Published:Updated:

" `தேவதை' அஷ்விகா, `குரு' கமல், `ஷோபி 25', `லவ்' லலிதா...'' - மாஸ்டர் ஷோபி

வே.கிருஷ்ணவேணி

எங்க ரெண்டு பேருக்குமான பொதுவான நண்பர்கள்தான், டான்ஸ் ஆடும்போது எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகுதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.'' - மாஸ்டர் ஷோபி

மாஸ்டர் ஷோபி
மாஸ்டர் ஷோபி
மாஸ்டர் ஷோபி
மாஸ்டர் ஷோபி

''ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இத்தனை வருடம் போனதே தெரியல. நிறைய நண்பர்களைச் சம்பாதிச்சிருக்கேன். நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு. இப்போது எங்க குடும்பத்தில் அழகான தேவதையும் வந்து மூன்றரை வருடம் ஆகிடுச்சு'' மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார் ஷோபி.

டான்ஸ் மாஸ்டராக நீங்கள் சினிமாவில் பார்த்த மாற்றங்கள்?

காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் நல்லதுதான். அது சினிமாவிலும் வந்திருக்கு. முன்னாடியெல்லாம் ஒரு படத்தில் கமிட் ஆகிட்டா, அந்தப் படம் முடியும் வரை, அடுத்த படத்தில் கமிட் ஆகக்கூடாது. அந்தப் படம் முடியும் தேதிக்காகக் காத்திருக்கணும். இப்போ அந்த நிலை இல்லை. ஒரு படத்தில் ஐந்து பாடல்கள்னா, ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு டான்ஸர் உண்டு. அதனால, பல படங்களில் இப்போது வாய்ப்புகள் வருது. என்னைப் பொறுத்தவரை இது வரவேற்கத்தக்க விஷயம்தான். முன்பைவிட, இப்போது நிறைய மொழிப் படங்களில் வேலை பார்க்க முடியுது.

நடிகராக ஆரம்பித்த கரியர் ஏன் தொடரவில்லை?

3 வயதிலிருந்து குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன். படத்தின் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை. கோரியோகிராஃபராக 25 வருடம் ஆகுது. மொத்தத்தில் நான் சினிமாவுக்கு வந்து 39 வருடம் ஆகுது. 'அழகன்' படத்தில் 'துடிக்கிறதே நெஞ்சே' பாடலுக்கு ஆடியிருக்கிறேன். 'நீலகிரி', 'வெல்கம் டூ கொடைக்கானல்' போன்ற படங்களிலும் நடிச்சிருக்கேன். 1994-ல் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி, தொடர்ந்து டான்ஸ் மாஸ்டராகவும் வேலை பார்க்கிறேன். ராபர்ட் மாஸ்டரும் நானும் சேர்ந்துதான் 'அழகன்' படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஸ்கூல் லீவ் டைமில்தான் பண்ண வேண்டியிருந்தது. அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனாலதான் 'அழகன்' படத்தில் பாடல் மட்டும் முடிச்சிட்டு வந்துட்டேன்.

நிறைய பின்னணி டான்ஸர்கள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாமல் விலகிவிட்டதாகச் சொல்கிறார்களே?

நல்ல டான்ஸர்கள் எல்லோரும் நல்ல மாஸ்டராக இருக்கணும்னு அவசியம் கிடையாது. மாஸ்டருக்கும் டான்ஸருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. மாஸ்டர் என்பது கிரியேட்டிவ். டான்ஸர் என்பது சொல்வதைச் சரியா செய்வது. இப்போதும், மாஸ்டராக ஏன் பலபேரைப் பார்க்க முடியலைன்னு நினைக்கலாம். நான் மாஸ்டராக வேண்டுமா, டான்ஸராக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுப்பதில்தான், சினிமாவில் அவருடைய இருப்பு எப்படி இருக்கும் என்பதை உறுதிசெய்யும். நான் சொன்ன வேறுபாட்டால்தான் பலபேர் இந்த ஃபீல்டில் நிலைக்க முடியவில்லை.

சொல்லாமலே காதலித்த கதையாமே உங்க காதல்?

ஆரம்பத்தில் நானும் அவரும் எந்த இடத்திலும் காதலிக்கவுமில்லை, சொல்லிக்கொள்ளவுமில்லை. எங்க ரெண்டுபேருக்குமான பொதுவான நண்பர்கள்தான் டான்ஸ் ஆடும்போது, எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகுதுன்னு சொன்னாங்க. அதைச் சொல்லி நான்கு வருடம் ஆகியும் அதைப்பற்றி நாங்க பெருசா எடுத்துக்கல.

ஒருகட்டத்தில், எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும், 'நீங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, செம்ம ஜோடியா இருப்பீங்க. ஏன் நீங்க லவ் பண்ணக்கூடாது'னு சொன்னாங்க. பின்னாடி மிஸ் பண்ணதா ஃபீல் பண்ணுவீங்கனு அவங்க சொன்னப்போ, நாங்களும் யோசிக்க ஆரம்பிச்சோம். எப்போவும்போல பேசிக்கிட்டோம். இப்படியே கொஞ்சநாள் போச்சு. பிறகு, நாங்களே பேசி முடிவு பண்ணி, வீட்டுல சொன்னோம். வீட்டிலும் கிரீன் சிக்னல். எங்க கல்யாணம் ரொம்ப வித்தியாசமானது. வீட்டுல காதலிக்கிறோம்னு சொல்லிட்டு, 13 வருடம் கழிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்

நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து இப்போவரை தனியே எங்கேயும் போனதில்லையாமே?

ஆமாங்க. நாங்கள் லவ் பண்ணும்போதும் எங்கேயும் வெளியே போனதில்ல. தனியா சினிமாவுக்குக்கூட போனது கிடையாது. எப்போவும் எங்ககூட ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி இருப்பாங்க. சொன்னா நம்பமாட்டீங்க. கல்யாணமாகி, நாங்க தனியா போய் பார்த்த படம், 'துப்பாக்கி' மட்டும்தான்

குழந்தை பற்றி?

ஷமந்தகமனி அஷ்விகா. அவங்களுக்கு இப்போ மூன்றரை வயசு ஆகுது. எங்க வீட்டுக் குட்டி தேவதை அவங்க. அஷ்விகா என்றால் ஞானஸ்தானத்தில் இருப்பாங்க. ஷமந்தகமனி என்கிற பெயரை கமல் சார்தான் வைத்தார். இந்தியன் பெயர் மாதிரியே இருக்கட்டும். மார்டனாக பெயர் வேண்டாம்னு சொன்னேன். இந்தப் பெயரை அவர் சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. பெயரே வித்தியாசமா இருந்தது. எனக்கு அது ஓகேவானு கேட்டார். அந்தப் பெயருக்காக கமல் சார் நான்கு நாள்கள் நிறைய இடத்தில் தேடியிருக்கிறார். அந்தப் பெயருக்கான விளக்கம் மற்றும் கதையை நான்கு பக்கத்துக்கு அனுப்பியிருந்தார். என்னை 'ஆழ்வார்பேட்டை ஆண்டவா...' பாடல் வாயிலாக மாஸ்டர் ஆக்கினதே அவர்தான். என் மீது அவருக்கு அளவு கடந்த பாசம் எப்போதும் உண்டு. அவர்தான் என்னைப் பொறுத்தவரை குரு

எனப் புன்னகைக்கிறார் ஷோபி.

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.