நிச்சயம் பண்ணுவேன்." 

``இந்தப் படத்துல கமிட் ஆகும்போது இருந்த யோகி பாபுவையும், இப்போ இருக்கிற யோகி பாபுவையும் எப்படிப் பார்க்குறீங்க?"

``ஒரு நண்பனா அவருடைய வளர்ச்சி அபாரமானது. ஒருத்தர் உயரத்துக்கு வளர்ந்துக்கிட்டு இருக்கும்போது ஒரு சில குழப்பங்கள் வரும். ஆனா, அவர் அப்போ எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்போவும் இருக்கார்." 

``ஹியூமர் சென்ஸைத் தவிர்த்து யோகி பாபுவிடம் உங்களுக்குப் பிடிச்ச விஷயம்?" 

 ``அவர் ஒரு தீவிர முருகர் பக்தர். எல்லோர் மீதும் அதிக அக்கறை எடுத்துக்குவார். எல்லோரும் பரபரப்பா ஓடிக்கிட்டு இருந்தாலும், யாருக்கு என்ன தேவைனு கண்டுபிடிச்சு, அவங்களுக்குப் பண்ணணும்னு நினைப்பார். பிஸியா இருக்கிற ஒருத்தருக்குத் தன்னுடைய வேலைகளைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கும். ஆனா, யோகி பாபு அடுத்தவங்க மேல அக்கறை எடுத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்."

`` `காலா' உங்களுக்கான இமேஜை உயர்த்தியிருக்கு. அதை எப்படித் தக்க வெச்சுக்க நினைக்கிறீங்க?"

`` `காலா'வுக்குப் பிறகு எனக்கு பொறுப்பு கூடியிருக்கு. ரஜினி சார்கூட போட்டோ எடுக்கவே பல வருடமா காத்திருக்கிற ரசிகர்கள் இருக்காங்க. நான், இந்தப் படத்துல அவருக்குப் பையனாகவே நடிச்சிருக்கேன். இந்த இடத்தை என் அடுத்தடுத்த படங்கள் மூலமா இன்னும் பலமா மாத்திக்கணும். ரஜினி சார்கூட, ரஞ்சித் சார்கூட இருந்த அந்த 60 நாள்களை, எனக்கான படிப்பா நான் பார்க்கிறேன். இப்போவும் பத்து நாளைக்கு ஒருமுறை ரஞ்சித் சார் ஆபீஸுக்குப் போய், அவரைப் பார்த்துட்டு வந்திடுவேன்."

`` `காலா'வுக்கு முன் உங்களுக்கு வந்த கதைகளுக்கும், இப்போ வர்ற கதைகளுக்கும் என்ன வித்தியாசம்?"

`` `காலா'வுக்கு முன்னாடி எனக்கு வர்ற கதைகள்ல ஆக்‌ஷன் கம்மியா இருக்கும். இப்போ, அது அதிகமா வருது. `வத்திக்குச்சி', `காலா' படத்துல ஆக்‌ஷன்ல பாஸ் மார்க் வாங்கிட்டேன். அடுத்து, ஹியூமர், ரொமான்ஸ், டான்ஸ்ல ஸ்கோர் பண்ணணும். அதை, `குத்தூசி' படத்துல முயற்சி பண்ணியிருக்கேன்." 

``ஆக்‌ஷன்ல ஓகே... லவ் சீக்வென்ஸ்ல தீலிபன் எப்படி?"

``ஷூட்டிங்ல எல்லோருக்கும் முன்னாடி ஃபைட், காமெடி பண்ணிடலாம். ஆனா, லவ் பண்ணறது கஷ்டம். இந்த போர்டுதான் ஹீரோயின், இதைப் பார்த்து காதல் வசனம் பேசுங்கனு சொல்வாங்க. எனக்கு முன்னாடி வழுக்கையா ஒரு உதவியாளர் இருப்பார். அவரை நிக்க வெச்சு, இந்த ரொமான்ஸ் டயலாக் பேசுங்கனு சொல்வாங்க. அப்படியெல்லாம் பேசி, ரொமான்ஸ்ல ஸ்கோர் பண்ணிடுவேன்னு நம்பிக்கை வந்திடுச்சு. படம் பார்த்து, ரொமான்ஸ்ல திலீபன் எப்படினு நீங்களே சொல்லுங்க!" 

``அடுத்து?"  

`` `குத்தூசி'க்குப் பிறகு, ஒரு லவ் வித் ஆக்‌ஷன் கதையில நடிக்கிறேன். யோகி பாபுகூட ஒரு படமும், டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல ஒரு படத்துல நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்குது."  

உ. சுதர்சன் காந்தி.

Journalist @ Cinema Vikatan