Published:Updated:

``ரூம்ல ஃபீல் பண்ற ரஞ்சித் அண்ணா; முத்தம் கொடுக்கிற மிஷ்கின் சார்!’’ - கலையரசன்

தார்மிக் லீ

மிஷ்கின் இயக்கிய `நந்தலாலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கலையரசன் தற்போது சில முக்கியமான கதாபாத்திங்களிலும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஒரு ஜாலி சாட்!

``ரூம்ல ஃபீல் பண்ற ரஞ்சித் அண்ணா; முத்தம் கொடுக்கிற மிஷ்கின் சார்!’’ - கலையரசன்
``ரூம்ல ஃபீல் பண்ற ரஞ்சித் அண்ணா; முத்தம் கொடுக்கிற மிஷ்கின் சார்!’’ - கலையரசன்

``இப்போதான் டெக்னாலஜி வளர்ந்திடுச்சு, அப்போ ரோல்போட்ட கேமராவுலதான் போட்டோ எடுப்பாங்க. அதுக்குக்கூட காசு இல்லாம `மச்சான் போட்டோ எடுக்கக் காசுதாடா’ன்னு கேட்ட காலம் எல்லாம் இருக்கு. தவிர, இவ்வளவு செலவு பண்ணி எடுக்கிற போட்டோக்கள் எல்லாம் இயக்குநர்கள் கைக்குப் போகுமான்னு சந்தேகமும் இருக்கும். சினிமாவுக்கு வர நினைக்கிற எல்லோரையும் மாதிரி, நானும் இப்படிக் கஷ்டப்பட்டுதான் இன்டஸ்ட்ரிக்குள்ளே வந்தேன். இப்போ, ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கேன்!’’ - தன் ஆரம்பக்கால கதையைச் சொல்லி உரையாடலைத் தொடங்கினார் கலையரசன்.

`` `ஐரா’ வாய்ப்பு எப்படி வந்தது?’’

```நெஞ்சுக்குள்ளே’ங்கிற குறும்படத்துல இருந்தே எனக்கு சர்ஜூன் அண்ணா நல்ல பழக்கம். அவருடைய 3 நிமிட பைலட் படமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்புறம், `எச்சரிக்கை’ படத்துல நான்தான் நடிக்கிறதா இருந்தது. அந்தச் சமயம் எனக்கிருந்த வேலைகளால பண்ண முடியல. அதுக்கு ரொம்ப ஃபீல் பண்ணேன், அவர்கிட்டேயும் ஒருமுறை சொல்லியிருந்தேன். அப்புறம் ஒருநாள் திடீர்னு போன் பண்ணி, `ஐரா படத்துல ஒரு ரோல் இருக்கு பண்றியா’னு கேட்டார். கதையையும் என் கதாபாத்திரையும் சொல்லும்போதே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன். `படத்துல நயன்தாரா ரெண்டு ரோல்ல நடிக்கிறாங்க, இன்னொரு நயன்தாராகூட நீ நடிக்கிற மாதிரி இருக்கும்’னு சொன்னார். இதைச் சொன்ன உடனே செம ஹேப்பியா இருந்தது, யோசிக்காம ஓகே சொல்லிட்டேன். படத்துல ஓய்வு பெற்ற ஆர்மி ஆபிஸரா நடிச்சிருக்கேன். ரொம்ப மெச்சூர்டான கதாபாத்திரம். படம் நல்லா வந்திருக்கு.’’ 

``நயன்தாராவுக்கு ஜோடியா நடிச்ச அனுபவம்?’’ 

``பொதுவா பெரிய நடிகர்கள்கூட நடிக்கும்போது, எல்லோருக்கும் தயக்கம் இருக்கும். அதேமாதிரிதான், எனக்கும் நயன்தாரா மேடம்கூட நடிக்கும்போது இருந்தது. நான் பண்ற பெர்ஃபாமன்ஸ்ல 50 சதவிகிதம் அவங்களுக்கும் பங்கு இருக்கு. காரணம், அவங்க என்ன ரியாக்ட் பண்றாங்களோ, அதுக்குத் தகுந்த மாதிரிதான் நாம நடிக்க முடியும். சில காட்சிகளுக்கு நிறைய டேக் வந்துட்டாகூட எதுவும் சொல்லாம ஸ்போர்டிவ்வா, `ஓகே போகலாம்’னு சொல்வாங்க. நடிக்கும்போதும்செம புரொபெஷனலா நடிப்பாங்க. செட்ல அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு இருப்பாங்க. மத்த நடிகர்களுக்கும் நடிக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.’’

``இந்த இயக்குநர் படத்துல, இப்படி ஒரு கதாபாத்திரம் பண்ணணும்னு ஆசை இருக்கா?’’

``நிறைய இயக்குநர்கள்கிட்ட நிறைய ஆசை இருக்கு. குறிப்பிட்டுச் சொல்லணும்னா, `விக்ரம் வேதா’ படத்துல வந்த வேதா மாதிரி ஒரு ரோல் பண்ண ஆசை இருக்கு. `காலா’ படத்துல வந்த மணிகண்டன் பண்ண ரோல், நான் பண்ண வேண்டியது. சில காரணங்களால பண்ண முடியல. பொதுவா படங்கள்ல ரொம்பச் சாதாரண ஆளா நடிக்கணும்னுதான் எனக்கு ஆசை. நான் ஒரு பணக்காரப் பையனாவோ, ஐ,டி கம்பெனியில வேலை பார்க்கிற பையனாவோ நடிச்சா எப்படியிருக்கும் சொல்லுங்க... ரொம்பக் கேஷுவலா, பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி நடிச்சிட்டுப்போற ரோல்தான் எனக்குப் பிடிக்கும், அதுதான் எனக்கும் செட்டாகும்.’’ 

``என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க?’’

``ரஞ்சித் அண்ணா தயாரிக்கிற `குதிரை வால்’ படத்துல நடிச்சிருக்கேன். படத்தின் களம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஒரு சூழ்நிலையில ஹீரோவுக்கு வால் முளைச்சிடும். அந்த வால் ஏன், எதுக்கு முளைச்சதுனு ஹீரோ தேடிப் போறதுதான் கதை. படத்துல ஒரு டிராவல் இருக்கும். அது ரொம்பவே சுவாரஸ்யமான பயணமா இருக்கும். இதுல வேலை பார்த்திருக்கிற எல்லோருமே இளைஞர்கள். அந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சவாலாக இருந்தது. அந்தக் கதாபாத்திரத்துல இருந்து வெளியே வர்றதுக்கே எனக்குக் கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. அந்தளவுக்கு ஆழமான கதாபாத்திரம். இந்தப் படத்துக்கு அப்புறம் `டைட்டானிக்’ படம் இருக்கு. அந்தப் படம் இளைஞர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னும் ஒரு சில படங்கள் பெண்டிங்ல இருக்கு.’’

``மிஷ்கின், ரஞ்சித்... இந்த இரண்டு இயக்குநர்களும் உங்களுடைய சினிமா பயணத்தில் முக்கியமானவர்கள். அவங்களைப் பத்திச் சொல்லுங்க?’’

``இயக்குநர்கள் என்பதைத் தாண்டி ரெண்டுபேரையும் மனிதர்களா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரஞ்சித் படங்கள்ல நான் இருக்கேன், இல்லைங்கிறதைத் தாண்டி, அவருடன் எப்போவுமே டச்ல இருப்பேன். நான் நடிச்ச படங்கள் நல்லா போகலைன்னா, என்னைவிட அவர்தான் அதிகமா ஃபீல் பண்ணுவார். நான் நடிச்ச படங்களைப் பற்றிய செய்திகளில் என் பெயர் வரலைன்னாகூட கோபப்படுவார். அந்தளவுக்கு இயல்பான ஆள். இவ்வளவு ஏன்... தெரியாத ஒரு ஊர்ல ஏதாவது பிரச்னைன்னாலும் தனி ரூம்ல உட்கார்ந்து ஃபீல் பண்ற நல்ல மனிதர். இப்படி ஒரு மனுஷனை நான் பார்த்ததே இல்லை. ரொம்ப நேர்மையான, தூய்மையான ஆள். இதுக்குமேல அவரைப் பத்தி பேசினா, நான் எமோஷன் ஆகிடுவேன். மிஷ்கின் சார் செம ஸ்வீட்! நடிக்கும்போது அவர் எதிர்பார்த்தது வரலைன்னா, செம்மயா திட்டுவார். நல்லா நடிச்சுக் கொடுத்துட்டா, கட்டிப்பிடிச்சு கிஸ் கொடுப்பார். வெளியே சிலர் அவர் ரொம்பக் கோபக்காரர்னு சொல்வாங்க. அவர்கூட பழகினாதான், அவரைப் பற்றி நல்லாத் தெரியும். நியாயமான ஒரு ஆள்.’’ 

``சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க, நடிக்கணும்ங்கிற ஆசை எதனால வந்தது?’’

``சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி, சினிமாவுக்கு வர முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். ஸ்கூல், காலஜ்ல ஃப்ரெண்ட்ஸ்கூட அடிக்கிற அரட்டையெல்லாமே சினிமாவைப் பற்றிதான் இருக்கும். அதிகநேரம் சினிமாவைப் பற்றிதான் பேசுவோம். பொதுவாவே ஒரு மனுஷனோட வாழ்க்கையில சினிமாவுக்குப் பெரும் பங்கு இருக்கும். நான் இப்போ ஒரு நடிகனா இல்லைனாகூட, சினிமாவுக்குள்ளே வர முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருந்திருப்பேன். ஏன்னா, எனக்குப் பிடிச்ச இடமே ஷூட்டிங் ஸ்பாட்தான்! அது ஒருவிதமான சென்டிமென்ட்னுகூட சொல்லலாம். இடையில எனக்கு ஒரு விபத்து. முட்டில அடிபட்டதால, சர்ஜரி பண்ணாங்க. சில நாள்கள் ஷூட்டிங் போகமுடியல. எல்லாம் சரியாகி, பலநாள் கழிச்சு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் நிற்கும்போது, செம ஹாப்பியா இருந்தது. அதை, உடனே என் மனைவிக்குச் சொன்னேன். சினிமா, எனக்கு ஒரு எமோஷன்.’’ 

``சாதிய விஷயங்களை சினிமாவுல எப்படிப் பார்க்குறீங்க?’’

``இங்கே எல்லோருமே ஒண்ணுதான். குறிப்பிட்ட ஊர் மக்களின் வாழ்வியலைப் படமாக்குறது வேற, அதேசமயம் சுய சாதிப் பெருமையைப் பேசுறது ரொம்பவே தப்பு. அது பிரிவினையைத்தான் உண்டாக்கும். `உன் வாழ்க்கையை நீ காட்டு, என் வாழ்க்கையை நான் காட்டுறேன்' இப்படித்தான் இருக்கணும். உன் வாழ்க்கையைப் பெருசுன்னு சொல்லி, என் வாழ்க்கையை மட்டம் தட்டுறது சரியா இருக்காது!’’ 

`` `மெட்ராஸ்’ படத்துல வந்த அன்பு கதாபாத்திரம் இப்போ வரைக்கும் பேசப்படுது... இதை எதிர்பார்த்தீங்களா?’’

``அந்தப் படம் ஒரு மேஜிக்! ரஞ்சித் எனக்கு அவ்வளவு க்ளோஸா இருந்தாலும், படத்துல நடிக்கிறதுக்கு ஆடிஷன் வெச்சார். திறமை இருந்தா மட்டும்தான் அவர் படத்துல நடிக்க முடியும். `மெட்ராஸ்’ ரிலீஸானதும் அன்பு கதாபாத்திரத்தைப் பாஸிட்டிவா பேசினாங்க. எல்லோரும் பாராட்டவும் ஆரம்பிச்சாங்க. அதையெல்லாம் எப்படி ஹேண்டில் பண்றதுன்னு அப்போ எனக்குத் தெரியல. அதுக்குப் பிறகுதான் நிறைய வாய்ப்புகள் வந்தது. என் பெயரே தெரியாம, எல்லோரும் `அன்பு’னு கூப்பிட்டாங்க. ஒரு நடிகனுக்கு இதைத் தவிர வேறென்ன வேணும்... அந்தச் சமயத்துல சினிமாவுல முயற்சி பண்றவங்களுக்காகப் படம் நடிச்சுக் கொடுத்துக்கிட்டிருந்தேன். அதுல சில கதாபாத்திரங்கள் நல்லா அமைஞ்சாலும், சில கதாபாத்திரங்கள் சொதுப்பிடுச்சு. இப்போ கொஞ்சம் கவனமா இருக்கேன்.’’ 

தார்மிக் லீ