``மகா நடிகை... ஆனா..?’’ `காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்’ புத்தக குறிப்புகள் | A writer says the hidden story behind Savithri - Gemini couple's separation

வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (16/02/2019)

கடைசி தொடர்பு:11:13 (16/02/2019)

``மகா நடிகை... ஆனா..?’’ `காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்’ புத்தக குறிப்புகள்

``ஜெமினியின் வருகை சாவித்திரியின் பணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது.’’

சினிமா நட்சத்திரங்களுடைய காதல், கல்யாணம் என்ற வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம், சாவித்திரி - ஜெமினி கணேசன் ஜோடியின் பெயரும் கட்டாயம் நினைவில் வரும். அதுவும் சென்ற வருடம் `நடிகையர் திலகம்’ படம் வந்த பிறகு, இந்த ஜோடியின் காதல் வாழ்க்கை பற்றிய பேச்சுகள் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் காதலர் தினமான நேற்று `காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளர் மு.ஞா.செ.இன்பா. சாவித்திரி - ஜெமினி தம்பதியரின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். ஒரு சக்ஸஸ்ஃபுல் கதாநாயகி என்ற பிம்பத்தைத் தாண்டி, சாவித்திரி தன் கணவர் ஜெமினி மீதான காதலை, எப்படியெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று இன்பா நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவற்றில் சில இங்கே...

சாவித்திரி - ஜெமினி

காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்' எழுதிய மு.ஞா.செ.இன்பா``மனம் போல் மாங்கல்யம் படத்தில் நடிப்பதற்காகச் சாவித்திரி வரும்போது, அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தது ஜெமினி கணேசன்தான். சாவித்திரிக்கு அப்போது பதினாறு வயது. ஜெமினியின் நாசுக்காக பழகும் விதம் அவரை ஈர்த்துவிடுகிறது. அதுதான் பின்னாளில் காதலாக மலர்கிறது. 

காதல் கணவருக்காக அவர் கட்டிய வீட்டில் இருந்த நீச்சல் குளத்தை, அதே காதலுக்காக உடைத்து நொறுக்கிய சம்பவமும் சாவித்திரி வாழ்க்கையில் நடந்திருக்கிறது. `அந்த நீச்சல் குளத்தைக் கட்டிய விதத்தில் வாஸ்து சரியில்லை. அதனால்தான், உங்களுக்கும் கணவருக்குமிடையில் பிரச்னைகள் வருகின்றன’ என்று ஜோதிடர் ஒருவர் சொல்ல, மறுநாளே, அத்தனை காலம் குழந்தைகளுடன் ஆனந்தமாக ஆடிப்பாடிய அந்த நீச்சல் குளத்தையே இடித்து மூடியிருக்கிறார். அந்த அளவுக்குக் கணவர் மேல் காதல் கொண்ட மனைவியாக இருந்திருக்கிறார் நடிகையர் திலகம்’’ என்றவர் தொடர்ந்தார். 

 

`` `தேனிலவு’ பட ஷூட்டிங். `ஓஹோ எந்தன் பேபி' பாடல் ஒத்திகையின்போது நடிகை வைஜெயந்தி மாலா ஜெமினியின் மீது விளையாட்டாகக் காலால் தண்ணீரை வாரியிறைத்து விளையாடியிருக்கிறார். அப்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சாவித்திரி, வைஜெயந்தி மாலாவிடம் பெரிதாகச் சண்டை போட்டிருக்கிறார். இந்த மாதிரி சம்பவம், பல படங்களுடைய ஷூட்டிங்கின்போதும் நடந்திருக்கிறது. கணவர் விஷயத்தில், தான் ஒரு மகா நடிகை என்பதை மறந்து சராசரிப் பெண்ணாகத்தான் இருந்திருக்கிறார் சாவித்திரி.  

காதல் தம்பதி

சாவித்திரியுடன் மகளிர் அமைப்பைச் சேர்ந்த சில பெண்கள் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். சாவித்திரி தன் வீட்டில் இருக்கிற நகை, பணம் எதற்குமே கணக்கு வைத்துக்கொள்ளாதவர் என்பதால், அவர்கள் எல்லாம் அதை தங்கள் இஷ்டத்துக்கு அனுபவித்து வந்திருக்கிறார்கள். சாவித்திரிக்கு இதெல்லாம் தெரியாது. ஆனால், ஜெமினி சிக்கனவாதி. எவ்வளவு வருமானம், எவ்வளவு செலவு, என்னென்ன செலவழித்தீர்கள் என்று கேள்வி கேட்கிற கேரக்டர். அதனால், ஜெமினியின் வருகை சாவித்திரியின் பணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது. அதனால், அவர்கள் சாவித்திரியைத் தூண்டிவிட்டு, ``நீ எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட். நீ ஒரு படம் டைரக்ட் பண்ணு.  புரொடியூஸ் பண்ணு' என்று உசுப்பேற்றிவிட்டிருக்கிறார்கள். ஜெமினியோ, `இதெல்லாம் உனக்குச் சரிப்பட்டு வராது' என்று  கடுமையாகச் சொல்ல, கணவர் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்திருக்கின்றன.  இதற்கிடையில் அந்த மகளிர் அமைப்பைச் சேர்ந்த பெண்கள், `நீ பெரிய ஆளாகிடுவேன்னு உன் கணவருக்கு பொறாமை’ என்று ஏற்றிவிட, அதன் விளைவாகத்தான் ஜெமினியை தன் வீட்டுக்குள் வரக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் சாவித்திரி. அதன் பிறகு சமாதானமாகிறார்கள். ஜெமினி வேறொரு நடிகையுடன் பழகுவதை தெரிந்துகொண்ட பிறகுதான், கணவரை கூர்க்காவை விட்டு விரட்டிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. 

புத்தகம்

இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக, `மிஸ்ஸியம்மா’, `பாவ மன்னிப்பு’, `பாசமலர்’ ஆகிய மூன்று படத்தையும் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த விழாவில் சாவித்திரி - ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். அந்த விழாவில் நாகரிகம் கருதியும் கணவரின் வேண்டுகோளுக்காகவும் சிறிதளவு ட்ரிங்க் எடுத்துக்கொண்டிருக்கிறார் சாவித்திரி. பின்னாளில் ஜெமினி வேறொரு கதாநாயகியுடன் நெருக்கமாகப் பழகுவதாக கிசுகிசுக்கள் வர, அதன் பிறகுதான் வெறும் நாகரிகத்துக்காகத் தொட்ட மதுவை அடிக்கடி தொட ஆரம்பித்திருக்கிறார். அதுவே, அவரை மரணம் வரை அழைத்துச் சென்றிருக்கிறது’’ என்று முடித்தார் இன்பா.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close