''கைதூக்கி விடலைனாலும் பரவால்ல... எட்டி உதைக்காதீங்க!'' - `சூப்பர் டீலக்ஸை’க் கண்டிக்கும் கிரேஸ் பானு | transgender grace banu talks about super deluxe movie

வெளியிடப்பட்ட நேரம்: 05:54 (02/04/2019)

கடைசி தொடர்பு:09:47 (02/04/2019)

''கைதூக்கி விடலைனாலும் பரவால்ல... எட்டி உதைக்காதீங்க!'' - `சூப்பர் டீலக்ஸை’க் கண்டிக்கும் கிரேஸ் பானு

நடிகர் விஜய் சேதுபதி' நடித்திருக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்குத் திருநங்கைகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய முகநூலில் இந்தத் திரைப்படத்துக்கு எதிராகத் தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து சமூக செயற்பாட்டாளரான திருநங்கை கிரேஸ் பானுவிடம் கேட்டோம்.

விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' படம் குறித்து கிரேஸ் பானு

``முதலில் இந்தப் படத்தில் சொல்லப்படுகிற லாஜிக்கே சரியில்லை. எப்படிப் பெண்களுக்கு பூப்பெய்தல் ஒரு வயசுல ஏற்படுதோ... அப்படித்தான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறுபவர்களுக்கும் இயல்பிலேயே அவங்களுடைய உடலில் மாற்றத்தை உணர முடியும். அப்படியே இல்லைன்னாலும் அப்படி மாறுபவர்களுக்குப் பெண்கள் மீது ஈர்ப்பு இருக்காது. குழந்தை பிறந்ததுக்கு அப்புறமாகத்தான் அவங்களுடைய உடலில் மாற்றம் ஏற்படுதுன்னாலும் அவையெல்லாமே ஒரே நாளில் ஏற்படுறது இல்லை. 

அந்தப் படத்தோட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்குத் திருநங்கைகள் பற்றி துளிகூட புரிதல் இல்லை. முட்டாள்தனமான இயக்குநராகத்தான் எனக்கு அவர் தெரிகிறார். கிராமத்தில் இருக்கிறவங்ககிட்டகூட நான் திருநங்கைன்னு சொன்னா, அடுத்த நொடி அவங்க என்னை உட்கார வைச்சு மரியாதையா பேசுறாங்க. நீயும் பொம்பளை தானேம்மான்னு என்கூட உரையாடுறாங்க. இன்னைக்கு இந்தப் படம் அப்படி உரையாடுறவங்களை தடுத்து இன்னும் 30 வருடங்களுக்குப் பின்நோக்கி அழைச்சுட்டுப் போகுது. இதற்காகத்தான் நாங்க திரும்பத் திரும்ப சென்சார் போர்டில் திருநங்கைகளையும் இணைச்சிக்கோங்கன்னு கோரிக்கை வைக்கிறோம். விலங்குகள் இந்தப் படத்தில் துன்புறுத்தப்படவில்லைன்னு சொல்றவங்களுக்கு... திருநங்கைகளும் மனிதர்கள்தான்னு ஏன் புரியலை? திருநங்கைகளை துன்புறுத்துறீங்களா இல்லையான்னு பார்க்க சென்சார் போர்டில் திருநங்கைகளை வைங்க. அப்படி இல்லைன்னா இனிமேல் இதே மாதிரி படங்களை வெளியிடுற தியேட்டரில் வன்முறையைக் கையாள வேண்டியதுதான். 

SuperDeluxe

ரோட்டில் நான் நடந்து போகும்போது என் இடுப்பை ஒருத்தன் கிள்ளினாலோ, இழிவாகப் பேசினாலோ அவனை நான் செருப்பால் அடிப்பேன். என்னைக் கேவலமா சித்திரிச்சு படம் எடுத்திருக்கிற இயக்குநரையும், அதில் நடிச்ச நடிகரையும் என்ன செய்யலாம்னு சொல்லுங்க!  'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் ஒன்பதுன்னு எங்களைக் குறிப்பிட்டிருக்காங்கன்னு அதைக் கண்டிச்சு எங்க கருத்துகளை தெரிவிச்சதும் அந்த இயக்குநர், அந்தப் படத்தில் ஒன்பது என்கிற வார்த்தையை உடனடியாக நீக்கினார். இப்போ இவங்க அப்படி நீக்கணும்னா அந்தப் படத்தையே நீக்க வேண்டியதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு மோசமா திருநங்கைகளை சித்திரிச்சிருக்காங்க. நான் தெரியாமத்தான் கேட்குறேன்... மறுபடி மறுபடி 'உஸ், அலி' போன்ற வார்த்தைகளுக்கு ஏன் உயிர் கொடுக்குறீங்க.. 

'திருநங்கை'ன்னு எங்களுக்கு ஒரு பெயர் இருக்கு. இதுக்கு இடையில் எங்களை இழிவுபடுத்தக்கூடிய வார்த்தைகளைத் தேடித் தேடி அதற்கு ஏன் உயிர் கொடுக்குறாங்க. உங்களுடைய ஆணாதிக்க வக்கிர புத்தியில் இந்த மாதிரியாகச் சித்திரிக்கிறதனால்தான் இன்னும் பொள்ளாச்சி சம்பவம் போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது. 

இந்தப் படம் அந்த அளவுக்கு நல்ல மெசேஜ்லாம் கொடுக்கலை. இது முழுக்க, முழுக்க திருநர் சமூகத்தை அவமதிக்கிற படமாகத்தான் இருக்கிறது. விஜய் சேதுபதி என்கிற நட்சத்திர நடிகர் இது போன்ற கேவலமான கதாபாத்திரத்தில் நடிப்பார்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. எங்க சமூகம் அடுத்தடுத்த கட்டத்துக்கு போய்ட்டு இருக்கும்போது எங்களைப் பின்நோக்கித் தள்ளுறது எவ்வளவு பெரிய குற்றம்னு அவங்களுக்குத் தெரியுமா! அந்தப் படத்தில் போலீஸ்காரங்க பேசுற விஷயமாக இருக்கட்டும்.. அல்லது அங்கே நடக்கிற சம்பவங்களாக இருக்கட்டும்... எல்லாமே யதார்த்தமான ஒன்றாகவே இருக்கட்டும். ஆனா, இந்தக் காலகட்டம்னு ஒன்று இருக்கு. கலை மக்களுக்கானது. இன்றைய காலகட்டத்தில் திருநர் என்கிற சமூகம் அவங்களுடைய அடிப்படை உரிமைக்காகப் போராடிட்டு இருக்கிறாங்க. அப்படி இருக்கிறவங்களை நீங்க கை கொடுத்து தூக்கி விடலைன்னாலும் பரவாயில்லை. எட்டி உதைச்சு மறுபடி பின்னாடி தள்ளாதீங்க.. எங்களுக்கு நல்லது பண்றோம் என்கிற சிந்தனையில் எங்களை இன்னும் ஒடுக்காதீங்க!'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்