Published:Updated:

``ஜோதிகா மேடம் எனக்கு அனுப்புன அந்த மெசேஜை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன்!" - சாந்தினி

வே.கிருஷ்ணவேணி

"ஜோ மேடம் எனக்கு சொல்ற 'ஆல் தி பெஸ்ட்' எனக்கு எப்போவுமே ஸ்பெஷல்!"

``ஜோதிகா மேடம் எனக்கு அனுப்புன அந்த மெசேஜை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன்!" - சாந்தினி
``ஜோதிகா மேடம் எனக்கு அனுப்புன அந்த மெசேஜை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன்!" - சாந்தினி

ணவக்கொலை பற்றிய படம்தான் `பற' எனச் சமீபத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியிருந்தார். சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவுள்ள படமான இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார், சாந்தினி. `சித்து +2' படத்தில் அறிமுகமாகி, `வில் அம்பு', `பெட்டிக்கடை', `அச்சமில்லை அச்சமில்லை' போன்ற படங்களில் நடித்தவர். `பற' படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பகிர்கிறார், சாந்தினி, 

`` `பெட்டிக்கடை' படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிச்சிருந்தேன். அப்போதான் அவர்கிட்ட முதல்முறையா பேசினேன். நல்ல மனிதர். அவரிடம் ரீடேக் கேட்கவே தேவையில்லை. அப்படிப்பட்ட கலைஞன் அவர். அவருடன் நடித்தது அருமையான அனுபவம்.'' என்றவர், தொடர்ந்தார். 

`` `பற' படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் கனி சார். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். `பற' கம்மியான பட்ஜெட்ல எடுக்கப்பட்ட படம் என்பதால், அவசர அவசரமாக முடிச்சோம். ஆறு நாள்தான் அவருக்கும் எனக்குமான காம்பினேஷன் சீன்ஸ். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும்னு சொல்லியிருக்காங்க. சிறு பட்ஜெட் படம் என்றாலும், நல்லா வந்திருக்கு. சமுத்திரக்கனியுடன் எனக்கு இது இரண்டாவது படம். `அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியிருக்கு. ரெண்டு படமுமே சோஷியல் மெசேஜ் உள்ள படம். இந்த ரெண்டு படத்தையும் நான் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கேன்.'' என்றவர், தனது திருமணம் குறித்தும் பேசினார்.

``திருமணமான அடுத்தநாளே நானும் என் கணவரும் ஷூட்டிங் போயிட்டோம். கடந்த வருட இறுதியில் எனக்குத் திருமணம் நடந்தது.கணவர் நந்தா, கோரியோகிராஃபர் என்பது எல்லோருக்கும் தெரியும். `மாலைப் பொழுதின் மயக்கத்திலே', `பியார் பிரேமா காதல்', `பேரன்பு' உள்ளிட்ட பல முக்கியமான படங்களில் பணியாற்றியிருக்கிறார். இப்போ, ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் `4ஜி' படத்தில் பணியாற்றியிருக்கிறார். தவிர,  `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியின் ரன்னர் அப் வென்றவர் அவர். 

எனக்கும், அவருக்கும் பத்து வருடங்களுக்கும்மேல் பழக்கம். ஆரம்பத்தில் நட்பாக ஆரம்பித்தது, பிறகு காதலாக மாறியது. என்னுடைய முதல் படமான `சித்து +2' படத்தில் நடித்த சமயத்திலேயே காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். இவ்வளவு நாள்கள் காத்திருந்தது போதும், இனியாவது கல்யாணம் பண்ணிக்கலாம் என இருவரும் இணைந்து முடிவு செய்தோம். எங்க கல்யாணத்துக்குப் பல பிரபலங்களும் கலந்துக்கிட்டு வாழ்த்தினாங்க." என்றவர், 

``இதுவரைக்கும் நான் 55 படங்கள் நடிச்சிருக்கேன். `சதுரங்க வேட்டை 2', `வணங்காமுடி', `அச்சமில்லை அச்சமில்லை', `மைடியர் லீசா', `கறிச்சோறு', `பற' போன்ற படங்கள் என் நடிப்பில் வெளியாகவிருக்கு. தல அஜித்தின் தீவிர ரசிகை நான். அவரோட எந்தப் படம் ரிலீஸானாலும், முதல் நாள் முதல் ஷோ பார்த்திடுவேன். ஹீரோயின்களில் ஜோதிகாவின் தீவிர ரசிகை நான். அவர் என் திருமணத்திற்கு வந்து வாழ்த்தணும்னு நான் ரொம்பவே ஆசைப்பட்டேன். ஆனா, அந்த நேரத்தில் அவரால் வர முடியல. அதற்குப் பதிலாக எனக்கு பெர்ஷனலா மெசேஜ் பண்ணி வாழ்த்தியிருந்தாங்க. அந்த மெசேஜை நான் இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன். இப்போவும், அவங்களுக்கு என் படங்கள் ரிலீஸாகும்போது போன் பண்ணியோ, மெசேஜ் பண்ணியோ தகவல் சொல்லுவேன். ஏன்னா, ஜோ மேடம் எனக்கு சொல்ற 'ஆல் தி பெஸ்ட்' எனக்கு எப்போவுமே ஸ்பெஷல்!" என்று முடிக்கிறார். 

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.